Written by S NAGARAJAN
Date: 30 January 2017
Time uploaded in London:- 5-04 am
Post No.3589
Pictures are taken from different sources; thanks.
அண்ணல் காந்தியடிகளின் அற்புத வாழ்க்கையில் ஆயிரக் கணக்கான உத்வேகமூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.. அண்ணலுக்கு அஞ்சலி செய்யும் ஜனவரி 30ஆம் நாள் நினைவில் கொள்ள மூன்று சம்பவங்கள் இதோ:-
காந்திஜியே மருந்து!
ச.நாகராஜன்
நோய் தீர்த்த மஹாத்மா
1925ஆம் ஆண்டு. மஹாத்மா காந்திஜி கிழக்கு வங்கத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். டாக்காவில் எழுபது வயதான ஒருவர் காந்திஜியின் முன்னர் அழைத்து வரப்பட்டார். அவர் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ‘ஹரிஜன்’ ஆவார். அவர் கழுத்தில் காந்திஜியின் படம் தொங்கிக் கொண்டிருந்தது. காந்திஜியைக் கண்டவுடன் பல முறை கையெடுத்து அவரைக் கும்பிட்ட வண்ணம் இருந்தார் அவர். பின்னர் அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.
அவருக்கு பாரிச வாயு தாக்கியிருந்தது. என்னென்னெவோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் நோய் குணமாகவில்லை.
கடையியில் காந்திஜியின் நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அவர் நோய் அடியோடு குணமாகி விட்டது. காந்திஜியின் நாமம் தான் தன்னைக் குணப்படுத்தியது என்பதால் அவரது திருவுருவப்படத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டிருந்தார்.
அவரிடம் காந்திஜி, “உங்களை குணப்படுத்தியது நான் இல்லை. கடவுளே” என்றார். ஆனால் அவரோ அதை நமபத் தயாராக இல்லை.
அவருக்கு கடவுளே காந்திஜியின் போட்டோ வடிவமாக இருந்தார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை என்பதை அறிந்த காந்திஜி,” அன்பரே! எனக்காக ஒன்று செய்வீர்களா? என் போட்டோவை உங்கள் கழுத்திலிருந்து எடுத்து விடுங்களேன்” என்றார்.
காந்திஜி இப்படிக் கேட்டதும் உடனே அவர் சரி என்று சொல்லி அந்தப் போட்டோவை கழுத்திலிருந்து எடுத்து விட்டார்.
ஆனாலும் போட்டோவை எடுக்கச் சொன்ன கடவுள் தான் தன்னை குணப்படுத்தியதாக்ச் சொல்லிக் கொண்டே போனார்.
அவரது நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியவில்லை – காந்திஜி உட்பட!
மஹாத்மாஜி, நமக்கு சுதந்திரம் வந்து விட்டதா?
மஹாத்மாவின் தண்டி யாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தண்டிக்கு அருகில் உள்ள கரோடி என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த பஞ்ச காகா படேல் என்பவரும் அவர்களில் ஒருவர்.
தண்டியில் நடந்த உப்பு சத்யாக்ரஹத்தில் பங்கேற்றமைக்காக பிரிட்டிஷ் அரசு அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தது.
அவரைக் கைது செய்த போலீஸ் அதிகாரி அவரிடம், “பார்த்தாயா! உனக்கு நேர்ந்த கதியை. இப்போது ஒரு இஞ்ச் நிலம் கூட உன்னிடம் இல்லாமல் போய் விட்டது உனது வீடும் சேர்ந்து போய் விட்டது” என்றார்.
“அனாவசியமாக நீங்கள் கவலைப் படவேண்டாம். இந்தியா சுதந்திரம் அடையும் வரை நான் அவற்றைத் திருப்பிக் கேட்க மாட்டேன்: என்றார் காகா.
1937இல் பம்பாய் பிரஸிடென்ஸியில் காங்கிரஸ் அரசை அமைத்தது. முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற பி.ஜி.கேர் காகாவிற்கு ஒரு செய்தியை அனுப்பினார்.
அதில் தனது அரசு அவரது நிலத்தையும் வீட்டையும் திருப்பித் தர தயாராக இருப்பதாக எழுதியிருந்தார்.
ஆனால் காகா இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் அதைத் திருமப்ப் பெறப் போவதில்லை என்று தான் சொன்னதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்து அதை இப்போது பெற முடியாது என்று தெரிவித்து விட்டார்.
1947 ஆகஸ்டும் வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. காகாவிற்கு இப்போதும் ஒரு கடிதம அரசிடமிருந்து வந்தது. அவர் தனது சொத்திற்கு உரிமை கோரலாம் என்றும் அரசு அவற்றைத் திருப்பித் தரத் தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறை அவர் தனது குருநாதர் காந்திஜியிடம் சென்று கேட்டார் இப்படி: “பாபுஜி! நீங்கள் விரும்பிய சுதந்திரம் வந்து விட்டதா?”
காந்திஜி, “துரதிர்ஷ்ட்வசமாக இந்தக் கேள்விக்கு இல்லை என்று தான் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது” என்றார்.
காகா அரசிற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில் தனது சொத்துக்கள் தனக்குத் திருப்பித் தரப்பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்!
டாக்டரா, வக்கீலா
ஆகாகான் அரண்மனையில் இருந்த போது ஒரு சமயம் காந்திஜிக்கு மலேரியா ஜுரம் வந்து விட்டது. கல்கத்தாவைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பி.சி.ராய் (பின்னால் மேற்கு வங்க முதல் அமைச்சரானவர்) அப்போது பம்பாயில் இருந்தார். ஆனாலும் அவரை காந்திஜிக்கு மருத்துவம் பார்க்க பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்கவில்லை.
ஒரு வழியாக பெரிய போராட்டத்திற்குப் பிறகு அனுமதியைப் பெற்ற பிதான் ராய் காந்திஜியிடம் வந்தார்.
சிகிச்சை பெற காந்திஜிக்கு விருப்பமில்லை
காந்திஜியிடம் அவர், “நான் யாருக்கு சிகிச்சை அளிக்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மோஹன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு அல்ல. நாற்பது கோடி பேரின் பிரதிநிதிக்கு அல்லவா சிகிச்சை அளிக்க வந்திருக்கிறேன். அவர் வாழ்ந்தால் நாற்ப்து கோடி பேரும் ஜீவித்திருப்பார்கள். அவர் இல்லையேல் நாற்பது கோடிப் பேரும் இறந்து விடுவார்கள்” என்றார்.
இதைக் கேட்ட காந்திஜிக்கு பதில் சொல்ல முடியாமல் போனது. ஒரு நிமிடம் பேசாமல் இருந்த் அவர், “பிதான், நீங்கள்ஜெயித்து விட்டீர்கள். எனக்கு நீங்கள் சிகிச்சை அளிக்கலாம், நீங்கள் தரும் மருந்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒன்று, டாக்டருக்கு படித்ததற்கு பதிலாக நீங்கள் வக்கிலுக்குப் படித்திருக்கலாமே. நன்றாக வாதிடுகிறீர்கள்” என்றார்.
உடனே பிதான், “அது ஏனென்றால் கடவுளுக்குத் தெரியும், ஒரு நாள் அவரது அபிமான புத்திரனுக்கு நான் மருத்துவம் செய்ய வேண்டியிருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று. அதனால் தான் நான் டாக்டருக்குப் படித்தேன்” என்று பதில் சொன்னார்.
: ”பார்த்தீர்களா! இப்போதும் கூட் டாக்டரை விட நீங்கள் சிறந்த வக்கீலாகவே வாதிடுகிறீக்ள்” என்றார் காந்திஜி!
அனைவரும் நகைத்தனர்!
ஸ்பரிசவேதி கல்லானது தன்னைத் தொட்ட எதையும் தங்கமாக்கி விடுவது போல, காந்திஜியிடம் ஈடுபட்ட அனைவரும் தங்கமாகி விடுவார்கள்; அன்புமயமாகி விடுவார்கள்.
அவ்ரை நினைவைப் போற்றி அஞ்சலி செய்வோருக்கும் கூட இது பொருந்தும்!
********* .