அஷ்டாவதானம் செய்த அதிசய முதலியார் – பகுதி 3 (Post No.3598)

Compiled by London swaminathan

 

Date: 2 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  5-40 am

 

Post No. 3598

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

“அதிசய முதலியார் செய்த அற்புதங்கள்” என்ற தலைப்பில் கடந்த இரண்டு நாட்களில் முதல் இரண்டு பகுதிகள் வெளியாகின. இது மூன்றாம் பகுதி.

 

1878-ஆம் ஆண்டு திருக்கழுக்குன்ற மலை அடிவார மஹா மண்டபத்தில் தசாவதானி ஜெகநாதபிள்ளை முன்னிலையில் கலியாண சுந்தர முதலியார் அஷ்டாவதானம் செய்து காண்பித்தார்.

 

அவ்வமயம் செங்கல்பட்டு வக்கீல் சுந்தர முதலியார் கேள்விக் கணை தொடுத்தார்– எங்கே புத்தகத்துக்கும் கரத்துக்கும் சிலேடை வைத்து செய்யுள் இயற்றுங்கள் பார்ப்போம் என்றார்.

 

மூடித் திறத்தலினால் மொய்ரேகையேயுறலால்

நாடியெவரு நண்ணுகையால்– கோடலினால்

வித்தகர்  கணத்துகின்ற வேதகிரி தண்பதியில்

அத்தமது புத்தகமுமாம் 

 

-என்று முதலியார் சிலேடை—(இரு பொருள்படும்படி செய்யுள்) — செய்தார்.

 

(அத்தம்=ஹஸ்தம்=கை=கரம்)

 

சிவக்கொழுந்து பண்டாரம் என்பவர், பால் என்னும் சொல் பத்து இடங்களில் வருமாறு கவி செய்க என்றார்.

 

பற்றுங்கொடிக்ககனும் பங்கயனும் காணாவும்

பற்றோலுரித்த வன்னப் பாலே பால் — மற்றப் பால்

மாட்டுப் பால் பூப்பால் மரப்பால் வனிதையர்பா

லாட்டுப் பாலப் பாலிப்   பால்

 

-என்று முதலியார் பாடினார்.

செய்யூர் ஜமீந்தார் வைத்தியநாத முதலியார் எழுந்து, நாடு என்று துவங்கி ஊர் என்று முடியுமாறு ஒரு கவி புனையுங்கள் என்றார்.

 

நாடுசேரன் சோழ நற்பாண்டியன் முதலோர்

தேடு பொருள் யாவுஞ்சிறக்குமா –னீடு தொண்டை

மண்டலத்திற் கோர்திலகன் வைத்தியநாதச் சீமா

னொண்டி   றலோடே வாழ்செய்யூர்

 

என்று முதலியார் பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

 

அஷ்டாவதானத்தில் வெறும் கவி பாடுதல் மட்டுமல்ல. பலர் கூட்டல், கழித்தல் போடச சொல்லுவர். மற்றும் சிலர் முதுகில் கற்களையோ, விதைகளையோ வீசி எத்தனை கற்களைப் போட்டென் என்று கேட்பார். தமிழ் இலக்கியத்தில் கேள்விகள் கேட்பர்.  இது போல எட்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். இவை எல்லாம் முடிந்தவுடன் செய்யூர் ஜமீந்தார் பரிசளிக்க முயன்றதைக் குறிப்பால் உணர்ந்து

 

காசுதனி லெனக்குக் கவலையில்லை பொற்சரிகைத்

தூசுதனிலேதுந் துயரிலை — வீசுபுக

ழீகட்டும் வள்ளா லியகற்றுக வென்னாசிரியர்

வீடுகட்டி வாழ்ந்திடவே –என்று பாடி முடித்தார்.

 

 

இதன் பொருளாவது: எனக்கு காசு பணம் வேண்டியதில்லை. என்னுடைய ஆசிரியரான தசவதானியாருக்கு வீடுகட்டிக் கொடுக்கவும் என்பதாகும். உடனே தசாவதானியார் ஜெகநாத பிள்ளைக்கு வீடு கட்டத் தேவையான பொருட்களை ஜமீந்தார் அனுப்பி வைத்தார்.

 

இதற்குப் பின்னர் ஜமீந்தாரின் வேண்டுகோளை ஏற்று திரிபுரசுந்தரி மாலை இயற்றினார்.

 

முதலியார், இடைகழி நாட்டுக்கு வந்திருக்கும் செய்தி கேட்டு ஜமீந்தார், யானையை அனுப்பி அவரை அழைத்துவர ஏற்பாடு செய்தார். ஆனால் அவர் ஒரு சீட்டுக் கவி மூலம் சின்னாட்களுக்குப் பின்னர் வருவதாக அறிவித்து சேயூரில் ஒரு வாரம் தங்கினார். அப்போது அவருக்குக் கிடைத்த பரிசுகள் அனைத்தையும் தன்னுடைய  ஆசிரியரான தசாவதானியாருக்கே கொடுத்துவிட்டார்.

 

திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து கமலபந்தமியற்றிப் பரிசு பெற்றார்.

பாம்பு கடித்தது

 

1879 ஆம் ஆண்டில் செங்கல்பட்டிலிருந்து திருப்போரூருக்குச் செல்லுகையில் ஒரு பாம்பு இவரைக் கடித்துவிட்டு படம் எடுத்து ஆடியது. இவர் தாம் இறந்து போய்விடுவோமென்றெண்ணி கையிலிருந்த கமலபந்தத்தின் பின்னால் தனது பெயர் முதலியவற்றை எழுதிவிட்டு தியானத்தில் மூழ்கி திருமுருகாற்றுபடையை ஜெபிக்கத் தொடங்கினார். அந்த    கமலபந்தம் திருப்போரூர் சிவசங்கரத் தம்பிரான் மீது இவர் இயற்றியதாகும். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தொட்டியன், பாம்பு கடித்த செய்தி கேட்டு அவருக்கு ஒரு மூலிகையைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னான். இவரும் குணமடைந்து தொட்டியனைத் தேடவே அவனைக் காணவில்லை. முருகப்பெருமானே வந்து உதவியதாக முதலியார் எண்ணினார். தம்பிரானிடம் நடந்த செய்திகளைச் சொல்லவே அவர் அன்று முருகனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளைச் செய்து முதலியாரை மகிழ்வித்தார்.

 

1879-ல் மேடவாக்கம் வெங்கடாசல முதலியார் குமாரத்தி பார்ப்பாத்தியம்மாளுக்கும் முதலியாருக்கும் திருமணம் நடந்தேறியது. காலப்போக்கில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. எஞ்சினீயர் அலு வலகத்தில் கிளர்க் உத்தியோகமும் கிடைத்தது.  பரங்கி மலைக்கு மாற்றப்படவே சென்னையில் மைத்துனர் கடையில் இருந்து கொண்டு சுதந்தர விருத்தியில் இறங்கினார். பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். பெரியபுராணம் முதலிய நூல்கள் பற்றி உபந்யாசம் செய்தார். நடராஜ சபை என்ற பெயரில் சமயப்  பணிகள் தொடர்ந்தன.

 

முதலியாரவர்கள், சிதம்பரத்தில் பாஸ்கர சேதுபதி மஹாராஜவைச் சந்தித்து வார்த்தை சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் சித்திரகவி சடாதர நாவலர் அவரைச் சந்த்க்க வந்தார். நாவலர், தான் கவிபாடும் வல்லமை படைத்தவர் என்று சொல்லவே, மெய்கண்டநாதன் என்பதை வைத்து அஸ்வபந்தம் பாடும்படி சொல்லிவிட்டுப் போஜனத்திற்கேகினார் பாஸ்கர சேதுபதி.

 

நாவலருக்கோ ஒரு சொல் கூட வரவில்லை. மஹாராஜா வந்தபின்னரும் மவுனமா இருந்து விட்டார். முதலியாரோவெனில் ஒரு செய்யுளை எழுதி ராஜா கையில் கொடுக்க, அது அஸ்வபந்தத்தில் அடைபட்டது. நாவலர் சென்றவுடன் முதலியாருக்கு பரிசுகள் கிடைத்தன. ஒரு சால்வையும் போர்த்தினர். வெளியே காத்துக் கொண்டிருந்த நாவலர், தனது இயலாமையைச் சொன்னவுடன் அவருக்கு முதலியார் அஸ்வபந்த இலக்கணம் கற்பித்து, அந்தச் சால்வையையும் அவருக்கே போர்த்தி அனுப்பினார். கலியாண சுந்தர முதலியார் மிகவும் கருணை உள்ளம் படைத்தவர்.

 

 

முதலியார் இயற்றிய நூல்கள், தனிப்பாடல்களின் பட்டியல் மிக நீண்டது. வாழ்நாள் முழுதையும் சைவ சமயத்துக்கும் தமிழ்ப் பணிக்கும் பயன்படுத்தியவர். 1914-ஆம் ஆண்டில் மணவழகு கலியாண சுந்தர முதலியாரின் சஷ்டியப்த பூர்த்தியின் போது அவருடைய மாணவர்கள் ஒரு மலரை வெளியிட்டு அவரது சாதனைகள், திருப்பணிகளைத் தொகுத்து வெளியிட்டனர். அதன் சுருக்கத்தை மட்டுமே நான் மூன்று கட்டுரைகளில் தந்தேன்.

 

–சுபம்–

 

Previous Post
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: