நூறு வயதை எட்டிய ஹாலிவுட் கதாநாயகன், கதாநாயகி! (Post No.3574)

Written by S NAGARAJAN

 

Date: 25 January 2017

 

Time uploaded in London:-  5-49 am

 

 

Post No.3574

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நூறு வயதை எட்டிய ஹாலிவுட் கதாநாயகன், கதாநாயகி!

ச.நாகராஜன்

 

 

கவர்ச்சிகரமான திரைத்துறையில் வெற்றிகரமாக கொடி கட்டிப் பறந்தவர்களில் நூறு வயதை எட்டியவர் யார்?

இந்திய திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால் நிறைய பேரைச் சுட்டிக் காட்டுவது சாத்தியமில்லை.

ஆனால் ஹாலிவுட் நடிக நடிகையரில் 34 பேருக்கு மேல் நூறு வயதைத் தாண்டி விட்டனர் அல்லது நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் ஓஹோ என்று உச்சத்தில் இருந்தார்கள். இன்றும் ரசிகர்கள் உள்ளங்களில் ஓஹோ நிலையை விட்டு நழுவிக் கீழே இறங்கி விடவில்லை.

இவர்களில் பலரும் நான் திரையில் தோன்றினால் அதைப் பார்க்க லட்சோப லட்சம் ரசிகர்கள் இன்றும் தயார் என்கின்றனர். உண்மை தான்! திரைப்படத்தின் பல்வேறு துறைகளிலும் செயலூக்கத்துடன் இருக்கும் இவர்களுக்கு 2017இல் ஒரு பெரிய சல்யூட்!

 

சிலரைப் பார்ப்போம்.

டோரிஸ் டே

 

‘கே சரா சரா’ என்ற பாடலை முணுமுணுக்காதவர் இல்லை என்று ஒரு காலம் இருந்தது. இந்தப் பாடலின் புகழ் இன்றும் மறையவில்லை.  ஒரு போதும் மறையாது. ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘தி மேன் ஹூ க்நோஸ் டூ ம்ச்’ என்ற படத்தில் ந்டித்த டோரிஸ் டே-ஐ (Doris Day) யாராலாவது மறக்க முடியுமா?

இந்தப் பாடலின் மெட்டுக்குத் தக அமரர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆரவல்லி படத்திற்காக ஒரு அற்புதமான பாடலை எழுத அதற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

 

 

பெண்: சின்னப் பெண்ணான போதிலே

அன்னையிடம் நான் ஒரு நாளிலே

எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? – அம்மா

நீ சொல் என்றேன் (சின்ன)

 

வெண்ணிலா நிலா – என்

கண்ணல்லவா கலா – உன்

எண்ணம் போல் வாழ்விலே

இன்பம் தான் என்றாள் (வெண்ணிலா)

 

 

இப்போது ஞாபகம் வந்திருக்கும் கே சரா சரா பாடல்! உலகில் கடந்த நூறு ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தை வென்ற முதல் நூறு பாடல்களில் 48வது இடத்தைப் பிடித்திருக்கும் பாடல் இது!

 

 

இதில் நடித்த பிரபல பாடகியும் நடிகையுமான டோரிஸ் டேக்கு ஏப்ரல் 3, 2016இல் 92வது பிறந்த நாள் விழா நடந்தது.

இப்போது அவர்  விலங்கு நல அமைப்பில் சிறப்பான பொறுப்பை வகித்து மிருகங்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துகிறார்.

வயதானாலும் சுறுசுறுப்பு குறையவில்லை!

 

 

ஒலிவியா டி ஹவிலேண்ட் (Olivia de Haviland)

‘கான் வித் தி விண்ட்’ (Gone with the wind)  என்ற படத்தை யாராலும் மறக்க முடியாது. காலத்தை வென்ற இந்தப் படத்தின் நாயகி ஒலிவியா டி ஹவிலேண்டும் காலத்தை வென்ற புகழைப் பெற்று நூறு வயதை எட்டியுள்ளார். சுறுசுறுப்பாக பழைய நாட்களைப் பற்றி 2016இல் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

 

கான் வித் தி விண்டின் பட டைரக்டர் ஜார்ஜ் குகோர் 1938இல் 22 வயதான ஒலிவியாட்ம்  சட்டத்தை மீறி நடக்க உன்னால் முடியுமா என்று கேட்ட போது என்ன விஷய்ம் என்றார் அந்த அழகிய இளம் மங்கை. வார்னர் பிரதர்ஸுடன் போட்டிருந்த காண்ட்ராக்டை மீறித் தன் படத்தில் நடிக்க வர முடியுமா என்று தெளிவாகக் கேட்டார் பிரபல டைரக்டர்.

 

 

ஒலிவியா தனது பாஸின் மனைவியிடம் சென்றார். வார்னரின் மனைவியான ஆன் வார்னர் கான் வித் தி விண்ட் நாவலைப் படித்து அதைத் திரையில் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தார். பிறகென்ன,விஷயம் சுலபமாக முடிந்தது.

மெலனி என்ற கதாபாத்திரமாக நடித்து புகழேணியில் ஏறிய ஒலிவியா இன்றளவும் இறங்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் இவரை வொய்ட் ஹவுஸுக்கு அழைத்து கௌரவித்தார். பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய இரு தேசங்களின் உயரிய விருதைப் பெற்ற இவர் இன்றும் சுறுசுறுப்புடன் இயங்குகிறார்.

கிர்க் டக்ளஸ் (Kirk Douglas)

 

கிர்க் டக்ளஸ் தனது நூறாவது பிறந்த தினத்தை 2016 டிசம்பர் 9ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடினார்.

பேட்டியின் போது தனது சோபாவிலிருந்து இருமுறை எழுந்து உட்கார்ந்து காண்பித்தார். பேட்டியாளர் விஷயத்தைப் புரிந்து கொண்டார். அவரது மூட்டுகள் இரண்டும் அறுவை சிகிச்சையில் புதிதாகப் பொருத்தப்பட்டிருந்தன.

 

தான் ஆரோக்கியமாக் இருப்பதைக் காண்பிக்கவே அவர் எழுந்து உட்கார்ந்து காண்பித்தார்.

 

 

1952இல் வெளியான ‘தி பேட் அண்ட்

தி பியூடிஃபுல்’ (The Bad and the Beautiful)  என்ற படத்தில் நடித்ததற்காக இரண்டாம் முறை நாமினேஷனைப் பெற்ற நாளிலிருந்து இவர் புகழ் இறங்கவில்லை. அதிக ஆஸ்கார் விருதைப் பெற்ற படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றது.

 

 

1954 இல் வெளியான ‘20000 லீக்ஸ் அண்டர் தி ஸீ’ படத்தில் காப்டன் நெமோவாக நடித்து சக்கை போடு போட்டார் டக்ளஸ்.

 

. மூன்று முறை நாமினேஷனைப் பெற்ற டக்ளஸ் வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கார் விருதைப் பெற்றவர்.

சுறுசுறுப்பாக வாழ்நாட்களைக் கழிக்கும் டக்ளஸ் 1991ஆம் ஆண்டு மோசமான ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்தார். 1996இல் பக்கவாத நோய் தாக்கியதிலிருந்தும் மீண்டார்.

 

பத்து நாவல்களையும் தனது நினைவலைகளையும் புத்தகமாக எழுதியுள்ளார். அமைதியான ஆன்மீக வாழ்க்கையின் பக்கம் அவர் கவனம் இப்போது திரும்பியுள்ளது

 

 

ஜேம்ஸ் பாண்டாக நடித்த ரோஜர் மூருக்கு இப்போது வயது 89 (பிறந்த தேதி:அக்டோபர் 14, 1927)

 

ஜேம்ஸ் பாண்டாக நடித்த சீன் கானரிக்கு இப்போது வயது 86 (பிறந்த தேதி: ஆகஸ்ட் 25, 1930)

 

பிரபல அழ்கி சோபியா லாரனுக்கு இப்போது வயது.82 (பிறந்த தேதி செப்டம்பர் 20 1934)

இப்படி பட்டியல் நீள்கிறது.

 

ஹாலிவுட்டில் எண்பதையும் தாண்டிய ஏராளமான நடிக, நடிகையரில் பெரும்பாலானோர் சுறுசுறுப்பாக திரைத் துறை சார்ந்த பணிகளில் இன்றும் கவனம் செலுத்துவது ஒரு சுவையான செய்தி! திரைக் கலைஞர்களுக்கு வயது ஒரு வரம்பே இல்லை!

**********

 

 

 

 

 

 

Leave a comment

2 Comments

  1. இப்படி அதிக நாள் வாழ்ந்தவர்களை நினைப்பதில் மனதிற்கு ஒரு நிறைவு ஏற்படுகிறது. எந்தத்துறையிலும் சாதனை படைத்தவர்களிடம் ஏதோ ஒரு சிறப்பம்சம் இருக்கவே செய்கிறது. They are blessed by the Stars!

    டோரிஸ் டேவுக்கு 92 வயது என்றால் நம்பமுடியவில்லை! அவரே பாடிய கே சரா சரா பாடல் இந்திய-ஹிந்து தத்துவத்தின் சாயல் கொண்டது! Que sera, sera :, whatever will be, will be; the future’s not ours to see ! இந்தப் பாடல் பிரபலமானபோது, கத்தோலிக்க மத குருக்கள் ( பிஷப் வின்சென்ட் ஷீன் பெயர் இன்னும் நினைவிருக்கிறது!) அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். ஆனால் இதில் இருந்த அடிப்படை உண்மை மனதைத் தொட்டது! எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆசை பலரையும் பீடிக்கிறது. ஆனால் நடக்கப்போவதை யாராலும் சரியாகச் சொல்ல முடிவதில்லை! ஏதோ ஒரு புதிரான அம்சம் அனைவரின் வாழ்க்கையிலும் பொதிந்திருக்கிறது! அவிழ்க்க முடியாத இந்தப் புதிர் உள்ளவரை, இந்தப் பாடலும் மனதைவிட்டு நீங்காமலிருக்கும்!

    இதேபோல், திருமணமாகி மனைவி, குடும்பத்துடன் பல வருஷங்கள் சேர்ந்து இருந்த பல புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் 50 வருஷங்கள் கூட ஒரே மனைவியுடன் சேர்ந்தே இருந்திருக்கிறார்கள். கவர்ச்சியும் பரபரப்பும் நிறைந்த சினிமா உலகில், அதுவும் ஹாலிவுட்டில் இது ஒரு அதிசயம் என்றே சொல்லிவிடலாம். இவர்களைப் பற்றியும் முடிந்தால் எழுதுங்கள். இக்கால இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

  2. ஓரு திருத்தம். அந்த பிஷப்பின் சரியான பெயர் ஃபுல்டன் ஷீன்.Fulton Sheen. வின்சென்ட் ஷீன் Vincent Sheean காந்திஜியைப் பற்றி எழுதியிருக்கிறார்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: