Written by London swaminathan
Date: 21 December 2016
Time uploaded in London:- 20-13
Post No.3470
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
இந்துக்கள் கருணை மிகுந்தவர்கள்; குறிப்பாக செடி கொடிகளிடத்திலும் பறவை, விலங்குகளிடத்திலும் பேரன்பு கொண்டவர்கள். முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி மன்னன்; மயிலுக்குப் போர்வை ஈந்தான் பேகன் என்னும் மன்னன். சிவபெருமான் சுவீகார புத்ரனாக எடுத்த தேவதாரு மரத்துக்கு பார்வதி தங்கக் குடங்களிலிருந்து தண்ணீர் வார்த்தாள்; இது குமரக் கடவுளுக்கு அவள் தாய்ப்பால் கொடுத்தது போல இருந்தது என்று காளிதாசன் ரகு வம்சத்தில் (2-36/39) கூறுகிறான். மேகதூதம் என்னும் நூலில் தனது காதலி ஒரு மந்தார மரத்தை மகன் போல வளர்ப்பதைக் கண்டு வா என்று மேகத்திடம் யக்ஷன் கூறுவதாக கவி புனைந்துள்ளான்.
பாரதியாரோ “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று சொல்லிவிட்டு மலையையும் கடலையும் கூட தங்கள் கூட்டம் என்பார்.
சங்க இலக்கிய நூலான நற்றிணையில் ஒரு பெண் ஒரு புன்னை மரத்தை அன்போடு சகோதரி போலக் கருதி அதற்கு பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்த பாடல் உள்ளது (நற்றிணை 172).
சாகுந்தல காவியத்தில் சகுந்தலை என்ற கானகப் பெண் செடிகொடிகளுக்க்ப் பெயர் சூட்டுவது, செடிக்குத் தண்ணீர் ஊற்றாமல் சாப்பிடப் பாகாமல் இருப்பது, ரிஷி முனிவர்கள் செடி கொடி மரங்களைப் புதல்வர்களாகப் பாவிப்பது ஆகியவற்றை காளிதாசன் பாடுகிறான்.
விஷ மரமானாலும் கூட மனிதர்கள் வெட்ட மாட்டார்கள் என்று காளிதாசன் குமார சம்பவ காவியத்தில் பாடுகிறான் (2-55).
இதையே மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் சொல்லுவது ஒப்பிடற்பாலது:
விச்சதின்றியே விளைவு செய்குவாய்
விண்ணு மண்ணக முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
புலையனேனையுன் கோயில் வாயிலிற்
பிச்சனாக்கினாய் பெரிய அன்பருக்
குரியனாக்கினாய் தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரமாயினுங் கொலார்
நானும் அங்கனே யுடைய நாதனே
–திருச்சதகம், திருவாசகம், பாடல் 96
பொருள்:-
விதை இல்லாமலே செடிகொடிகளை வளரச் செய்பவன் நீ; விண்ணுலகம், மண்ணுலகம் ஆகியவற்றை நிலைபெறச் செய்து, உரிய காலத்தில் அவைகளை, அழிப்பவனும் நீயே; புலையனைப் போன்ற என்னையும் உன் கோவிலின் முன்னே வைத்துப் பித்தனாக்கினாய் —அடியார்களுக்கு உரியவானாக ஆக்கிவைத்தாய். உலகத்தார் தாமே வளர்த்த மாமரங்கள் நச்சுத்தனமை எய்தினாலும் கொல்ல மாட்டார்கள்— என்னை அடிமையாக உடைய தலைவனே! யானும் அத்தகையேன் ஆவேன்.
“மரம் சா மருந்தும் கொள்ளார்”– என்று தமிழ் நூல்கள் பகரும். மருந்தே வேண்டினும் அந்த மரம் சாகும் அளவுக்கு அதன் பட்டைகளைத் தோலுரிக்க மாட்டார்கள்.
மாணிக்க வாசகரும் காளிதாசனும் ஒரே கருத்தைப் பாடி இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை நிலவுவதற்கு எடுத்துக் காட்டு.
மரங்களை வெட்டாதே என்று காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடலும் புறநானூற்றில் (57) வருகிறது:-
கடிமரம் தடிதல் ஓம்பு – நின்
நெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாகவே– என்கிறார் புலவர்.
மரங்கள் வாழ்க! நச்சு மரங்களும் வாழ்க!!
Please read my earlier posts on Kalidasa:
1.Gem stones in Kalidasa and Tamil Sangam Literature
2.Holy River Ganges in Kalidasa and Sangam Tamil Literature
3.Gajalakshmi in Kalidasa and Sangam Tamil Literature
4.Sea in Kalidasa and Sangam Tamil Literature
- Bird Migration in Kalidasa and Tamil literature
6.Hindu Vahanas in Kalidasa and tamil literature
7.Amazing Statistics on Kalidasa
8.Kalidasa’s age: Tamil works confirm 1st Century BC
9.சங்கத்தமிழ் இலக்கியத்தில் காளிதாசன் உவமைகள்
- காளிதாசனின் நூதன உத்திகள்: தமிழிலும் உண்டு
11. Lord Shiva and Tamils adopted Trees! (Posted on 6 July 2013)
12. சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள்- சுவீகார புத்ரர்கள்! (Posted on 6 July 2013)
–Subham–