Written by London swaminathan
Date: 20 FEBRUARY 2017
Time uploaded in London:- 20-54
Post No. 3654
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்தில் பழைய அரச வம்சம் (Old Kingdom) முடிந்தவுடன், கி.மு.2200 வாக்கில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன; கடவுள் என்று கருதப்பட்ட மன்னனின் அதிகாரங்கள் குறைந்து மனிதன் என்ற நிலையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார். மன்னரின் கால்களை முத்தமிடுவது கிடைத்தற்கரிய பாக்கியமாக கருதப்பட்ட நிலை மாறி, மன்னரைக் கவிழ்க்கும் முயற்சிகள் பெருகின. இதை நேரில் கண்ட ஒரு புலவர் நமக்காக எழுதிவைத்துச் சென்றுள்ளார். சுமார் 4000 ஆண்டுகளுக்கு பின்னர் படித்தாலும் அதிலுள்ள கவிநயம் ரசிக்கத்தக்கதாக உள்ளது. இதே போல காளிதாசனும் ரகுவம்சத்தில் தோன்றிய கடைசி சில அ ரசர்கள் பற்றிப் புலம்பியுள்ளார். காஷ்மீரின் சரித்திரத்தை ராஜதரங்கிணி என்ற நூலாக எழுதிய கல்ஹணரும் இதே போல காஷ்மீரில் இந்து சாம்ராஜ்யம் எப்படி சரிந்தது என்று கவி பாடியுள்ளார். கவிஞர்கள் என்றுமே உண்மை விளம்பிகள்!
இந்தக் கவிஞரின் பெயர் இபுவேர் (Ipuwer) அல்லது அய்புவேர. அவருடைய கவிதை சிதைந்த நிலையிலேயே கிடைத்துள்ளது. ஆதிகால எகிப்திய இலக்கியத்தில் சிறந்த ஒரு பகுதி என்று கருதப்படுகிறது. இபுவேர் சொல்கிறார்:
“அரசன் கிழவன் ஆகிவிட்டான்; அரண்மனைக்குள் பாதுகாப்பாக உள்ளான். அவனுக்குத் தெரியுமா மக்கள் படும்பாடு! அவனைச் சுற்றியுள்ள அதிகாரிகள், அவனுக்கு இதுபற்றித் தெரியாமல் மறைத்துவிட்டனர். எகிப்தைப் பீடித்துள்ள நோய்கள் இரண்டு; அதிகமான வெளிநாட்டினர் தங்கு தடையின்றி உள்ளே வந்துவிட்டனர். அத்தோடு பழைய சமூக நிலை தலை கீழாக மாறிவிட்டது
இதைப் பற்றித்தான் எல்லோரும் புகார் செய்கின்றனர். வேலைக்காரிகள், மஹாராணிகளின் இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள்; அதிகாரிகள் சட்டவிரோத ஆட்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டியுள்ளது. இளவரசர்களின் குழந்தைகளை சுவரில் மோதி கொல்கின்றனர்”.
கடவுள்- அரசன் தொடர்பு மாறியவுடன் அரசன்–மக்கள் தொடர்பும் மாறிவிட்டது நாலாவது (Fourth Dynasty) அரச வம்ச மன்னன் ஒருவன், தனக்கு வேண்டிய ஒரு அதிகாரியை தனது காலை முத்தமிட அனுமதித்தான். அதை அந்த அதிகாரி பெரிய பாக்கியமாகக் கருதினார். இவையெல்லாம் பிறகாலத்தில் நினைத்தும் பார்க்கமுடியாதவை
எகிப்தியர்களே இதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகளைப் பொற்காலம் (Golden Age) என்று வருணித்தனர். ரே (Re) என்னும் கடவுளே அக்காலத்தில் ஆண்டதாகக் கருதினர். ஆனால் இபுவேர் என்ற கவிஞர் சொல்கிறார்:
“ரே- வுக்கு வயதாகிவிட்டது! அவருடைய எலும்புகள் வெள்ளி ஆகிவிட்டன; சதை தங்கம் ஆகிவிட்டது; அவருடைய தாடி நீலநிறக் கற்களாகிவிட்டன.”
கஷ்டகாலத்திலும் கூட கவிஞரின் கற்பனைக்கு யாரும் தடை போட முடியவில்லை. அவர் வருணித்த பொருள்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து எகிப்துக்குள் வந்தவை.
இபுவேர் கி.மு.2000ல் வாழ்ந்தவர் என்றும் அவர் வருணிப்பது அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை என்றும் கருதப்படுகிறது. ஆனால் அவரது கவிதையை தவிர வேறு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை.
காளிதாசன் புலம்பல்
உலகப் புகழ்பெற காளிதாசனும் ரகு வம்சத்தை துவக்கத்தில் புகழ்கிறான்; பிற்காலத்தில் அது க்ஷீண திசையை அடந்தபோது இகழ்கிறான். மக்களை மதிக்காத மன்னன் ஜன்னல் வழியே கால்களை நீட்டித் தெரியும்படி வைத்து மக்களை அவமானப் படுத்துகிறான்.
ரகுவம்சத்தில் 19-ஆவது சர்கத்தில் அக்னிவர்ணன் என்ற மன்னன் பற்றிக் காளிதாசன் கூறுவதாவது:-
அழகான ஸ்த்ரீக்களுடன் வசிக்கும் அக்காமுகனது வீட்டில் எப்போதும் மிருதங்க ஒலி கேட்டது. முதல் நாள் கொண்டாட்டத்தை விஞ்சும் அளவுக்கு இரண்டாம் நாள் கொண்டாட்டம் இருக்கும். அந்தப் புரத்தை விட்டு அவன் நகரவில்லை. ஜனங்களைக் காண விரும்பவில்லை.
மந்திரிகள் கெஞ்சியதால் ஒரு முறை மக்களுக்கு தரிசனம் தந்தான். எப்படி என்றால் ஜன்னல் வழியே கால்களை மட்டும் நீட்டினான. அப்பாதத்தையே வணங்கி மக்கள் பேறுபெற்றதாக எண்ணி மகிழ்ந்தனர். மதுவிலும் மாதுவிடத்திலும் காலம் கழித்தான். அவனே மிருதங்கம் வாசித்து ஆடல் அழகிகளை ஆடச்செய்தான். வேலைக்கரிகளிடம் காதல் கொண்டான்.. இறுதியில் நோய்வாய்ப்படு இறந்தவுடன் அவன் மனைவி அரசாண்டாள்.
எகிப்திய கவிஞர் புலம்பல் போலவே காளிதாசனும் புலம்பியது குறிப்பிடத்தக்கது.
இதே போல இலங்கையில் நடந்த தீய செயல்களை மஹாவம்சமும் காஷ்மீரில் நடந்த தீய செயல்களை கல்ஹணரின் ராஜதரங்கிணியும் விளக்கமாகத் தந்துள்ளன.
—சுபம்–