புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 2

 

   லியனார்டோ டிகாப்ரியோ

 

Written by S NAGARAJAN

 

Date: 16 January 2017

 

Time uploaded in London:-  6-34 am

 

 

Post No.3548

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

6-1-2017 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

 புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 2

by ச.நாகராஜன்

t

“உலகெங்கும் சுற்றி வரும் நான் பார்ப்பது, மக்கள் மத்திய கிழக்கில் மட்டும் தான் நீராதாரம் இல்லை என்று நினைக்கிறார்கள் என்பதைத் தான். அவர்கள் நினைப்பது முற்றிலும் தவறு. உண்மை என்னவெனில் உலகெங்குமே நீர் பிரச்சினை இருக்கிறது – கோஃபி அனான்

 

 

லியனார்டோ டிகாப்ரியோ

 

டைட்டானிக் படத்தில் நடித்த பிரபல நடிகர் லியனார்டோ டிகாப்ரியோவை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. இப்போது அவர் சுற்றுப்புறச் சூழலின் காவலராக மாறி இருப்பதால் இன்னும் ஏராளமானோரைக் கவர்ந்திருக்கிறார்.

துருவக் கரடிகளையும், பனிப்பாறைகளையும் அழிந்து விடாமல் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை உலகெங்கும் ஊட்டிவ் வருகிறார். அவர் எடுத்த டாகுமெண்டரி படமான ‘தி லெவந்த் ஹவர் (The 11th Hour) என்ற படம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

‘தி பீச்’ என்ற திரைப்படத்தை எடுக்கும் போது தாய்லாந்து கடற்கரை ஒன்றில் படக் குழுவினர் தங்களின் காட்சிகள் காமரா வியூவிற்கு பொருந்தி வர வேண்டும் என்பதற்காக ஏராளமான பனைமரங்கள் தற்காலிகமாக நட்டனர். கடற்கரை  மணற்பகுதி மாற்றி அமைக்கப்பட்டது. இதைக் கண்ட மக்களும் ஊடகங்களும் படக் குழுவினரை கடுமையாக விமரிசிக்கவே, மனம் நொந்து போன டிகாப்ரியோ சுற்றுப்புறச் சூழலின் ஆர்வலராக மாறி விட்டார்.

 

படங்களில் நடித்து புகழ் ஏற ஏற சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதிலும் அவர் ஆர்வமாக இருப்பதைக் கண்ட மக்கள் அதற்காகவும் இவரைப் புகழ ஆரம்பித்தனர்.  டிஸ்கவரி சானலுக்காக சுற்றுப்புறச் சூழல் படம் ஒன்றையும் இவர் தயாரித்து நல்ல பெயர் பெற்றார்.

 

ஜெங்க்ராங் ஷி (Zhengrong Shi)

   சீன விஞ்ஞானியான இவர்  சோலார் செல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியைப் பெற்றார். சன் டெக் பவர் என்ற கம்பெனியை நிறுவி உலகின் பெரும் பணக்காரராக ஆகி விட்டார். சோலார் பேனல்கள் எனப்படும் சூரிய சக்தியைச் சேமிக்கும் தகடுகளைத் தயாரித்து பெருமளவில் விறக ஆரம்பிக்கவே 600 கோடி டாலர் என்ற அளவில் வர்த்தகம் பெருகியது. நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட முதல் சீனக் கம்பெனியின் உரிமையாளர் என்ற புகழும் இவரை வந்தடைந்தது. ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு எளிய விவசாயியின் மகனாகப் பிறந்த இவர் ஏழ்மையால் வாடி வருந்தியவ்ர். 2001இல் கஷ்டப்பட்டு தனது நிறுவனத்தை நிறுவ அது இன்று உலகின் மிகப் பெரிய சுற்றுப்புறச் சூழல்  காக்கும் நிறுவனமாக ஆகி விட்டது. ஷாங்காயில் மட்டும் ஒரு லட்சம் சோலார் பேனல்களை நிறுவ இவர் திட்டமிட்டார். அதனால் இந்த தொழில்நுட்பத்தில் முதலிடத்தை வகித்து வந்த ஜப்பானையே திணற அடித்தார்.

 

ராஜேந்திர சிங்

ராஜஸ்தானில் சுகாதார மையங்களை நிறுவலாம் என்று ஆர்வத்துடன்  சென்றார் ராஜேந்திர சிங் என்பவர். அங்குள்ள கோபாலபுரம் என்ற இடத்தை அடைந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அங்குள்ள மக்கள் நீரின்றித் தவித்து ஊரை விட்டே ஓடிக் கொண்டிருந்தனர்.  முதலில் அவர்களுக்குத் தேவை நீராதாரம் என்பதை உணர்ந்த அவர், பாலைவனமாக இருந்த அந்தப் பகுதி மக்கள் மழை நீரை நம்பியே இருப்பதை உணர்ந்தார். ஆனால் மழையோ பெய்யவே பெய்யாது. என்ன செய்வது என்று யோசித்தார்.

 

பாரம்பரிய முறையில் ராஜஸ்தானில் அமைக்கப்பட்டு வந்த நீர் சேகரிப்பு அணைகளை அவர்கள் சமீப காலத்தில் அமைப்பதே இல்லை என்பதை அவர் கண்டார். ஜோஹாத் என்று அழைக்கப்பட்டு வந்த அந்த சிறு சிறு அணைகளைக் கட்டினால் என்ன என்று யோசித்த அவர் கோபாலபுரத்தில் இருந்த பழைய ஜோஹாத் ஒன்றைத் தோண்டினார்.

 

என்ன ஆச்சரியம்! ஏழு மாதங்கள் கழித்து அதில் நிறைய நீர் சேர்ந்திருந்தது. ஐந்து அடிக்கு தண்ணீர்! அதிர்ஷ்டவசமாக மழை வேறு  பெய்யவே அணை விளிம்பு வரை நீர் தளும்பியது. கிராம மக்களுக்கு ஒரே உற்சாகம். வெளியே சென்றவர்கள் செய்தி கேட்டு ஊருக்குத் திரும்பினர். இரண்டாவது ஜோஹாத் அமைக்கப்பட்டது அதுவும் வெற்றியானது. இப்படி பல ஜோஹாத்கள் அமைக்கப்பட்டன. நிலத்தடி நீர் மட்டம் 6.7 மீட்டரிலிருந்து 14 மீட்டராக உயர்ந்தது.

 

பாலைவனமாக இருந்த கிராமம் பசுமை நிறைந்ததாக மாறியது. ராஜேந்திர சிங்கை  ‘ராஜஸ்தானின் மழை மனிதன்’ என்ற செல்லப் பெயரால் அனைவரும் அழைக்க ஆரம்பித்தனர்.

 

செய்தி பரவவே இதே போலவே 8600 ஜோஹாத்கள் அமைக்கப்பட்டன. ஆயிரம் கிராமங்களில் நீர் சேகரிக்கப்பட்டது. ராஜஸ்தான் கிராமங்களுக்கு உயிர் ஊட்டிய அவரை அனைவரும் போற்றினர்.

 

தண்ணீர் அறுவடை செய்து வறண்ட பாலைவனம் போன்ற பகுதியையும் நீருள்ள பிரதேசமாக மாற்றிய் ராஜேந்திர சிங் அனைவருக்கும் உத்வேகமூட்டும் ஒரு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக நன்கு மதிக்கப்படுகிறார்.

 

இன்னும் சிலரை அடுத்துப் பார்ப்போம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

பிரிட்டனைச் சேர்ந்த பெண்மணியான காத்லீன் லான்ஸ்டேல் (Kathleen Lonsdale) இரசாயன இயலில் பெரிய விஞ்ஞானி. இவர் ஒரு க்வேக்கர். க்வேக்கர் என்ற இயக்கம் கிறிஸ்தவ மத சார்புடையது. இந்த இயக்கத்தில் இணைந்தவர்கள் போரை விரும்பாத சமாதான விரும்பிகள். இவர்கள் எந்த விதமான வன்முறையையும் ஆதரிக்க மாட்டார்கள். அஹிம்சாவாதிகள்.

கிறிஸ்டல்கள் பற்றிய ஆய்வில் பல அபாரமான கண்டுபிடிப்புகளைக் கண்டவர் காத்லீன்.

 

 

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசு அனைவரையும் ராணுவத்திலும் ராணுவத்திற்கு ஆதரவான சிவில் சர்வீஸிலும் சேருமாறு அழைப்பு விடுத்தது. அனைவரும் ராணுவத்தில் சேர தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர்.

ஆனால் காத்லீன் தனது பெயரைப் பதிவு செய்ய மறுத்து விட்டார்.

 

இதனால் வெகுண்ட அரசு இவரைச் சிறையில் அடைத்தது.

ஒரு மாதம் சிறையில் கழித்தார் இவர்.

 

போர் முடிந்த பிறகு தன் பணியைத் தொடரலானார் காத்லீன்.  அப்போது இங்கிலாந்தின்  ராயல் சொஸைடி பெண் விஞ்ஞானிகளையும் அதில் சேர அனுமதித்தது.

இவரும் இன்னொரு பெண்மணியான மார்ஜரி ஸ்டெபென்ஸனும் அதில் சேர்ந்தனர். ராயல் சொஸைடியில் சேர்ந்த முதல் இரு பெண்மணிகள் என்ற புகழையும் பெற்றனர்.

 

போரை விரும்பாத பெண் விஞ்ஞானி என்ற புகழைப் பெற்றவர் காத்லீன்!

*********

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: