Written by S NAGARAJAN
Date: 1 January 2017
Time uploaded in London:- 5-08 AM
Post No.3503
Pictures are taken from different sources; thanks.
பாக்யா வார இதழில் வெளி வந்துள்ள கட்டுரை
வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை!
ச.நாகராஜன்
மாவீரனான சத்ரபதி சிவாஜிக்கு வியட்நாமின் மிகப் பெரிய நகரமான ஹோ சி மின் நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டிருக்கிறது என்ற செய்தி நம்ப முடியாத அதிசயமான செய்தி தானே!
என்றாலும் அது உண்மை தான்!
சைகோன் என்று பழைய நாட்களில் அழைக்கப்பட்ட இந்த நகரம் புரட்சி வீரன் ஹோசிமின் பெயரால் இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.
சத்ரபதி சிவாஜி மஹாராஜா வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தைத் தன் சிறு படையினால் கதி கலங்க அடித்தார். இதற்கான காரணம் அவரது புதிய முறையிலான போர் உத்திகள் தாம்! சிறிய தொகுதிகளாக உள்ள படைவீரர்களைக் கொண்ட படைப்பிரிவுகளைக் கொண்டு அவர் நடத்திய தாக்குதல் முறைக்கு கொரில்லா தாக்குதல் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஔரங்கசீப்பின் மாபெரும் படை அலறியது. ஒரு பெரும் வெற்றியைப் பெற்ற சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிப் புகழ் பெற்றார்.
வியட்நாமில் பலம் பொருந்திய அமெரிக்க ராணுவம் நவீன சாதனங்களுடன் வியட்நாமியர்களைத் தாக்கிய போது ஹோசிமின்னுக்கு சற்று திகைப்பாக இருந்தது.
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இதே போன்று வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தின் படைகளை எதிர் கொண்டு வெற்றி பெற்ற சிவாஜி மஹராஜின் போர்த் தந்திர முறைகள் ஹோசிமின்னின் கவனத்திற்கு வந்தது.
அதே முறைகளை அவர் பின்பற்றவே அமெரிக்க ராணுவம் அதிர்ந்து போனது.
சுமார் இருபது ஆண்டுகள் நடை பெற்ற போரில் க்டைசியாக அது பின் வாங்கியது. 1975ஆம் ஆண்டு வியட்நாம் வெற்றி பெற்றது.
தனக்கு இந்த வெற்றியை வாங்கித் தந்தது மாவீரன் சிவாஜியே என்று ஹோசிமின் நம்பினார். ஆகவே அவரை கௌரவிக்கும் வண்ணம் ஹோசிமின் மாவீரனுக்கு குதிரை மீது அமர்ந்த நிலையிலிருக்கும் சிலையை ஹோசிமின் நகரில் நிறுவினார்.
இன்று அந்த சிலை நிறுவியிருக்கும் இடம் ஹோசிமின் நகருக்கு வருகை புரியும் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய இடமாகத் திகழ்கிறது.
வியட்நாமிய மக்கள் வெற்றியைப் பெற தங்களுக்கு வழி காட்டிய வீர சிவாஜியைப் பெரிதும் போற்றுகின்றனர்.
வட வியட்நாமின் பாதுகாப்பு மந்திரி மேடம் பின் (Madame Binh) 1977ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது பாதுகாப்பு மந்திரியாக இருந்த ஜகஜீவன் ராம் அவரை வரவேற்றார். வெளிநாட்டு மந்திரிகள் விஜயம் புரியும் இடமாக இருக்கும் ராஜ் காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு அவரை அழைத்துச் சென்றார். பின்னர் குதுப்மினார், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்கள் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் அவருக்கு எடுத்துரைக்க அவரோ தனக்குப் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஒன்று இருக்கிறது என்று கூறினார்
‘சத்ரபதி சிவாஜி மஹராஜின் சமாதி எங்கு உள்ளது, அங்கு செல்ல வேண்டும்’, என்றார் அவர்
சத்ரபதி சிவாஜி மஹராஜின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டுமென்ற தனது விருப்பத்தை இந்திய அரசுக்கு அவர் தெரிவித்த போது அதிகாரிகளுக்குச் சற்று வியப்பு ஏற்பட்டது. சிலையின் உயரத்திற்கு அவரைக் கொண்டு செல்ல ஒரு கிரேன் வேண்டும்.
மற்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமே!
ஏன் வீர சிவாஜிக்கு அவர் சிலை அணிவிக்க விரும்புகிறார் என்று கேட்ட போது அவர் அமெரிக்கர்களுக்கு எதிரான எங்கள் போரில் வியட்காங் ராணுவ வீரர்கள் சிவாஜியின் வீர கதையைச் சொல்லி மகிழவது வழக்கம் என்றும் அவ்ரது ராணுவ தளபதிகள் முகலாய சாம்ராஜ்யத்தைக் கதிகலங்க அடித்ததைச் சொல்லி உத்வேகம் பெறுவது வழக்கம் என்றும் அதனாலேயே தாங்கள் வெற்றி பெற முடிந்தது என்றும் விளக்கமாகக் கூறினார்.
அத்தோடு கொரில்லா போர்முறையைக் கண்டு பிடித்தவர் வீர சிவாஜியே என்று கூறிய அவர் இதே முறையைத் தான் பெடல் காஸ்ட்ரோ கியூபாவில் அமெரிக்க ராணுவத்தினரை எதிர்கொள்ளக் கையாண்டார் என்றும் கூறினார்.
அவரிடம் சிவாஜியின் சமாதி மஹராஷ்டிரத்தில் ராய்கட்டில் உள்ளது என்று கூறிய அதிகாரிகள் அவரை அங்கு அழைத்துச் சென்றனர்.
சமாதியைச் சுற்றி வந்து வணங்கிய அவர் அங்கு கீழே இருந்த மண்ணில் கொஞ்சம் எடுத்துப் பொட்டலத்தில் மடித்து வைத்துக் கொண்டார். அந்த மண்ணைத் தன் தலையிலும் இட்டுக் கொண்டார்.
வியப்படைந்த நிருபர்கள் அதற்கான காரணத்தைக் கேட்ட போது, மாவீரன் பிறந்த மண் இது; இந்த மண்ணை எங்கள் நாட்டில் தூவினால் அங்கும் இவர் போன்ற மாவீரர்கள் தோன்றுவார்கள் என்று பதிலளித்தார்.
மிலிந்த் காட்கில் என்பவர் கொரில்லா உத்தியை போர்களின் பயன்படுத்துவதைப் பற்றி ஒரு சுவையான புத்தகத்தை எழுதியுள்ளார். ராணுவம் பற்றி எழுதும் பத்திரிகையாளரான இவர் எப்படி சத்ரபதி சிவாஜியின் போர்முறையை வியட்நாமியர் பயன்படுத்தி அமெரிக்கர்களை வெற்றி கொண்டனர் என்பதை விவரித்துள்ளார்.
சிவாஜியின் முடிசூட்டு விழாவைப் பற்றி ஒரு ஆங்கிலேயர் மூன்று மாத காலம் ராய்கட் கோட்டையில் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
சிவாஜியின் மகுடாபிஷேகம் பற்றிய செய்திகள் சுவையானவை.
சிவாஜியின் சிம்மாசனம் 32 மணங்கு தங்கத்தால் செய்யப்பட்டது. ஒரு கோடியே நாற்பது லட்சம் ‘ஹண்’ (மராட்டிய பணம்) செலவழித்து முடிசூட்டு விழா நடைபெற்றது.
சிவாஜி அரியணை ஏறியதும் வைரக்கல் பதித்த பொன் தாம்ரை மலர்களையும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த வேறு பல மலர்களையும் அங்கே கூடியிருந்தோரிடையே வாரி வழங்கினார்.
சமீபத்தில் மணமாகி இருந்த 16 சுமங்கலிகள் அரியணையில் அமர்ந்த மாவீரனுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தார்கள்.
வேத மந்திரங்களை முறையாக் அந்தணர்கள் ஓத ‘ஜய் சிவாஜி’ என்ற கோஷம் வானைப் பிளந்தது. சிவாஜியின் ராஜகுருவான் காகபட்டர் சிம்மாசனத்தின் அருகில் சென்று நல்ல முகூர்த்த நேரத்தில் பொன்னும் பவழமும் முத்தும் கோர்த்துப் பின்னப்பட்டிருந்த மகுடத்தைச் சிவாஜிக்குச் சூட்டினார். சிவா, தன்னிகரில்லாத சுதந்திரத் தலைவர் என்று அவர் சிவாஜியின் புகழை அறிவித்தார்!
இந்த வைபவம் நடந்த தேதி 1674ஆம் ஆண்டு ஜூன் 6 என்று வ்ரலாறு குறிப்பிடுகிறது!
வீர சிவாஜியின் சமாதி இன்றும் புகழ் பெற்ற யாத்திரைத் தலமாக இலங்குகிறது!, வியட்நாமியர் உள்ளிட்டவர்க்கும் கூட!!
**************