5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு (Post No. 3487)

Written by S NAGARAJAN

 

Date: 27  December 2016

 

Time uploaded in London:-  5-31 AM

 

Post No.3487

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை

 5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு!

 

 

ச.நாகராஜன்

 

“எகிப்தில் உள்ள பிரமிடுகளைத் தவிர அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாலும் செதுக்கப்பட்ட கற்களாலும் சிற்பங்களாலும் முப்பரிமாண சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன” – எகிப்திய அகழ்வாராய்ச்சித் தகவல்

 

  உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று எகிப்திய நாகரிகம் என்றும் எகிப்தில் உள்ள பிரமிடுகள் அபூர்வ சக்தி வாய்ந்தவை என்பதையும் பறைசாற்றி பல நூறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

 

பெரும் நிபுணர்களும் ஆய்வாளர்களும், சரித்திர ஆசிரியர்களும் பிரமிடின் சக்தியைப் புகழ்ந்து அதிசயிக்கின்றனர். நெபோலியன் உள்ளிட்ட மாவீரர்கள் பிரமிடின் அமானுஷ்ய சக்தியை நேரில் சென்று அனுபவித்து வியந்திருக்கின்றனர்.

 

 

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எகிப்தில் 118 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து எகிப்தில் அகழ்வாராய்ச்சிப் பணி நடந்து கொண்டே இருக்கிறது.

 

இதன் தொடர்ச்சியாக, இப்போது எகிப்திய வரலாற்றில் புதிய ஒரு சுவையான செய்தி சேர்ந்துள்ளது.

 

5000 வருடங்களுக்கு முந்தைய எகிபதிய நகரம் ஒன்றின் சிதிலமடைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை உலகத்தின் அறிவியல் பத்திரிகைகள் நவம்பர் 2016 இறுதி வாரத்தில் அறிவித்துள்ளன!

 

 

பண்டைக்காலத்தில் இருந்த ஒருங்கிணைந்த பிரம்மாண்டமான எகிப்தில் அபிடாஸ் (Abydos) என்ற பகுதியில் உள்ள இந்த நகரம் பாரோக்களின் ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று மஹம்மதி அஃபிபி என்ற எகிப்திய அரசின் தலைமை அகழ்வாராய்ச்சியாளர் தெரிவித்திருக்கிறார். இவரது அறிக்கை அராபிய மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

இந்த நகரின் கட்டிடங்கள்  களிமண்ணாலான செங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன.

 

கட்டிடங்களின் அருகே ஒரு கல்லறையும் இருக்கிறது. இங்கு ஒரு மனிதனின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 

 

 

இந்தக் கல்லறையில் பாரோக்கள் புதைக்கப்படவில்லை என்றும் அபிடாஸை ஆண்ட முந்தைய கால  மன்னர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அபிடாஸை ஆண்ட ஆஹா என்ற மன்னர் ஒரு பிரம்மாண்டமான வளாகத்தைக் கட்டியுள்ளார். இங்கு அவர் வேலையாட்களுக்கான தனி கல்லறை ஒன்றையும் அமைத்துள்ளார்.

 

 

அத்துடன் அந்தக் காலத்தில் பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் களியாட்ட நிகழ்ச்சிகளில் களிப்பூட்டி உற்சாகப்படுத்த குள்ளர்கள் பங்கேற்பர். அவர்களுக்கும் தனி இருப்பிடங்களை ஆஹா அமைத்துத் தந்துள்ளார்.

சிங்கங்களுக்கும் நாய் உள்ளிட்ட இதர மிருகங்களுக்கும் தனி இருப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 

 

ஆஹா மன்னரின் கல்லறை கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்லறையில் காணப்படும் ஏராளமான மிருகங்களின் உடல்கள் அவர் இறந்த பிறகு அவருடன் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

இதில் முக்கியமான அம்சம் இந்த நகரின் பழமை குறித்தது தான். சில நிபுணர்கள் இந்த நகரம் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் என்று கூறுகின்றனர்.

 

    ஆனால் அராபிய மொழியில் இருந்த அறிக்கையை மொழிபெயர்ப்பு செய்யும் போது தவறுதலாக இது 7000 ஆண்டு பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று  கருதும் சில நிபுணர்கள் எகிப்திய அரசு ஆங்கிலத்தில் அறிக்கையை வெளியிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  அத்துடன் இந்த நகரம் எவ்வளவு பெரியது, அதன் பரப்பளவு என்ன போன்ற தகவலை எல்லாம் கூட எகிப்திய அரசு வெளியிடவில்லை என்றும் உலக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறி அதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சிப் பிரிவிற்குக் கடுமையான பணத்தட்டுப்பாடு இருப்பதால் அது ஊடகங்களுக்கு சரியான முறையில் அறிக்கையைத் தர முடியவில்லை என்பதும் ஒரு முக்கியமான விஷயம்.

 

உலகின் மிகப் பழமையான நகரம் அபிடாஸ் தானா என்பதை ஆராய விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். அப்படி இந்த நகரம் மிக மிகப் பழமையானது என்று நிரூபிக்கப்பட்டு விட்டால் அது உலக சரித்திரத்தில் ஒரு முக்கியமான திருப்பம் தரும் செய்தியாக அமையும்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

ஃபாஸில்ஸ் (FOSSILS) எனப்படும் படிமப்பாறைகள், பழைய கால மிருகங்களின் உடல்களே என விஞ்ஞான உலகம் 18ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது.

 

இந்தத் துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் இதை ஆராய்ந்தவர் விஞ்ஞானி ஜோஹன் பெரிஞ்சர் (Johann Beringer).  அவர் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில்   (University of Wurzburg) பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

 

ஃபாஸில்ஸ் அனைத்துமே கடவுளால் படைக்கப்பட்டு தெய்வீக காரணங்களுக்காக பூவுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் திடமாக நம்பினார்.

 

அவருடைய படிமப்பாறை பைத்தியத்தைப் பற்றி நன்கு உணர்ந்த அவரது மாணவர்கள் ஆங்காங்கு தாங்களே உருவாக்கிய ஃபாஸில்ஸை புதைத்து வைக்க ஆரம்பித்தனர்.இதில் வேடிக்கை என்னவென்றால் சிரிய, பாபிலோனிய, ஹிப்ரூ எழுத்துக்களுடனெல்லாம் இவை கிடைக்க ஆரம்பித்தன.

 

பெரிஞ்சருக்கோ ஒரே உற்சாகம்.

 

அனைத்து ஃபாஸில்ஸையும் அட்டவணைப்படுத்தி ஒரு பெரிய புத்தகத்தை 1726ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார்.

ஒரு நாள் அவர் பெயர் கொண்ட ஒரு ஃபாஸில்ஸே கிடைத்தது.

 

அப்போது தான் அவருக்கு சந்தேகம் வந்தது.

அவர் எழுதிய புத்தகத்தைப் பலரும் கிண்டல் செய்ய ஆரம்பிக்கவே அனைத்துப் புத்தகங்களையும் தானே திருப்பிப் பெற்றுக் கொண்டார். இந்தப் புத்தகத்தின் பிரதி அரிதாகிப் போய் விடவே இதை அரிய பொருள்கள் சேகரிப்போர் தேடிக் கண்டுபிடித்து அதிக விலைக்கு வாங்கினர்.

 

மனம் நொந்து போன பெரிஞ்சர் தன்னை கேலி செய்பவர்கள் மீது பெரிய வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.

அவர் இறந்த பிறகு அவரது உறவினர் ஒருவர் அந்தப் புத்தகத்தை மீண்டும் அச்சடித்து வெளியிட்டு பெரிய லாபத்தை ஈட்டினர்.

1963ஆம் ஆண்டு பெரிஞ்சரைப் பற்றி ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர் மெல்வின் ஈ. ஜான் என்பவர் உண்மையில் அவரது மாணவர்கள் இந்த தகாத வேலையில் ஈடுபடவில்லை என்றும் பெரிஞ்சரின் புகழைப் பொறுக்க மாட்டாத அவர்கள் சகாக்களே இந்த வேலையில் பலரை ஈடுபடுத்தியதாகவும் கண்டு பிடித்துள்ளார்.

 

ஆனாலும் என்ன, இறக்கும் வரையில் அவர் கேலிக்குத் தான் ஆளாக வேண்டியிருந்தது.

*******

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: