புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1 (Post No3518)

Picture of Paul Watson

 

Written by S NAGARAJAN

 

Date: 6 January 2017

 

Time uploaded in London:-  6-21 AM

 

 

Post No.3518

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

30-12-2016 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் 309ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்ட கட்டுரை

 

 புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1

ச.நாகராஜன்

t

“நீரும், காற்றும் மிகவும் இன்றியமையாத இரண்டு செல்வங்கள். அவற்றைச் சார்ந்தே உயிரினங்கள் இருக்கின்றன. அவை இப்போது உலகின் மிகப் பெரிய குப்பைத் தொட்டிகளாக மாறி விட்டன!” – ஜாக்கஸ் வெஸ் காஸ்டோ

 

 

நாளுக்கு நாள் மோசமாகி வரும் உலகின் சுற்றுப்புறச் சூழ்நிலை பற்றி, ஐ,நாவின் உலக சுகாதார நிறுவனம் அவ்வப்பொழுது தன் கவலையைத் தெரிவித்து வருகிறது.

நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நல்ல காற்றையும் நல்ல நீரையும் தர மாட்டோம் என்பதோடு பல உயிரினங்களை அழித்த பாவத்திற்கும் நாம் ஆளாவோம் என்பதை உணர வேண்டிய கடைசி கட்டத்திற்கு நாம் வந்து விட்டோம்,

 

 

    அந்த அளவிற்கு கார்பன் நச்சுப் புகை வளி மண்டலத்தைச் சூழ்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் டீஸல் வாகனங்கள். ஃபாஸில் ஃப்யூயல் எனப்படும் படிம எரிபொருள்களால் ஓடும் வாகனங்கள் நாம் உயிர் வாழத் தகுதியற்ற நச்சுச் சூழ்நிலையை உருவாக்கி விட்டன,

 

 

     இந்த நிலையில் சில உத்வேகமுள்ள உத்தமர்கள் தங்கள் தலைப் பொறுப்பாக சூழ்நிலையைப் பாதுகாக்க விழைந்துள்ளனர்.

 

புத்துலகம் படைக்க விழையும் இவர்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு அவர்களுடன் இணைந்து நாமும் நம்மாலான பணிகளைச் செய்தால் உலகை நல்ல விதமாகக் காத்த நல்லவர்களின்  பட்டியலில் நாமும் இணைவோம்,
சில நல்லவர்களின் உத்வேக மூட்டும் பணிகளைப் பார்ப்போம்:

 

 

அமோரி லோவின்ஸ்

 

 

கார்,லாரி போன்ற வாகனங்கள் டீஸலை உபயோகிக்காத ஒரு உலகத்தைப் பற்றிக் கனவு காணும் அமோரி லோவின்ஸ் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இவருக்கு வயது 70. அமெரிக்கரான இவரை பிரபல டைம் பத்திரிகை 2009ஆம் ஆண்டு உலகின் செல்வாக்குள்ள நூறு பேர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது!

 

    “மின்சார பவர் ஸ்டேஷன்கள் வேண்டாம். கட்டிடங்களும் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களும் உருவாக்கும் ஆற்றலே தொழிற்சாலைகளை நடத்தப் போதுமானதாக இருக்கும். மின்சாரத்தை உருவாக்காத எந்த ஒரு வீட்டையும் காண முடியாது. கார்பன் நச்சுப்புகையே வெளியேறாது.

தொழிற்சாலைகள் கழிவாக எதையும் வெளியேற்றாது.”

 

 

     இப்படியெல்லாம அதிரடியாகச் சொல்லும் லோவின்ஸ் அதற்கான தனது திட்டத்தையும் விவரிக்கிறார்.

 

ஹைப்பர் கார் என்ற இவரது திட்டத்தின் படி உருவாக்கப்படும் கார்கள் கார்பன் ஃபைபர் ஹைப்ரிட் பெட்ரோலையும் மின்சக்தியையும் கொண்டு கார்களை இயக்கும். இதனால் கார்பன் புகை வெளிவராத சூழ்நிலை உருவாகும்.

 

 

     இந்தக் காரை கவனமாக ஓட்டுவதன் மூலம் இரு மடங்கு திறனைப் பெறலாம். காரின் எடையை மிகவும் குறைத்து விட்டு அதில் பயோ எரிபொருளையும் பயன்படுத்தினால், ரீ சார்ஜ் செய்து கொள்ளக் கூடிய பாட்டரிகளையும் பொருத்தி எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மின்சக்தியை சார்ஜ் செய்து கொண்டால் இன்னும் அதிக லாபத்துடன் வண்டியை இயக்கலாம் என்கிறார் அவர்.

 

 

   அவரது அறிவுரையை ஏற்று டொயோடா நிறுவனம் புது வித கார்களை வடிவமைத்து வருகிறது. அமெரிக்க ராணுவத்தின் ஏராளமான வாகனங்களுக்கு பல லட்சம் டாலர்களை செலவழிக்கும் பெண்டகனும் கூட அவரை அழைத்து ஆலோசனை கேட்டு அதன் படி நடந்து வருகிறது.

 

காப்டன் பால் வாட்ஸன்.

 

கடலில் வாழும் உயிரினங்களைக் காக்கும் காப்பாளராகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்ட காப்டன் பால் வாட்ஸன் ஒரு அதிரடி வீரர். 66 வயதாகும் இவர் நேரடியாக களத்தில் இறங்குபவர். தனக்கே சொந்தமான இரண்டு கப்பல்களை உலகின் பெருங்கடல்களில் உலவ விட்டு திருட்டுத்தனமாக திமிங்கிலம் சுறாமீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களைக் கொல்பவர்கள் மீது நேரடித் தாக்குதல் நடத்துகிறார்,

இதனால்  மிரண்டு போன பல உலக நாடுகள் இவரைக் கடல் தீவிரவாதி என்று திட்டுகின்றன. ஆனால் கடல் பற்றிய விதிகளை நன்கு அறிந்த இவர், அநியாயத்திற்கு எதிராகத்தானே நான் செயல்படுகிறேன் என்கிறார்.

 

 

    ஈக்வடார் நாடு இவரைத் தனது அதிகாரபூர்வமான கடல் காப்பாளராக அறிவித்துள்ளது. ஆகவே கடல் வாழ் உயிரினங்களை அநியாயமாகக் கொல்வோரையும் கடலை மாசுபடுத்துவோரையும் இவர் கைது செய்கிறார். உலகின் கடல் வளத்தையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க சுற்றுப் புறக் காவல் படை என்று ஒரு படை தனியாக வேண்டும் என்பது இவரது வேண்டுகோள்.

 

 

    இவர் காக்கும் கடல் வாழ் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில்  மட்டும்  ஒரு லட்சத்தையும் தாண்டுகிறது. இவரை சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் பெரிதும் மதித்து நேசிக்கின்றனர்.

 

 

குறிப்பிடத் தகுந்த இன்னும் சிலரையும் அடுத்துப் பார்ப்போம்..

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி.யான வில்லியம் ப்ராட்ஃபோர்ட் ஷாக்லி (William Bradford Shockley) ஜங்ஷன் டிரான்ஸிஸ்டரைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசை 1956ஆம் ஆண்டு பண்டீன் மற்றும் ப்ராட்டெய்ன் ஆகிய விஞ்ஞானிகளோடு இணைந்து பெற்றுக் கொண்டவர். அவருக்கு கறுப்பர் பற்றிய விசித்திரமான கொள்கைகள் உண்டு.

 

 

   கறுப்பு அமெரிக்கர்கள் மரபணு ரீதியாகவே தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவர் கருதினார். அவர்களின் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்தாவிடில் மொத்த அமெரிக்காவின் அறிவு கூர்மையே சேதமாகி விடும் என்று சொல்லத் தொடங்கினார். இதனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அனைவரின் வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார்.ஆனால் அவர் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

 

 

     அவரை எதிர்த்து ஆங்காங்கே கூட்டங்கள் நடந்தன. அவரை வழி மறித்து எதிர்ப்பைத் தெரிவிப்பதும் தொடர்ந்தன. ஆனால் இதற்குக் கூட அவர் அசரவில்லை.

 

 

    ஒரு நாள் அவரை எதிர்த்து கோஷம் போட்டவர்களின் மைக் செட்டுடன் இணைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் வேலை செய்யவில்லை. என்ன செய்வதென்று அவர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

     ஷாக்லியோ நேராக அந்த ஒலிபெருக்கிகளின் அருகே சென்று அதை ரிப்பேர் செய்ய ஆரம்பித்து கச்சிதமாக அதைச் சரி செய்து விட்டார்.\

 

 

    ஷாக்லியின் இந்த ஷாக் ட்ரீட்மெண்டைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.ஆனால் அவரோ தன் வழியில் வழக்கம் போலச் சென்றார்.

 

     கொள்கை மாறுபட்டிருந்தாலும் உதவி செய்வது என்பது ஒருவரின் கடமை என்பதை அந்த விஞ்ஞானி நிரூபித்துக் காட்டி விட்டார்.

*******.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: