Written by London swaminathan
Date: 11 FEBRUARY 2017
Time uploaded in London:- 19-59
Post No. 3628
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
இராம பிரானுக்கு அகஸ்தியர் என்ன, என்ன ஆயுதங்களை அளித்தார் என்று வால்மீகி ராமாயணத்திலும், கம்ப ராமாயணத்திலும் தகவல்கள் உள்ளன. வால்மீகி விஷ்ணுவின் ஆயுதங்களை மட்டும் சொல்கிறார். கம்பன் அத்தோடு சிவபெருமான் ஆயுதங்களையும் சேர்த்துச் சொல்கிறார். கம்பன் சொல்லும் தராசு உவமை படிக்க இன்பம் தருகிறது.
ஏற்கனவே விஸ்வாமித்ரர் கொடுத்த ஆயுதங்களின் பட்டியலை, பால காண்டத்தில் (அத்தியயம் 27, 28) வால்மீகி கொடுத்துள்ளார்.
ஆரண்ய காண்டத்தில் (அத்தியயம் 12) வால்மீகி கொடுக்கும் தகவல் இதோ:-
“இதுதான் விஷ்ணுவுக்குச் சொந்தமான சக்திவாய்ந்த தெய்வீக வில். இது விஸ்வகர்மாவினால் உருவாக்கப்பட்டது. தங்கமும் வைரமும் பதிக்கப்பட்டது.
இதோ, இது பிரம்மதத்த அம்பு. தவறாமல் தாக்கவல்லது; சூரியன் போன்றது. எனக்கு இதை இந்திரன் அளித்தான். இதோ கூரான அம்புகள் உடைய, எடுக்க எடுக்கக் குறையாத அம்பறாத்தூணி. தீப்போல ஜ்வலிக்கக்கூடியவை. இதோ வெள்ளி உறையும், அதிலுள்ள தங்க வேலைப்பாடுமிக்க வாளும்”.
“ஏற்கனவே அசுரர்களை அழிக்க விஷ்ணு பயன்படுத்திய அம்பு இது. இவை அனைத்தும் உனக்கு வெற்றியைத் தரும்” – என்று சொல்லி அகஸ்தியர் ஆயுதங்களைக் கொடுத்தார்.
இனி கம்பன் என்ன சொல்கிறான் என்று காண்போம்:-
அகஸ்தியர் கொடுத்த வாளினை ஒரு தராசுத் தட்டில் வைத்து மறுதட்டில் பூலோகம் முழுவதையும் வைத்தாலும் அந்த வாளுக்கு இணையாகாதாம். இது தவிர மேரு மலையை வில்லாக வளைத்து வானில் தொங்கிக் கொண்டிருந்த திரிபுரங்களையும் ( மூன்று பறக்கும் கோட்டைகள்) அழிக்க சிவபெருமான் பயன்படுத்திய வலிய அம்பையும் முனிவன் அளித்தானாம்.
இப்புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும் நல்கா
–அகத்தியப் படலம்
இதற்கு முன் கம்பன் கூறுவான்:
விழுமியது சொற்றனை இவ்வில் இவண்மேல் நாள்
முழுமுதல்வன் வைத்துளது மூ உலகும் யானும்
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளில்
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி
பொருள்:-
அகஸ்தியன் சொன்னது: சிறந்த கருத்தினைச் சொன்னாய் இராமா! இங்குள்ள இந்தவில் முற்காலத்தில், முழு முதல்வனான திருமால் வைத்திருந்தது. மூன்று உலகங்களும் நானும் வணங்கும் சிறப்பு பெற்றது இவ்வில்லை, குறையாமல் நிறைந்திருக்கும் புட்டிலொடு (அமபறாத்தூணி) பெற்றுக் கொள்க.
வால்மீகியும் கம்பனும் தரும் ஆயுதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு ஆராய்ச்சியே செய்யலாம். ஆரணிய காண்ட உரையில் இராவணன் பயன்படுத்திய ஆயுதங்களின் தகவலும் கிடைக்கிறது. அவனுடைய வாளின் பெயர் பெயர் சந்திரஹாசம்!
பாலகாண்டம் 27, 28 ஆம் அத்தியாயங்களில் வால்மீகி தரும் ஐம்பதுக்கும் மேலான ஆயுதங்களின் பெயர்கள் வியப்பூட்டும்! குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 பூக்களின் பெயர்களை அடுக்குவதுபோல வால்மீகி 50-க்கும் மேலான ஆயுதங்களின் பட்டியலைக் கொடுத்து அசத்திவிட்டார்.
சுபம்