தமிழில் உள்ள யமகப் பாடல்கள்! (Post No.3527)

Research article Written by S NAGARAJAN

 

Date: 9 January 2017

 

Time uploaded in London:-  5-22 am

 

 

Post No.3527

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

6-1-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

தமிழில் உள்ள யமகப் பாடல்கள்!

.நாகராஜன்

 

தமிழின் எல்லையில்லாப் பெருமை

 

செம்மொழிகளில் எல்லாம் உயரிய செம்மொழியாக விளங்கும் தமிழுக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. அவற்றில் ஒரு சிறப்பு யமகம் என்னும் மடக்கணியைக் கொண்டுள்ள பாடல்களாகும்.

 

ஓர் அடியின் முதலில் வந்த சொற்களே மற்ற அடிகளின் முதலிலும் வர வேண்டும் அப்படி வரும் சொற்கள் ஒவ்வொரு அடியிலும் வேறு வேறு பொருளைத் தர வேண்டும். இப்படி அமையும் செய்யுள் அணியை யமகம் அல்லது மடக்கு அணி என்று கூறுவர்.

 

 

இப்படி செய்யுள் அமைப்பதற்கு  மொழி வளமை வாய்ந்த ஒன்றாக இருத்தல் வேண்டும். சொற்கள் ஏராளமான பொருள்களை இயல்பாகக் கொண்டிருப்பதோடு, அவை வழக்கில் இருந்து வரவும் வேண்டும். எழுத்துக்கள் அழகுற ஒன்றுடன் ஒன்று இணைந்து வெவ்வேறு பொருள் தரும் சொற்களை உருவாக்கவும் வேண்டும்.

 

 

உலகில் இந்த மடக்கு அணியை உரிய முறையில் அமைக்க வல்ல மொழிகள் சிலவே உண்டு. சம்ஸ்க்ருதம் போன்ற சில மொழிகளில் யமகம் அமைக்க முடியும். ஆங்கிலம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில்  மடக்கணிப் பாடல்களை அமைக்க முடியாது.

 

சுமார் 15000 பாடல்களுக்கும் மேலாக இப்படி மடக்கணிப் பாடல்களைக் கொண்டிருக்கும் உலகின் ஒரே மொழி தமிழ் மொழியே.

 

வாக்கிற்கு அருணகிரியின் யமக ஜாலம்

 

 

கந்தர் அந்தாதி 100 பாடல்களைக் கொண்டது. அருணகிரிநாதர் இயற்றியது.  சி,சீ,செ,சே, தி,தீ,தெ,தே என்னும் எட்டு எழுத்துக்களில் ஒன்றைக் கொண்டு மட்டுமே தொடங்கும் பாடல்களை உடையது. அவருடன் வாதுக்கு வந்த வில்லிப்புத்தூரார் பொருள் கூற முடியாது தோற்றுப் போன பாடலையும்  உள்ளடக்கியது.

 

அதில் ஒரு மடக்குப் பாடலைப் பார்க்கலாம் :

 

திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்                

திவாகர கன்ன புரைக் குழை வல்லி செருக்குரவ்ந்          

 திவாகர கன்ன சுகவாசகதிறல் வேல் கொடென்புந்                      

திவாகர கன்ன மறலியிடாதுயிர்ச் சேவலுக்கே (செய்யுள் 15):

 

எளிதில் பொருளைப் புரிந்து கொள்ள முடியாத இந்த யமகப் பாடலை முதலில் சொற்களைச் சரியாகப் பிரித்துக் கொண்டு பார்த்தால் பொருள் எளிதில் விளங்கும்.

 

திவா கரகன்ன கொடை பாரி என்று உழல் தீன அல் ஈர்

திவாகர கன்னபுரக் குழை வல்லி செருக்கு உர

(அந்) தி வாகு அர கன்ன சுக வாசக திறல் வேல் கொடு என்

(புந்) தி வா கர கன்ன மறலி இடாது  உயிர் சேவலுக்கே.

 

 

என்று  இப்படிப் பிரித்துக் கொண்டால் பொருள் சுலபமாக விளங்கும்!

 

 

.திவா – பகல் பொழுதில் தானம் கொடுக்கும்

கரகன்ன – கையை உடைய கர்ணனே!

கொடைபாரி – பாரி வள்ளலைப் போன்ற கொடை வள்ளலே!

என்று – என்று இப்படிப் பலபேரிடம் புகழ்ந்து பேசி,

உழல் – என்னன உழல வைக்கும்

தீன – வறுமை என்னும்

அல் – இருளை

ஈர் – பிளக்கக் கூடிய

திவாகர – ஞான சூரியனே!

கன்ன புரக்குழை – கர்ணபூரம் என்றா ஆபரணத்தைத் தரித்திருக்கும்

வல்லி – வள்ளிநாயகி

செருக்கு – பெருமிதத்துடன் தழுவும்

உர – மார்பை உடையவனே!

அந்தி வாகு – மாலைப் பொழுதின் நிறத்தை உடைய

அர – சிவபிரானின்

கர்ண – காதில்

சுக வாசக – இனிமையான ஓம் என்னும் பிரண்வத்தை உபதேசித்தவனே!

கர –ஒளிந்து

மறலி கன்னமிடாது – எம்ன் என்னைக் கொள்ளை கொள்ளாதபடி உயிர் சேவலுக்கே – உயிரைக் காபாற்றுவதற்காக

திறல் வேல் கொடு – வலிமை வாய்ந்த வேலாயுதத்தை ஏந்தி வந்து

 

என் புந்தி வா – என்னுடைய இதயத்தில் நீ வீற்றருள்வாயாக!

அற்புதமாக இப்படி நூறு செய்யுள்களைக் கொண்ட கந்தரந்தாதியை உலகிற்குத் தந்த அருணகிரிநாதரை வாக்கிற்கு அருணகிரி என்று போற்றுவதில் வியப்பே இல்லை.

 

 

    

வில்லிப்புத்தூராரின் சொல் ஜாலம்

 

அடுத்து சொல்லின் செல்வரான வில்லிப்புத்தூரார் வில்லி பாரதத்தில் பல யமகச் செய்யுள்களை அழகுறப் பாடியுள்ளார்.

அவற்றில் ஒன்றைப் பார்க்கலாம்..

 

ஆதி பருவத்தில் அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை சருக்கத்தில் பத்தாவது பாடலாக் இது அமைகின்றது.

அர்ச்சுனன் நாக லோகம் சென்று உலூபியின் மாளிகையில் அவளோடு இன்புற வாழ்கிறான்.அவள் இராவானைப் பெறுகிறாள்.

பின்னர் அங்கிருந்து மீண்டு அருச்சுனன் கிழக்கு நோக்கிச் செல்வதைச் சொல்லும் பாடல் இது.

 

நாகாதிபன்மகண் மைந்தனலங் கண்டு மகிழ்ந்து            

நாகாதிபன்மகன் மீளவு நதியின் வழி வந்து                    

நாகாதிபன் வண்சாரலி னன்னீர்கள் படிந்து

நாகாதிபன் விடுமும்மதநாறுந்திசை புக்கான்

 

 

இதன் பொருள்:

நாக அதிபன் மகன் –சுவர்க்க லோகத்துக்குத் தலைவனான இந்திரனின்  மகனான அர்ச்சுனன்

நாக அதிபன்  மகள் மைந்தன் நலம் கண்டு மகிழ்ந்து – ஒரு நாகராஜனது மகளான உலூபியிடம் தோன்றிய அந்தப் புத்திரனது அழகைக் கண்டு மகிழ்ந்து

மீளவும் நதியின் வழி வந்து – மீண்டும் பில வாயிலாக கங்கா ந்திக்கு வந்து சேர்ந்து

நாக் அதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து – மலையரச்னாகிய இமயமலையினது அழகிய சாரலிலுள்ள அழகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, அந்த வடதிசையிலிருந்து கிளம்பி

நாக அதிபன் விடு  மும்மதம் நாறும் திசை புக்கான் – யானைகளுக்குத் தலைவனான ஐராவதம் என்னும் யானை சொரிகிற  மூன்று வகை மதஜலங்கள் மணம் வீசப் பெற்ற கிழக்குத் திசையை அடைந்தான்.

எப்படி ஒரு சொல் ஜாலம்!

 

 

கவிச் சக்கரவர்த்தியின் யமகப் பாடல்

 

அடுத்து கவிச் சககரவர்த்தியாகிய கம்பர் ராமாயணத்தில் தகுந்த் இடங்களில் பல யமகப் பாடல்களை மனம் கவரும் வண்ணம் அழகுற அமைத்துள்ளார்.

 

சுந்தரகாண்டத்தில் ஊர் தேடு படலத்தில அடுத்தடுத்து நான்கு யமகப் பாடல்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று இது.

 

 

அஞ்சு வணத்தி னாடை யுடுத்தா ளரவெல்லாம்            

அஞ்சு வணத்தின் வேக மிகுத்தா ளருளில்லாள்             

அஞ்சு வணத்தி னுத்தரி யத்தா ளலையாரும்                        

அஞ்சு வணத்தின் முத்தொளி ராரந் தணி கொண்டாள் 

 

இலங்கா தேவியின் தோற்றத்தை கம்பன் இந்தப் பாடலில் வர்ணிக்கிறான்.

 

பாடலின் பொருள் :

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் – வெண்மை,செம்மை, கருமை,பொன்மை, பசுமை ஆகிய ஐந்து நிறங்கள் கொண்ட ஆடையை உடுத்தி இருந்தாள்

அரவெல்லாம் அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் – பாம்புகளெல்லாம் கண்டு பயப்படும் க்ருடனைப் போன்ற கடும் வேகம் கொண்டவள்

அருள் இல்லாள் – இரக்கம் என்பதே சற்றும் இல்லாதவள்

அம் சுவணத்தின் உத்தரியத்தாள் – அழகிய பொன்னாலான மேலாடையை உடையவள்

அலை ஆரும் – அலை பொருந்திய

அம் – கடல் நீரில்

சு – அழ்கான

வள் – ஒளி பொருந்திய

நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சங்கினின்று பிறந்த முத்துக்கள் ஒளி வீசும் மாலையாகிய அணிகலனைத் தரித்திருந்தாள்.

எப்படி இலங்கா தேவியின் வர்ணனை?

 

இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள்

 

யமக அந்தாதிகள் தமிழில் ஏராளம் உண்டு. கலம்பகம் உள்ளிட்ட நூல்களிலும் யமகப் பாடல்கள் இலக்கணப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

நந்திக் கலம்பகம், காசிக் கலம்பகம், திருமயிலை யம்க அந்தாதி, திருவாலவாய் யம்க அந்தாதி,திருவரங்கத்து யமக அந்தாதி உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் யமகப் பாடல்களை அழகுறக் கொண்டுள்ளன. தமிழில் உள்ள யம்கப் பாடல்களை மட்டும் தொகுத்தால் அற்புதமான் தமிழ் மொழியின் சிறப்பை உலகினருக்கு எடுத்துக் காட்டும் ஒன்றாக் அது அமையும்!

 

 

புலவர்களுக்குச் சவாலான யமகப் பாடல்களை சுலப்மாக அமைத்துப் பாடிய கவிஞர்களின் வல்லமையையும் தமிழின் வன்மையையும் நினைத்து நினைத்துப் பெருமைப் படலாம். பெருமைப் படுவதோடு அவ்வப்பொழுது சில பாடல்களையாவது படித்து மற்றவர்களோடு பகிர்ந்து மகிழலாம்!

 

**********

 

 

Leave a comment

2 Comments

  1. தமிழின் பெருமையை நன்கு உணர்த்தியுள்ளீர். அண்மைக்கால யமகப் பாடல்கள் ஏதாவது உண்டா?

  2. அண்மைக் காலத்தில் வாழ்ச்து மறைந்த திரிசிர்புரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் ஏராளமான தல புராணங்களை இயற்றியுள்ளார். கவிச் சக்கரவாத்தி கம்பன் பத்தாயிரம் பாடல்களைப் பாடியுள்ளான். ஆனால் இவரோ ஒரு லட்சம் பாடலகளை இயற்றியுள்ளார். ஆகவே இவரை பத்துக் கம்பன் என்பார்கள். இவர் நூற்றுக் க்ணக்கான யமகப் பாடல்களை இயற்றியுள்ளார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரின் குரு. அவர் பெருமையைப் பற்றி இரண்டு பாகங்கள் கொண்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தில் படிக்கலாம். வினாவிற்கு நன்றி. யமகப் பாடல்களை ரசியுங்கள். ச.நாகராஜன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: