அரசன் என்பவன் தந்தை: தமிழ், சம்ஸ்கிருதப் புலவர்கள் பொன்மொழி (Post No.3620)

Written by London swaminathan

 

Date: 9 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 10-48 am

 

Post No. 3620

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

இறைவனை “அம்மையே! அப்பா!” என்றும் “தந்தையும் நீ, தாயும் நீ!” என்றும் ஆழ்வார்களும் நயன்மார்களும் பாடிப் பரவியுள்ளனர். குருவை “நீயே மாதா, நீயே பிதா! (த்வமேவ மாதா ச பிதா த்வமேவ)” என்று சிஷ்யர்கள் விதந்தோதினர். “அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே”– என்று சினிமாப் பாடல்களைக் கேட்டிருக்கிறோம். புறநானூற்றுப் புலவர்களும் இப்படிப் பாடியிருப்பது பலருக்கும் தெரியாது.

 

பழங்காலத்தில் அரசன் என்பவனை தந்தை போலக் கருதினர் என்று புறநானூற்றுப் புலவர்கள் வாய்மொழி மூலமும், காளிதாசனின் கவிகள் மூலமும் அறிய முடிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதே கருத்தை இமயம் முதல் குமரி வரையுள்ள கவிஞர்கள் பாடியிருப்பது பாரத கலாசாரம் ஒன்றே என்பதையும் இம்மண்ணில் பிறந்தோர் ஒரு வழியில்தான் சிந்திக்க முடியும் என்பதையும் காட்டும். கல்வெட்டுகளிலும், சாசனங்களிலும் கூட இக்கருத்து எதிரொலிக்கிறது!

 

தாயில்லார்க்குத் தாயாகவும், தந்தையில்லார்க்குத் தந்தையாகவும் இருப்பவன் ஆட்சிசெய்வோன்தான் என்று மனுவும், சாணக்கியனும் சங்க காலப் புலவர்களும் நவின்றனர். இது போன்ற கருத்துக்களை வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் காணமுடியாது. இது இந்திய நிலப்பரப்பின் தனித் தன்மையைக் காட்டுகிறது.

 

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று மோசிகீரனார் பாடுவார் (புறம்.186)

 

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நரிவெரூ உத்தலையார் (புறநானூறு-5) பாடிய பாடலில்,

“அருளும் அன்பும் இல்லாதோர் செல்லும் நரகம் பக்கம் போய்விடாதே! நீ காக்கும் நாட்டை குழந்தை வளர்ப்பவர் போல் காப்பாயாக– என்பார்

நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல்

குழவி கொள்பவரின் ஓம்புமதி

 

(நிரயம்= நரகம், குழவி= குழந்தை, ஓம்புமதி= காப்பாயாக)

 

வாட்டாற்று எழினியாதனைப் பாடிய மாங்குடிக் கிழார்

 

கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன் (புறம் 396)

உறவினர் இல்லாதோருக்கு அவன் உறவினன் – என்பார்.

கனியன் பூங்குன்றனோவெனில் உலகமே சொந்தம் “யாவரும் கேளிர்” என்பார் (பாடல்192)

மருதன் இளநாகனும் மருதக்கலியில் (கலித்தொகை 99), குழந்தைக்கு பால் தரும் தாய் போலவும், உலகத்துக்கு உதவும் மழை போலவும் நல்லாட்சி  நடத்தும் அரசன் எனப் பாராட்டுவார்:

 

குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து

மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்

பிழையாது வருதல் நின் செம்மையின் தர……….

 

இதே கருத்தைக் கல்வெட்டிலும் காண்க:-

 

தந்தையிலோர்க்குத் தந்தையாகியுந்தா யிலார்க்குத் தாயாகியு

மைந்தரிலோர்க்கு மைந்தராகியு மன்னுயிர்கட்கு யிராகியும்

 

இரண்டாம் இராசராச சோழனின் மெய்கீர்த்தி

 

ஒரு தந்தை மகனைக் காப்பது போல அரசன் காக்க வேண்டும் என்று மனு சொல்வான் (7-135)

 

ரகு வம்சத்தில் காளிதாசன் சொல்வான்:

திலீபன் தனது குடிமக்களுக்கு கல்வி அளித்தான்; ஆபத்திலிருந்து காப்பாற்றினான்; உணவு கொடுத்து வளர்த்தான். அவன் தந்தை போல எல்லாவற்றையும் செய்தான்; இதனால் பெற்றவர்கள், பெயரளவுக்குத்தான் தாய்-தந்தை என்ற பெயர் தாங்கினர் (1-24)

 

நீ தந்தை போல பிரஜைகளை ரக்ஷிப்பாய் (2-48)

 

அஜன், புது மணப்பெண்ணை, கணவன் அன்புடன் நடத்துவது போல குடிமக்களைக் காத்தான். சமுத்திரத்தில் கலக்கும் பெரியநதியும் சின்ன நதியும் தானே கணவனுக்குப் பிரியமானவள் என்று கருதுவது போல அனைத்து மக்களும் எண்ணினர் (சமுத்திரம்= கணவன்  )8-8

 

எவன் ஒருவன் உறவினனை இழந்தாலும் அந்த இடத்தை நான் (துஷ்யந்தன்) ஈடு செய்வேன் என்று மக்களிடம் பிரகடனம் செய்யுங்கள் (சாகுந்தலம் 6-25)

 

இதோ மன்னன் வந்துவிட்டார்: யார் தன் குடிமக்களைக் குழந்தைகள் போல கவனிக்கிறாரோ அவர்……… (5-3)

அர்த்தசாஸ்திரம்- 4-3, 7-16   இதே கருத்தைக் காணலாம்.

 

–subahm–

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: