தமிழ் இளவரசி செய்த அற்புதம்! (Post No.3704)

Written by London swaminathan

 

Date: 8 March 2017

 

Time uploaded in London:- 10-21 am

 

Post No. 3704

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஆதிமந்தி – ஆட்டனத்தி காதல் கதை பழந்தமிழ்க் காலத்தில் பெரிதும் பேசப்பட்ட விஷயம். தமிழ்க் காவியம் சிலப்பதிகாரம் இதை ஒரு அற்புதச் செயலாகவே காட்டுகிறது. கண்ணகி பட்டியலிடும் ஆறு அற்புதச் செயல்களில் ஆதி மந்தி– ஆட்டன் அத்தி கதையும் ஒன்றாகும்.

 

ஆதி மந்தி என்பவள் கரிகால் சோழனின் அருந்தவப் புதல்வி; அவள் ஒரு கவிஞரும் கூட. அவள் பாடிய பாடல், சங்க இலக்கிய நூலான குறுந் தொகையில் இடம் பெற்றுள்ளது. சங்க காலத்திலேயே அவள் புகழ் பரவியதால் பரணரும் வெள்ளிவீதி வீதியாரும் பாடி இருக்கின்றனர். அவ்விருவரும் காவிரி நதி விபத்து பற்றி மட்டும் குறிப்பிடுவர். ஆனால் சங்க காலத்திற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோ அடிகள் இதை ஒரு அற்புதச் செயலாக வருணிக்கிறார்.

கதை இதுதான்:-

 

காவியில் புதுப் புனல் வந்தது. எல்லோரும் ஆடி பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். சோழன் மகள் ஆதி மந்தியும், சேர நாட்டரசனும், ஆதியின் கணவனுமான ஆட்டன் அத்தியும் நீரில் குதித்தான். இருவரும் குடைந்து குடைந்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரெனப் பெரு வெள்ளம் வந்து அத்தியை அடித்துச் சென்றது. சோழன் மகளின் கணவன் அல்லவா?  உடனே எல்லோரும் உதவிக்கு ஓடோடி வந்தனர். ஆனால் காவிரியின் வெள்ளத்திற்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. அத்தி இரு கைகளையும் உயர்த்தியவாறே ஆற்றில் சென்று கொண்டிருந்தான்.

 

ஆதிக்கு பைத்தியமே பிடித்துவிட்டது. நதிக்கரை ஓரமாகக் காப்பாற்றுங்கள்! என் கணவன் அத்தியைக் காப்பாற்றுங்கள் என்று கதறிக்கொண்டே ஓடினாள். அவள் கதறலைக் கேட்டு உருகிப்போன காவிரித்தாய் கணவன் அத்தியைக் கரை சேர்ப்பித்தாள் ஆதி, அவனை ஆரத்தழுவி மனம் மகிழ்ந்தாள்.

 

எமனுடன் போராடி கணவன் உயிரை மீட்டு வந்த சாவித்ரியை அறியாத இந்தியன் இல்லை. ஆதி மந்தி “தமிழ் சாவித்திரி” ஆவாள்.

 

அற்புதமா? கட்டுக்கதையா?

 

இந்த நதி விபத்து பற்றி சங்க காலத்தில் பாடிய பரணரும், வெள்ளி வீதியாரும் இதை ஒரு விபத்தாகவே காட்டினர். அத்தி உயிர் மீண்டது பற்றி எதுவும் சொல்லவில்லை. இது பரணர் காலத்துக்கும் முன்னால் நடந்த விபத்து. கரிகால் சோழனின் ஆட்சிக்காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்று கருதப்படுகிதுறது. சிலப்பதிகரம் இதற்கு 300, 400 ஆண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்படிருக்கலாம். அதற்குள் இது அற்புத ‘வடிவு’ பெற்றிருக்கலாம். ஆனால் அற்புதம் நிகழாவிடில் இந்த விபத்தை எத்தனையோ விபத்துகளில் ஒன்றாகக் கருதி பாடாமலேயே விட்டி ருக்கலாம். சிலம்போ இதை 6  அற்புதங்களில் ஒன்றாகக் காட்டுகிறது.. ஆகவே அற்புதம் என்று இல்லாவிடினும், யாரோ சில மீனவர்கள் அவரைக் காப்பாற்றி ஒப்படைத்திருக்கலாம்.

 

இதோ சிலப்பதிகாரச் செய்யுள்:–

 

………………………………………………………………………….உரைசான்ற

மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன்

தன்னைப் புனல் கொள்ளத் தான் புனலின் பின்சென்று

கன்னவில் தோளாயோ!” என்னைக் கடல் வந்து

முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு,

பொன்னங்கொடி போலப்போந்தாள்

வஞ்சின மாலை, சிலம்பு.

பொருள்:-

 

புகழ் மிக்க பேரரசன் கரிகால் வளவன், அவன் மகள் ஆதி மந்தி, வஞ்சிக் கோமானான ஆட்டனத்தியை மணந்தாள். அவனை ஒரு சமயம் காவிரிப் பெருவெள்ளம் அடித்துச் சென்றது. அப்போது அவள் நீரோட்டத்தின் வழியே கரை மீது தொடர்ந்து சென்றாள். இறுதியில், கடற்கரையில் நின்று அவன் கடலுள் அடித்துச் செல்லப்பட்டது கண்டு,  ‘மலையொத்த தோளாயோ!’ என்று கதறினாள். கடல் அவனைக் கொண்டுவந்து அவள் முன்னர் நிறுத்திக் காட்டியது. அப்படிக் காட்டவும், அவனைத் தழுவிக்கொண்டு பொலிவுபெற்ற பூங்கொடி போல ஊர் திரும்பினாள்”

 

வெள்ளி வீதியார் பாடுகிறார்:

 

இன் இசை ஆர்ப்பினும் பெரிதே, யானே

காதலர் கொடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து

ஆதிமந்தி போல், பேதுற்று

அலந்தனென் உழல்வென்கொல்லோ – பொலந்தார்

–அகநானூறு, பாடல் 45

 

தோழிக்குத் தலைமகள் சொல்லியது: ” தலைவர் பிரிந்து சென்றார். என் மாமை நிற மேனியில் பசலை உண்டாயிற்று. இதனால் அலர் (Gossip) எழுந்தது. அவரைப் பிரிந்த நான், கரிகால் சோழன் மகள் ஆதிமந்தியைப் போல் வருந்துவேனோ! நான் இறந்து படுவேன்! திண்ணம்!”

பரணர் பாடியது:

 

……………………………………’அந்தில்

கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்

வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்

சுரியல் அம் பொருநனனைக் காண்டிரோ?’ என

ஆதிமந்தி பேதுற்று இனைய

சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்

அம் தண் காவிரி போல

கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின், யானே

அகம்.76

 

வேறு ஒருத்தியின் கணவனைக் கைப்பற்றுவேன் என்று பரத்தை, மற்றவர் காதில் விழும்படி சூளுரைத்தது:–

 

முற்காலத்தில் ஒரு நாள் ஆதி மந்தி என்பவள் தன் கணவனைக் காணாமல், “கச்சினை உடையவனும், கழலை அணிந்தவனும், தேன் ஒழுகும்  மாலை அணிந்த மார்பை உடையவனும், பல்வேறு வகை சிறந்த மாலைகளையும், சுருட்டை முடியுள்ள தாடியையும் உடையவனுமான என் கணவன் ஆட்டனத்தியை நீவீர் கண்டதுண்டோ?” என்று வினவினாள். ஆயினும் விடை பெறவில்லை. அதனால் பெரிதும் மயங்கி வருந்தினாள்.. அணையை அழித்துக் கரைகளில் பரவி நேர் கிழக்காகப் பாயும் அழகிய குளிர்ந்த காவிரிப் பேராறு ஆட்டனத்தியை கைக் கொண்டது போல இப்போது யான் சூளுரைக்கிறேன். அவனை முழுதும் கைப்பற்றப் போகிறேன். அவனுடைய காதலி என்ன செய்வாளாம்?

 

 

—சுபம்—

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: