2016ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் புத்தகங்கள்! (Post No.3525)

Written by S NAGARAJAN

 

Date: 8 January 2017

 

Time uploaded in London:-  15-09

 

 

Post No.3525

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 2016ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் புத்தகங்கள்!

ச.நாகராஜன்

t

“அறிவியலைப் பற்றிய ஒரு நல்ல விஷயம் என்னவெனில் நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது உண்மை தான்!”       

                             – நீல் டி க்ராஸ் டைஸன்

 

 

ஏராளமான அறிவியல்  புத்தகங்கள் மேலை உலகில் ஆங்கில  மொழியில் புத்தகச் சந்தையில் நாளுக்கு நாள் வந்து குவிகின்றன. அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் சுவையான புத்தகமே!

 

 

இருந்தாலும் சிறப்பான புத்தகங்கள் என்ற முதல் வரிசைப் புத்தகங்களில் இடம் பெறுபவற்றை அறிவியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அப்படிச் சுட்டிக் காட்டப்படும் புத்தகங்களுள் ஒன்று – டைம் டிராவல் : எ ஹிஸ்டரி (Time Travel : A history)

 

 

இதை எழுதியவர் ஜேம்ஸ் க்ளெக் (James Cleitk). 62 வயதாகும் இந்த அமெரிக்க எழுத்தாளரின் பல புத்தகங்கள் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

 

ஏற்கனவே விண்வெளியில் ஏராளமான பயணங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்ட மனித குலம், காலத்தில் பயணம் செய்வதை ஏன் விரும்புகிறது என்பதை முதலில் ஆய்வு செய்கிறார் நூலாசிரியர்.

 

 

 ஒரு வரலாறு படைக்கவா, ஒரு மர்மத்தைத் துலக்கவா, அல்லது பழைய காலத்தில் நடந்தவற்றைத் திருப்பிப் பார்க்கவா? அல்லது ஒரு நம்பிக்கைக்காவா? அல்லது நம்முடைய ஆற்றல் எவ்வளவு தூரம் போகிறது என்பதைக் கண்டு களிக்கவா? ஒரே ஒரு முறை கிடைத்த மனித வாழ்க்கையைத் தவறாகத் தொலைத்து விட்டோமே என்ற வருத்தத்தைப் போக்கிக் கொள்ளவா?

      பயணம் பற்றிய பெரிய உண்மை ஒன்று இருக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு வழிப் பாதை தான் – மரணத்தை நோக்கி!

 

    ஹெச்.ஜி.வெல்ஸ் 1895ஆம் ஆண்டு எழுதிய டைம் மெஷின் என்ற நாவல் ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்தது.

அது எழுதப்பட்ட காலத்தை விட இன்று ஏராளமான தொழில் நுட்பங்களில் நாம் தேர்ந்திருக்கிறோம்.

 

 

   புதிய கருத்துக்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஏராளம். ஒன்றை இன்னொன்று வலுப்படுத்துகிறது. மின்சாரம், ரெயில், விமானப் பயணம், டார்வினின் பரிணாம வளர்ச்சி, தொல்லியல் கண்டுபிடிப்புகள், அடாமிக் க்ளாக் உள்ளிட்ட துல்லியமாக எதையும் நிர்ணயிக்க உதவும் நவீன சாதனங்கள்! அடேயப்பா எத்தனை, எத்தனை!!

 

 

     காலம் பற்றி பழைய காலம் முதல் இன்று வரை அறிஞர்கள்,விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள் ஆகியோர் கூறியவற்றைத் தொகுத்து வழங்கும் க்ளெய்க் பல கேள்விகளை முன் வைக்கிறார்.

 

 

     இனி நடக்க இருப்பவற்றை முன்னாலிருந்து வருவது போலவும் நடந்து முடிந்த நிகழ்வுகளைப் பின்னால்  போய்விட்டதாகவும் ஏன் கூறுகிறோம். வருபவற்றைப் பற்றிப் பேசும் போது வானத்தைச் சுட்டிக் காட்டி அங்கிருந்து வருவதாக அனைவரும் ஏன் சொல்கிறோம்?

 

      காலம் என்பது தான் என்ன?

     நிகழ்ச்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதன் தடத்தை எப்படி நாம் பாதுகாத்துத் தொடர்பு கொள்கிறோம் என்பது தான் காலம். (What is time? Things change, and time is how we keep track.)

 

 

           14 அத்தியாயங்களில் 352 பக்கங்களில் காலத்தைப் பற்றி அலசி ஆராயும் சுவையான இந்தப் புத்தகம் ஏன் காலப் பயணத்தில் மனிதன் இவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறான் என்ற கேள்விக்கு விடையைத் தருகிறது,

 

காலப் பயணத்தில் நமக்குள்ள ஆர்வம் மரணத்திலிருந்து தப்பிச் செல்லவே தான்!

 

 

சுவையான இன்னும் பல அறிவியல் புத்தகங்களில் ஒன்று ஹிடன் ஃபிகர்ஸ் என்பது. இதை எழுதியவர் அமெரிக்கப் பெண்மணியான மார்காட் லீ ஷெட்டர்லி. இவரது தந்தை நாஸாவில் வேலை பார்த்தை விஞ்ஞானி.

 

 

இந்த நூலில் மறக்கப்பட்ட ஏராளமான பெண் விஞ்ஞானிகளைப் பற்றியும் நாஸாவில் கம்ப்யூட்டர் பிரிவில் ஆராய்ச்சி செய்து விண்வெளிப் பயணங்களை வெற்றிகரமாக ஆக்க அடிகோலிய பெண்களைப் பற்றியும் லீ விவரிக்கிறார்.

மறக்கப்பட்ட இவர்களைப் பற்றி 2010ஆம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சி செய்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதே பெயரில் இவரது புத்தகம் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

 

 

பெண்மணிகளுக்கு உரிய புகழையும் பாராட்டையும் தரத் தவறிய உலகத்தைச் சுட்டிக் காட்டும் இவரது நூல் ஒரு விழிப்புணர்வு ஊட்டும் நூலாகும்.

இது அனைவரையும் ஈர்த்துள்ளது; குறிப்பாக பெண் குலம் இதைப் புகழ்கிறது.

 

இன்னொரு சுவையான புத்தகம்,  ‘மரங்களுள் ஒளிந்திருக்கும் வாழ்க்கை!’ (The Hidden Life of Trees)

 

உலகில் தோன்றியவற்றில் பழமையானது மரங்கள். மனிதனின் மௌனமான தோழர்கள் மரங்களே! மனித குலத்தின் வெற்றிகரமான வாழ்க்கைப் பயணத்திற்கான சாட்சியும்  மரங்களே தான். மனிதர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதும் மரங்களே. அவர்களுக்கு போதனை செய்யும்  ஆச்சரியகரமான போதகர்களும் மரங்களே!

இதை சுவையான விதத்தில் விவரிக்கிறார் ஜெர்மானிய எழுத்தாளரான பீட்டர் ஒலிபென்.

 

 

சிக்கலான விஷயங்களை  மௌன பாஷையில் வாசனை, சுவை, மின்சாரத் துடிப்பு ஆகியவை மூலமாக  மரங்கள் எப்படிப் “பேசித்” தெரிவிக்கின்றன என்பதை காடு பற்றிய ஆராய்ச்சியாளரான ஒலிபென் கூறும் விதமே தனி!

 

   மரங்கள் சுவாசிக்கின்றன. மரங்கள் குடிக்கின்றன. அவைகள் பேசுகின்றன. ஞாபக சக்தியைக் கொண்டிருக்கின்றன. காடுகளை சூப்பர் ஆர்கானிஸம் (சூப்பர் உயிரினம்) என்று சொல்லலாம். காடுகளில் பொதிந்திருக்கும் மர்மங்கள் விஞ்ஞானிகளாலும் கூட கண்டுபிடிக்க முடியாதவை!

     இப்படி அத்தியாயம் அத்தியாயமாக மரத்தின் ஒளிந்திருக்கும் வாழ்க்கையைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார் ஒலிபென்.

 

    மேலே உள்ள மூன்று நூல்களின் ஆசிரியர்களும் ஏராளமான விருதுகளைப் பெற்றவர்கள் என்பது  குறிப்பிடத் தகுந்த விஷயம்!

 

அறிவியல் ஆர்வலர்களின் சாய்ஸ் எப்போதுமே சிறப்பாகத் தான் இருக்கும்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

எர்னஸ்ட் ஹெய்ன்ரிச் ஹெக்கட்  (Ernst Heinrich Haecket)  என்பவர்  ஜெர்மானிய விஞ்ஞானி. தத்துவஞானியும் கூட. எம்ப்ரியோலோஜி (Embryology) எனப்படும் கருவியலில் பல கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்தவர் அவர். சூழ்நிலையியல் எனப்படும் ஈகாலஜி ( Ecology) என்ற வார்த்தையை உருவாக்கியவரும் அவரே.

அவருக்கு விநோதமான பழக்கம் ஒன்று உண்டு. தனது படுக்கை அறையில் உள்ள திறந்த ஜன்னலுக்கு எதிரில் நின்று  கொண்டு தன் கை முஷ்டியால் மார்பைக் குத்திக் கொண்டே இருப்பாராம். இப்படிச் செய்தால் சுவாசிப்பது ஆழ்ந்து இருக்கும் என்று அவர் நம்பினார்.

 

சில சமயம் வீட்டிலிருந்து காலேஜுக்குப் போகும் போது காலேஜை அடையும் வரை இரண்டு கை முஷ்டிகளாலும் மார்பில் ஓங்கிக் குத்திக் கொண்டே போவது அவர் வழக்கம். போகும் வழியில் இருப்பவர்களெல்லாம் இந்த விநோதமான காட்சியைப் பார்த்து அதிசயிப்பர்.

ஆனால் இந்த விநோதமான பழக்கம் அவரைப் பொறுத்த மட்டில் அவரது நம்பிக்கையை வீண்போக்கவில்லை. அவர் 85 வயது வரை நலமுடன் வாழ்ந்தார்.

விஞ்ஞானியின் விசித்திரப் பழக்கம் நீடித்த ஆயுளைத் தந்தது ஆச்சரியமூட்டும் உண்மை!

*********

. 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: