நீண்ட நாள் வாழ ஒரு யோஜனை (Post No.3463)

Written by London swaminathan

 

Date: 19 December 2016

 

Time uploaded in London:- 14-43

 

Post No.3463

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

லண்டன் உயர்வாசற் குன்று முருகன் கோவிலின் (LONDON HIGH GATE MURUGAN TEMPLE) திருவாசக விழாவில் பேசுவதற்கு என்னை அழைத்திருந்தார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை 18-12-2016 அந்த விழா நடந்தது. பலர் சொற்பொழிவாற்றினர். மாணவ மாணனவியர் தேவார திருவாசக இன்னிசை விருந்து அளிததனர் என்னுடைய சிற்றுரையின் சுருக்கம் இதோ.

 

 

அன்புடையீர்,

முதற்கண் என் பணிவான வணக்கங்கள்; என்னை இங்கு பேச அழைத்த கோவில் நிர்வாகத்துக்கு முதலிலேயே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வள்ளுவன் சொன்னான் “தமிழா! கொஞ்சமாவது நல்ல விஷயங்களைக் கேள்; அந்த அளவுக்காவவது உனக்கு நன்மை கிடைக்கும்”

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் —-என்றான்.

 

இங்கு பெருந்திரளான மக்கள் கூடி எனக்கு முன்னே பேசிய அறிஞர் பெருமக்களின் உரைகளைச் செவி மடுத்தீர்கள். நானும் சில விஷயங்களைச் சொல்ல விழைகிறேன்.

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற ஆன்றோர் மொழியை நாம் அனைவரும் அறிவோம்.

 

முதலில் ஒரு ரஹசியம். நீங்கள் நீண்ட நாட்கள் வாழ ஒரு ரஹசியத்தைச் சொல்லுகிறார் ரெவெரண்ட் ஜி.யு.போப் (Rev G U Pope):–

 

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு. போப்,இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்ட் நகரைச் சேர்ந்தவர். அவர் 1900 ஆம் ஆண்டில் திருவாசகப் புத்தகத்ததை எப்படி வெளியிட்டார் என்ற அதிசயச் செய்தியை அவரே அப்புத்தகத்தின் முன்னுரையில் எழுதியுள்ளார். இதோ அந்த முன்னுரை:–

 

“இன்று என்னுடைய எண்பதாவது பிறந்த தினம். நான் எழுதி வைத்த குறிப்புகளைப் பார்க்கப் போனபோது நான் 1837 ஆம் ஆண்டில் தமிழ் கற்கத் துவங்கினேன் என்பது தெரிந்தது. நீண்டகாலத்துக்கு தமிழ் அன்னையின் பக்தனாக இருந்தேன்; அது முடிவுக்கு வருகிறது என்றே தோன்றுகிறது. என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான இலக்கியப் படைப்பை சமர்ப்பணம் செய்து இப்பணியை முடிக்கும்போது மிகவும் உணர்ச்சி வசமாகி விட்டேன்.

 

 

 

பல ஆண்டுகளுக்கு முன், நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அப்போது இப்படி ஒரு புத்தகம் வெளியிடும் திட்டம் என் மனதில் இல்லை. ஒரு நாள் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தவுடன், என் கல்லூரித் தலைவருடன் (பாலிலோல் கல்லூரி மாஸ்டர்) நடந்து கொண்டிருந்தேன். எக்களுடைய சம்பாஷனை திடீரென்று தமிழ் வரலாறு, இலக்கியம், தத்துவம் பற்றித் திரும்பியது. நீண்ட உரையாடலின்நடுவே ஒரு இடைவெளி நேரிட்டது. என்னுடைய மாஸ்டர் எப்போதுமே வேகமாகப் பேசக்கூடியவர். திடீரென்று ‘அதை நீ அச்சிட்டே ஆகவேண்டும்” என்றார்.

 

 
நான் 80 வயதுக்காரன் என்ன பதில் சொல்லுவானோ அதையே அவரிடம் சொன்னேன்: மாஸ்டர் நான் என்ன சாகாவரம் வாங்கி வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டீர்களா? இதை வெளியிடத் துவங்கினால் அதை முடிக்க நீண்ட காலம் ஆகும். இப்போது அவர் முகத்தை பார்த்தேன்; அவர் என்னை நோக்கித் திரும்பினார். அவருடைய வெண்

தாடி மீதும் அன்பே உருவான முகத்தின் மீதும் நிலவொளி பட்டொளி வீசிப் பரவியது. அவர் அன்போடு என் தோளின் மீது கைகளைப் போட்டார் — ஒரு நீண்ட பணியை எடுத்துக்கொண்டுவிட்டால் அது முடியும் வரை நீ மரணம் அடைய மாட்டாய். இது நீண்டகாலம் வாழவுள்ள ஒரு வழி! அது நிறைவடையும் வரைக்கும் நீ வாழ்வாய்” என்று சொல்லி முடித்தார்.

 

 

 

இதை அவர் சொன்னபோது எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் சொன்ன சொற்கள் மட்டும் என் மனதில் அசரீரி போல எதிரொலித்துக் கொண்டே இருந்தது. நான் களைபுற்றபோதெல்லாம் அந்த ஆரூடச் சொற்கள் எனக்கு உத்வேகம் ஊட்டின. அவர் இப் பூவுலகில் இருந்து மறைந்துவிட்டார். ஆனால் அவர் சொன்ன காரியம் நிறைவேறிவிட்டது.

 

 

அந்த அன்பான ,சிறந்த, பொறுமை மிக்க பெஞ்சமின் ஜோவெட் அவர்களை இன்று நன்றியுடன் நினைவுகூறுகிறேன். இது எல்லாம் அவருக்கே சமர்ப்பணம். என்னுடைய நன்றியையும் மரியாதையையும் தெரிவித்து வணங்குகிறேன்”.

 

(இது போப் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதை நான் மொழிபெயர்த்தது)

 

நமது வீடுகளில் கூட நாம் பார்த்திருக்கிறோம்; வீட்டில் வயதான கிழவன் கிழவி — தாத்தா, பாட்டி இருப்பார்கள் அவர்கள் நான் என் பேரப் பிள்ளையின் கல்யாணத்தைப் பார்க்கவேண்டும் என்பர்; அல்லது பேரக் குழந்தை பிறப்பதைப் பார்க்க வேண்டும் என்பர். அந்த்த நல்ல காரியம் நடக்கும்வரை அவர்கள் இறக்க மாட்டார்கள். நடந்தவுடன் திடீரென்று ஒரெ மாதத்தில் இறந்துவிடுவர். ஆகையால் உங்கள் மனதிலும் நல்ல ஒரு பெரிய லட்சியம் இருக்குமானால் நீண்ட காலம் வாழலாம். இந்த ரஹசியத்தை நீங்களும் புரிந்து கொண்டு பின்பற்றுங்கள்; உங்கள் வாழ்க்கையில் மகத்தானதொரு காரியத்தை முன்னே வைத்துக் கொண்டால இன்று முதல் இன்னும் நூறு ஆண்டுகள் நீங்கள் வாழ்வீர்கள். பன்னிரு திருமுறையில் மட்டும் 18,000 பாடல்கள் உள்ளன. இது தவிர தாயுமானவர், பட்டினத்தார்,என்று ஆயிரக்கணக்கான அடியார் எழுதிய நூல்கள் உள. இன்று முதல் அவை அனைத்தையும் படித்துவிட வேண்டுமென்று உறுதி பூணுங்கள். நீங்கள் நூறாண்டுக் காலம் வாழ்வீர்கள்

 

திரு வாசகத்தில் மட்டும் 51 பாடற் தொகுப்புகள், 656 பாடலகள் 3000 வரிகளுக்கு மேல் உள்ளது. 74 இடங்களில் மாணிக்கவாசக ர் தன்னை நாயேன் என்று அழைத்துக் கொள்கிறார். உண்மையில் அவர் உயரிய நிலை எய்திய பெரியார். அவர் நம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கே—- நம்மைப் போன்றவர்களை எண்ணியே—- நாய் என்று சொல்லிவைத்தார்.

 

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர்

மகிமை இல்லை-திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்—- என்று பாரதி சொன்னான். அப்படி வெளி நாட்டாரும் வணக்கம் செய்த புத்தகம் திருவாசகம் என்பது போப் அவர்களின் வாழ்க்கையிலிருந்து தெரிகிறது.

போப் அவர்கள் 63 ஆண்டுகளுக்குத் தமிழ் படித்தார்! என்ன அதிசயமான விஷயம் பாருங்கள்; நம்மில் எத்தனை பேர் 63 ஆண்டுகளுக்குத் தமிழ் படிப்போம் அல்லது படித்தோம்; எண்ணிப்பாருங்கள்.

 

இதன் பிறகு ஓம் பற்றிய திருவாசககக் குறிப்புகளைச் சொன்னேன். அது தமிழ் இலக்கியத்தில் ஓம்காரம் என்ற கட்டுரையில் வந்த விஷயம் என்பதால் இங்கே மீண்டும் தரவில்லை. (சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கட்டுரையில் ஓம்கார விளக்கம் காண்க)

 

எனது உரையில் 2 திருவாசகப் பாடல்களை எடுத்துக் கொண்டு இரண்டு கதைகளைச் சொன்னேன்; அதை நாளை காண்போம்.

—தொடரும்

 

Leave a comment

2 Comments

  1. ‘உயர்ந்த லட்சியம் இருந்தால் நீண்ட நாள் வாழலாம்’ . இதை எப்படி நம்புவது? நம் கண்ணெதிரே இப்படி நடந்த நிகழ்ச்சி ஏதாவது உண்டா?
    ஆம் இருக்கிறது.
    1954 ஆவடி காங்கிரஸில் “Socialistic Pattern of Society” கொள்கையை ஏற்றுக்கொண்டது முதல் நேருவின் அரசியல் போக்கை தனியொருவராகவே எதிர்த்துவந்தார் ராஜாஜி. இந்த சோஷலிசம் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும்; பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா ராஜ்யத்திற்கு வழிவகுக்கும்; லஞ்ச-ஊழலைப் பெருக்கும் என்றெல்லாம் எச்சரித்துவந்தார். பிறகு 1960ல் வேறு சில தலைவர்களுடன் சேர்ந்து சுதந்திராக் கட்சியைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 81+. வாரம் தோறும் “ஸ்வயராஜ்யா” பத்திரிகையில் தீவிரமாக எழுதிவந்தார்; பல கூட்டங்களில் பேசியும் வந்தார். 1972 டிசம்பரில் [வயது= 93+ ] மருத்துவமனையில் சேரும்வரை எழுதிவந்தார். டிசம்பர் 25ல் பூத உடல் நீத்தார்.

    ராஜாஜி இருந்தவரையில் அவருடைய வாழ்க்கைச் சரிதத்தை எழுத யாரையும் அனுமதித்ததில்லை. கல்கி போன்றவர்கள் சில சம்பவங்களைப்பற்றி எழுதினார்கள். ஆனால் முழு வாழ்க்கை வரலாறு அல்ல.
    50களில் ராஜாஜியைச் சந்தித்த பிரிடிஷ் தொழிற்கட்சிப் பிரமுகரும் ஆசிரியருமான மோனிகா ஃபெல்டன் [Monica Felton ] “I Meet Rajaji” என்ற புத்தகம் எழுதினார். [1962] இவர் ஒரு அபூர்வ தகவலைச் சொன்னார்.. நாட்டின் நலனில் இருந்த தீவிர கவலையினால் அவருக்கு ஒரு புது உத்வேகம் வந்ததாகத் தான் கண்டதாகச் சொன்னார். ராஜாஜிக்கு மீண்டும் தலையில் புதிய முடி வந்தது, அது இளைஞர்களுடைய தைப்போலவே அடர்த்தியாக-முரடானதாக இருந்தது என்று சொன்னார். ஒரு பெரிய-உயர்ந்த லக்ஷியம் நீண்ட ஆயுளைத் தருவதோடு மனவலிமையுடன் மூப்பையும் மீறிய உடல் வலிமையையும் தரும் போலும்!

  2. Thanks. Lot of new information.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: