Research Article Written by London swaminathan
Date: 1 January 2017
Time uploaded in London:- 10-18 am
Post No.3504
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
பெண்களை குடும்ப விளக்காகப் போற்றுவதை சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் காண்கிறோம். இது உலகில் வேறு எந்தப் பழைய கலாசாரத்திலும் நாகரீகத்திலும் காணக்கிடைக்காத அரிய கொள்கை. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாதான் உலகிலேயே பெரிய நாடு. அந்தக் காலத்திலேயே இமயம் முதல் குமரி வரை இப்படி ஒரு உயரிய சிந்தனையைக் காணுகையில் ஆரிய-திராவிடப் பிரிவினை வாதம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடும்.
இந்துக்களுக்கு விளக்கு என்பது புனிதச் சின்னம்; மங்களச் சின்னம். பழங்காலத்தில் விளக்கு என்பது இல்லாமல் எவரும் வாழ்ந்திருக்க முடியததுதான் ஆயினும் அவர்கள் எல்லாம் இந்துக்கள் போல விளக்குக்குப் புனிதத்துவததைக் கொடுக்கவில்லை. தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் மகனைக் குல விளக்காகவும் மனைவியைக் குடும்ப விளக்காவும் சித்தரிக்கின்றன.
தினமும் மாலையிலும் காலையிலும் கடவுள் படத்துக்கு முன் விளக்கேற்றி வனங்குவர். சிலர் அதற்காகவுள்ள விசேஷ பிரார்த்தனைப் பாடல்களைச் சொல்லுவர். தீட்டுக் காலத்தில் விளக்கைத் தொட மாட்டார்கள். அப்போது மட்டும், வீட்டிலுள்ள சிறுவர்களோ ஆண்களோ அந்த விளக்கேற்றும் பணியைச் செய்வர்.
பெரிய ஆலயங்களில் நடைபெறும் விளக்கு பூஜைகளில் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் பங்கேற்பர். பெரிய நிகழ்ச்சிகளை சுமங்கலிகளைக் கொண்டு விளக்கேற்றித் துவக்கி வைப்பர்.
விளக்கு பற்றி அவர்களுக்குப் பல்வேறு நம்பிக்கைகள் உண்டு. விளக்கு திடீரென்று அணைந்தாலோ. கீழே விழுந்தாலோ அதை அப சகுனமாகக் கருதுவர். யாரேனும் இறந்தால் அந்த அமங்கலக் காட்சியைக் காட்டாமல் ஒரு விளக்கு அணைந்ததாகத் திரைப்படங்களில் காட்டுவர்.
காளிதாசனும், மனுவும், வியாசரும், சங்க இலக்கியப் புலவர்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுவதை ஒப்பிட்டு மகிழ்வோம்:-
புறநானூற்றில் (314) புலவர் ஐயூர் முடவனார்,
மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்
முனைக்கு வரம்பு ஆகிய வென்வேல் நெடுந்தகை
பொருள்:- இல்லத்தில் ஒளிசெய்யும் விளக்கைப் போல் தன் மாண்பால் விளக்கத்தைச் செய்யும் ஒளியுடைய நெற்றியுடையவளுக்குக் கணவனும்
ஐங்குறுநூற்றில் புலவர் பேயனார்
ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர்போல
மனைக்கு விளக்காயினள் மன்ற கனைப்பெயல்
பூப்பல அணிந்த வைப்பின்
புறவணி நாடன் புதல்வன் தாயே
ஐங்குறுநூறு 405
பொருள்: விளக்கு தலைவன் மனைக்கும் அதன் கண் நின்று எரியும் செஞ்சுடர் தலைவிக்கும் உவமை ஆயின.
அகநானூற்றில் (184) புலவர் மதுரை மருதன் இளநாகனார்
கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிது ஆகின்றால்; சிறக்க நின் ஆயுள்!
பொருள்:- தெய்வத்தனமை பொருந்திய கற்புடன் குடிக்கு விளக்கமான மகனைப் பெற்ற புகழ்மிக்க சிறப்பை உடைய தலைவிக்கே அன்றி எனக்கும் இனிமையைத் தருகின்றது.உன் ஆயுள் ஓங்குக (தீர்க்காயுஸ்மான் பவ:).
இதே கருத்துகளை சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசனும், மனுவும், மஹாபாரத வியாசனும் செப்புவதைக் காண்போம்:-
மனுதர்ம ஸ்லோகம்
வீட்டிலுள்ள அதிர்ஷ்ட தேவதைகளுக்கும், குடும்பத்தின் விளக்குகளாக ஒளிரும் பெண்களுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை. அவர்கள் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்கள்; அவர்கள் புதல்வர்களைப் பெற்றுத் தருவதால் இறையருள் பெற்றவர்களாவர் — மனு 9-26
மனுவைப் போல பெண்களைப் போற்றும் நூல் உலகில் வேறு இல்லை! பெண்களை மதிக்காதோர் குடும்பம் வேருடன் சாயும் என்ற மனுதர்ம ஸ்லோகம் குறிப்பிடத்தக்கது.
காளிதாசன் புகழுரை
ரகுவம்ச ப்ரதீபேன தேனாப்ரதிமதேஜஸா
ரக்ஷாக்ருஹகதாதீப: ப்ரத்யாதிஷ்டா இவாபவன் ( ரகு.10-68)
ரகுவின் வம்சத்தை விளக்குகின்ற நிகரற்ற ஒளியுடைய அந்த ராமனால் பிரஸவ அறியில் இருந்த விளக்குகள் மங்கியது போல இருந்தன.
ரகுவம்ஸ ப்ரதீபேன என்று ராமன் போற்றப்படுகிறார்.
ரகுவம்ச காவியம் 6-45ல் சுசேனன் என்ற சூரசேன மன்னன் தாய், தந்தையரின் வம்சங்களுக்கு விளக்காகத் திகழ்ந்ததால் வம்ச தீபம் என்று போற்றப்படுகிறான்.
ரகுவம்சத்தில் 8-38 பாடலில் இந்தக் காலத் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியை நினைவூட்டுகிறான் காளிதாசன்:
அஜன் என்ற மன்னனின் மனைவி இந்துமதி திடீரென்று மயங்கி விழுந்தாள். அவரது அருகில் இருந்த அஜனையும் அவள் விழ்த்தினாள். இந்துமதி உடனே இறந்தாள். இதை வருணிக்கும் காளிதாசன், இந்துமதி விளக்கின் சுடருக்கும், அத்துடன் சொட்டிய எண்ணைத் துளி அஜனுக்கும் உவமிக்கப்பட்டன.
பிள்ளைகளை ஒளிக்கும் விளக்கிற்கும் ஒப்பிடுவது பாரதம் முழுதும் இருந்தமைக்கு ஒரு சான்று:
தசரதனுக்கு துயரம் என்னும் இருட்டைப் போக்கும் ஒளி (ஜோதி) என்ற புதல்வன் இல்லை (ரகு 10-2)
ஹிமவானுக்கு பார்வதி குழந்தையாகப் பிறந்தாள்.ஒரு விளக்கு தூண்டப்பட்டு மேலும் ஒளி பெறுவது போலவும், இருண்ட வானத்தில் ஆகாய கங்கை (MILKY WAY ) எனப்படும் நட்சத்திர மண்டலம் ஒளி வீசுவது போலவும் ஹிமவானுக்கு சிறப்பும் புனிதமும் கூடின. (குமார 1-28)
ஒரு யோகியின் மன நிலையை வருணிக்கும்போது சலனமற்ற நீர் போலவும், காற்றில்லாத இடத்திலுள்ள தீபம் போலவும் விளங்கியது என்றும் காளிதாசன் வருணிப்பான் (குமார 3-48)
ஒரு புயல்காற்றில் விளக்கு சுவாலை எப்படி தாக்குப்பிடித்து நிற்காதோ அப்படி சுதர்சனனும் நோயின் வேகத்துக்கும் மருத்துவர்களின் மருந்துக்கும் கட்டுப்படாமல் இறந்தான் (ரகு.19-53)
ஒரு விளக்கிலிருந்து ஏற்றப்பட்ட மற்றொரு விளக்கு எப்படி ஒளியில் வித்தியாசப்படாதோ அப்படி அஜனும் அவன் தந்தையின் குணத்திலும் வீரத்திலும் சிறிதும் மாறுபடவில்லை (ரகு.5-37)
இவ்வாறு ஏராளமான விளக்கு உவமைகள் பிற்கால இலக்கியங்களிலும் கிடைக்கின்றன. பாரதம் முழுவதும் விளக்கு முதல் யானை வரை ஒரே விதமான உவமைகள், கற்பனைகள் இருப்பது இது ஒரே பண்பாடு, இந்த மண்ணில் உருவான பண்பாடு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை அன்று என்று காட்டுகின்றன.
மற்றவகை விளக்குகள்
ஒளிவிடும் தாவரங்கள் பற்றியும் நாகரத்னம் பற்றியும் குறிப்பிட்டு அவை விளக்குகளாகத் திகழ்ந்தன என்பான் காளிதாசன். நாகரத்னம் பற்றித் தமிழ் இலக்கியத்தில் நிறைய பாடல்கள் உண்டு. ஆயினும் ரகு வம்சத்திலும் (4-75) குமார சம்பவத்திலும் (1-10) உள்ள ஒளிவிடும் தாவரங்கள் பற்றிக் கிடையாது. ஒருவேளை மரங்களில் அடர்த்தியாகத் தங்கும் மின்மினிப் பூச்சிகள இப்படி ஒளிவிடும் தாவரங்களாகத் தோன்றியிருக்கலாம். இதே போல ஞான தீபம் பற்றி பகவத் கீதையிலும் ஆழ்வார், நாயன்மார் பாடல்களிலும் காணலாம்.
-சுபம்–
You must be logged in to post a comment.