ஜப்பானில் கற்கலாம், வா! (Post No.3649)

Written by S NAGARAJAN

 

Date: 19 February 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3649

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

3-2-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

ஜப்பானில் கற்கலாம், வா!

ச.நாகராஜன்

 

 

“சிறிது வளைவதை நான் பொருடபடுத்த மாட்டேன். ஜப்பானில்அனைவரும் வளைகின்றனர். அதை நான் விரும்புகிறேன்”. – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

 

உயிர் காக்கும் சாதனமான பாராசூட்களைத் தயாரிக்கும் ஜப்பானிய கம்பெனிக்கு சிக்கலான பிரச்சினை ஒன்று உருவானது. அந்த நிறுவனத்தின் தர நிர்ணயக் கட்டுப்பாடு அதிகாரி மிகத் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். அங்கு தயாரிக்கப்படும் நூறு பாராசூட்களில் ஆறு பாராசூட்கள் சரியாக விரிபடாமல் அதை மாட்டியவர்களைத் த்ரையில் மோத வைப்பதைத் தரக் கட்டுப்பாடு சோதனையாளர்களர் சோதனைகளில் கண்டு பிடித்தனர். என்ன செய்வது? இறுதியாக ஒரு முடிவுக்கு வந்த அதிகாரி சோதனைப் பிரிவில் வேலை பார்ப்பவர்களையும் பாராசூட்டைக் கடைசியாக மடித்து வைக்கும் பிரிவைச் சேர்ந்தவர்களையும அழைத்தார். தீர்க்கமான குரலில் அவர், “இன்றிலிருந்து இந்த இரு பிரிவுகளும் ஒன்றாக இணைக்கப்படுகிறது. யார் மடித்து வைத்தார்களோ அவர்களே சோதனையின் போது அதை மாட்டிக்கொண்டு குதிக்க வேண்டும். அதுவும் நூறு பாராசூட்களில் ஏதேனும் சில மட்டுமே சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்படும்” என்றார். விளைவு?

அதற்குப் பின்னர் அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நூறு பாராசூட்களும் நூறு சதவிகிதம் தரக் கட்டுப்பாட்டுச் சோதனையில் தேறியதோடு நிறுவனம் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்குச் சென்றது.

 

 

 

ஜப்பானில் புதிய புதிய உத்திகள் ஆயிரத்தி தொள்ளாயிர்த்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தோன்றி உலகை அசத்தின. டோடல் க்வாலிடி கண்ட்ரோல் எனப்படும் டி.க்யூசி(Total Quality Control), ஃப்ளெக்ஸிபிள் மானுபாக்சரிங் சிஸ்டம் (Flexible Manufacturing System), ஜஸ்ட் இன் டைம் (Just in Time) போன்ற ஏராளமான புதுப் புது உத்திகள் வியக்கத்தக்க மாறுதலை ஜப்பானில் ஏற்படுத்தவே உலகெங்கும் உள்ள பெரும் நிறுவனங்கள் ஜப்பானை அதிசயத்துடன் பார்த்தன. எல்லா நிறுவனங்களும் தங்கள் தொழில் நுட்பப் பிரிவினரை, “ஜப்பானில் கற்கலாம், வா: என்று அழைத்தனர்.

 

 

 

இந்த மேம்பாட்டிற்கான காரணம் ஜப்பானிய மொழியில் உள்ள ஒரு வார்த்தை தான். ‘வா’ (Wa) என்ற வார்த்தை தான் அது! வா என்ற வார்த்தையை இதர  மொழிகளில் எளிதில்  மொழிபெயர்க்க முடியாது. ஏனெனில் அது ஆழ்ந்த பொருளைக் கொண்டது. சாதாரணமாக லயம் என்று அதைச் சொல்லலாம். ஆனால் வா என்பது லயம் மட்டுமல்ல. அது சமாதானம். ஆழ்ந்த உள்ளார்ந்த அமைதி,சமச்சீர்த்தன்மை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்.

ஜப்பானில் பல நூறு ஆண்டுகளாக இந்த வா வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நிறுவனத்தில் சேர்ந்த ஒரு ஊழியர் அந்த நிறுவனத்துடன் எழுத்து பூர்வமான ஒரு உடன்பாட்டைச் செய்வதில்லை. வாழ்நாள்  முழுவதும் அந்த நிறுவனத்தில் அவர் வேலை பார்ப்பார். அவரை அந்த நிறுவனம் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும். இதன் அடிப்படை ‘வா’ தான். ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதித்து மரியாதையுடன் பண்பாக, அன்பாக, நியாயமாக நடந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்.

வாடிக்கையாளர் ஒருவர் கிடைத்தார், அவர் தலையில் எதையாவது கட்டி விடுவோம், விற்பனைக்குப் பின் சேவை என்று வந்தால் அலைய விடுவோம் என்பதை அங்கு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

 

 

அறிவியல் பூர்வமாக ஜப்பான் இன்று ரொபாட் இயலில் உலகில்  முன்னணி இடத்தைப் பிடித்திருந்தாலும் இந்த வா என்ற வார்த்தை தான் ஜப்பானை உண்மையில் முதலிடத்தில் நிறுத்தி நிலைக்கச் செய்கிறது.

 

 

குரு- சிஷ்யர், பெரியோர்- சிறியோர், பெற்றோர்- மகன், மகள் ஆகியோரிடையே பேச்சில் உரிய மரியாதை தரப்பட வேண்டும். அத்துடன் பாடி லாங்வேஜ் எனப்படும் உடல் பேசும் மொழியும் சரியாக இருக்க வேண்டும். வளைந்து வணக்கம் செலுத்துவதில் கூட எப்படி எந்த அளவு வளைய வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. இதை யாரும் மீற மாட்டார்கள்.

 

 

இந்த ‘வா’ என்ற அடிப்படையான அறப் பண்பை விளக்கும் ஏராளமான கதைகள் ஜப்பானில் உண்டு. இவற்றைப் பள்ளிகளிலும் பெரும் நிறுவனங்களிலும் பாடமாக நடத்துவர்.

இந்தக் கதைகளுக்கு நீதிபதி ஊகா கதைகள் என்று பெயர்.

ஒரே ஒரு கதையை மட்டும் இங்கு காணலாம்.

 

 

பாய் முடையும் சபுரோபி என்ற ஒருவர் ஈடோ நகரில் வாழ்ந்து வந்தார். ஆண்டு முடிய இருக்கும் நேரத்தில் புதிய வருட வியாபாரத்திற்காக மூன்று தங்க நாணயங்களை  ஒரு லேவாதேவிக்காரரிடமிருந்து அவர் கடன் வாங்கினார். வீட்டுக்கு வரும் வழியில் அந்த தங்க நாணயங்கள் வைத்திருந்த பை எங்கேயோ கீழே விழுந்து தொலைந்து விட்டது.

 

 

இதற்கிடையைல் சோஜுரா என்ற ஒரு தச்சர் யானைஹரா நதிக் க்ரையோரமாக நடந்து வந்த போது ஒரு பை கிடப்பதைக் கண்டு அதை எடுத்துப் பார்த்தார். அதில் மூன்று தங்க நாணய்ங்களும் பாய் முடையும் சபுரோபி என்ற வார்த்தைகள் உள்ள ஒரு பேப்பரும் இருந்தது. எப்படியாவது சபுரோபியைக் கண்டுபிடித்து அதைக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்த அந்த ‘நாணயஸ்தர்’ நகரெங்கும் பகுதி பகுதியாக அலைந்தார். நான்கு நாட்கள் ஓடி விட்டன. ஆனாலும் சோஜுரா தன் முயற்சியைக் கை விடவில்லை.

 

 

நான்காவது நாள் பாய் முடையும் ஏராளமான பேர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்ற அவர் ஒருவழியாக சபுரோபியைக் கண்டுபிடித்து சந்தோஷமாக அவரது பையைக் கொடுத்தார். ஆனால் சபுரோபியோ அதை வாங்க மறுத்து விட்டார்.

 

 

தொலைந்து போனது தொலைந்து போனது தான் என்றும் அதைத் தான் வாங்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்

சோஜுராவோ,;இது என்னுடையதில்லை. உங்களுடையதே, இதற்காகவா நான் நான்கு நாட்கள் அலைந்தேன். இதை வாங்கித் தான் ஆக வேண்டும்:” என்று வற்புறுத்தினார். பெரிய சண்டை ஆரம்பித்தது. கூட்டம் கூடியது. அனைவரும் கடைசியில் நியாயஸ்தலம் சென்றனர்.

 

நீதிபதி ஊகா நடந்ததை அனைத்தையும் நிதானமாக கவனத்துடன் கேட்டார். பின்னர், :நீங்கள் இருவர் சொல்வதும் சரியானதே. ஆகவே இதை அரசின் கஜானாவில் சேர்க்க உத்தரவிடுகிறேன்” என்று தனது தீர்ப்பைக் கூறினார். அனைவரும் தீர்ப்பைக் கேட்டு மகிழ்ந்தனர்.

 

 

நீதிபதி ஊகா இத்துடன் நிறுத்தவில்லை. இப்படி மிகவும் நியாயமாக நடந்து கொண்ட உங்களைப் பாராட்டி அரசாங்கம் வெகுமதி தரவும் உத்தரவிடுகிறேன். உங்கள் இருவருக்கும் மூன்று தங்க நாணயங்களை அரசு வழங்க உத்தரவிடுகிறேன் என்றார். வெகுமதி இருவருக்கும் வ்ந்தது. தங்கள் த்ங்கள் பையைத் திற்ந்து பார்த்த சபுரோபி மற்றும் சோஜுரா திகைத்தனர், ஏனெனில் ஒவ்வொரு பையிலும் இரு தங்க நாணயங்கள் இருந்தன. நீதிபதி ஊகாவோ மூன்று தங்க நாணயங்களை அரசு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இப்போது நான்காவது தங்க நாணயத்தை என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் அவர்கள் ஊகாவிடம் வந்தனர்.

 

 

அவர்கள் கூறியதைக் கேட்ட ஊகா அரசு சரியாகவே பரிசு வழங்கி இருக்கிறது என்பதை விளக்கினார் இப்படி:

“மூன்று நாணயங்களையே அரசு வழங்கியது. ஆனால் இப்படிப்பட்ட அருமையான குடிமக்களைக் கண்டு மகிழ்ந்த நான் எனது சார்பில் ஒரு நாணயத்தைப் பரிசுத்தொகையில் சேர்த்தேன். ஆக நான்கு நாணயங்களில் ஆளுக்கு இரண்டு வீதம் வழங்கப்பட்டிருக்கிறது. எனக்கு இதில் ஒரு நாணயம் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மூன்று நாணயங்களை இழந்த சபுரோபிக்கு இரண்டு மீண்டும் கிடைத்து விட்டதால் அவருக்கு இழப்பு ஒரு தங்க நாணயம் தான். இதைத் திருப்பிக் கொடுத்த சபுரோபிக்கு  மூன்று நாணய்ங்களில் இரண்டு திருப்பிக் கிடைத்து விட்டதால் அவருக்கும் இழப்பு ஒரு நாணயம் தான். ஆக ஊகா, சபுரோபி, சோஜுரா ஆகியோருக்கு இழப்பு சரியான விகிதத்தில் இருக்கிறது; ஊகாவினால் நீதியும் நிலை நாட்டப்பட்டிருக்கிறது” – நீதிபதி ஊகாவின் தீர்ப்பைக் கேட்ட அனைவரும் வியந்து பாராட்டி மகிழ்ந்தனர்.

 

 

இது தான் ஜப்பானில் உள்ள வா என்ற வார்த்தையின் பண்பு. இந்த வா என்ற அஸ்திவாரத்தின் மீது தான் கம்பீரமாக ஜப்பான் எழுந்து தன்னை உலக அரங்கில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.

 

 

இப்போது வா என்பதன் அர்த்தம் நன்கு புரிகிறதல்லவா? ஆகவே.

ஜப்பானில் கற்கலாம், வா! 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

பிரபல அமெரிக்க விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸன்  ஓஹையோவில் பிறந்தார். அவரைப் பள்ளியில் சேர்த்த போது அவர் நன்றாகப் படிக்கவில்லை.அவரது வகுப்பு ஆசிரியர் ‘எடிஸனுக்கு பள்ளிப் படிப்பு என்பதே ஒரு தண்டம் தான்,அதனால் காலமும் பணமும் தான் வேஸ்ட் ஆகிறது’ என்று விமரிசனம் செய்தார்.

ஆனால் எடிஸனின் தாயார் தளராத மனம் உடைய அருமையான பெண்மணி. அவர் ஆசிரியர் கூறியதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு தானே எடிஸனுக்கு ஆசிரியையாக மாறினார். தைரியம், தன்னம்பிக்கை, எதையும் பகுத்து ஆராயும் பண்பு என பல நற்குணங்களை தாயார் அவருக்கு ஊட்டவே அதற்கு நல்ல பலன் இருந்தது.

 

 

அவருக்கு பன்னிரெண்டு வய்தான போது ஒரு நாள் அவர் ஒரு ட்ரெயினில் தனது சோதனையை நடத்த தீ  மூட்டியபோது அதைக் கண்டு திடுக்கிட்ட  கண்டகடர் அவரது காதை நன்கு திருகி விட்டார். அதனால் அவருக்குக் காது கேளாமல் போய்விட்டது. ஆனல் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இன்னும் அதிக கவனத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபட முடியும் என்று அவர் எண்ணினார். 12ஆம் வயதில் போர்ட் ஹ்யுரானிலிருந்து டெட்ராய்ட் வரை ட்ரெயினில் செய்தித்தாள்களை விற்று வந்தார்.

 

 

ஒரு நாள் ரயில்வே ஏஜண்டாக இருந்த மக்கென்ஸி என்பவரின் மூன்று வ்யதுக் குழந்தையான ஜிம்மி, க்ராண்ட் டிரங்க் ரெயில்ரோடில் வந்து  கொண்டிருந்த ஒரு ரெயிலின்  முன்னால் அரைபட இருந்தது. பதிநான்கே வயதான எடிஸன் துணிச்சலாக அந்தக் குழந்தையை விபத்திலிருந்து காப்பாற்றி விட்டார். இதனால் மனம் மகிழ்ந்த மக்கென்ஸி அவருக்கு டெலகிராபி தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார். அது எடிஸனின் வாழ்வில் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

பின்னாட்களில் தான் சாதித்த அனைத்துமே தன் தாயாரினால் தான் என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்,

****

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: