பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா! (Post No.3715)

Written by S NAGARAJAN

 

Date: 12 March 2017

 

Time uploaded in London:-  5-41 am

 

 

Post No.3715

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

அறிவியல் துளிகள் தொடரில் ஏழாம் ஆண்டு துவங்குகிறது. ஏழாம் ஆண்டின் முதல் கட்டுரை பாக்யா 3-3-2017 இதழில் வெளியாகியுள்ளது.

 

 

பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா!

ச.நாகராஜன்

 

“உணர்ச்சியைப் போல கவனம் என்பதும் வியப்பளிக்கும் ஒரு விஷயமே” – ஏரியன் மாக்

 

பார்வையுள்ள அனைவ்ருமே எதிரில் இருப்பதை சரியாகப் பார்க்கிறார்களா? இதில் என்ன சந்தேகம், பார்க்கத் தான் பார்க்கிறார்கள் என்று பதில் சொன்னால் அது உணமையில்லை என்கிறது அறிவியல்.

 

 

எதிரில் நண்பர் ஒருவர் நிற்கும் போது மனதில் எதையோ ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கும் போது அவரைப் பற்றிய உணர்வே நமக்குத் தோன்றுவதில்லை. அவர் நம்மை அசைத்து ஆட்டி என்ன ஆயிற்று உனக்கு என்று கேட்கும் போது ‘சாரி, கவனம் எங்கேயோ இருந்தது’ என்கிறோம்.

 

 

 

இப்படி மனம் கண் என்ற புலனுடன் இயையாமல் இருக்கும் போது எதிரில் இருப்பதைப் பார்க்க முடிவதில்லைல் ஆனால் மனம் கண்ணுடன் இயைந்து இருக்கின்ற போது, கண் பார்வை சரியாக இருந்தும் எதிரில் இருப்பதை சரியாக பலரும் பார்ப்பதில்லை என்பதைத் தான் அறிவியல் சொல்கிறது.

இதற்கு இன் அட்டென்ஷனல் ப்ளைண்ட்னெஸ் (Inattentional Blindness) கவனமற்றுக் குருடாயிருத்தல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

 

கிறிஸ்டோபர் சாப்ரில் மற்றும் டேனியல் சைமன்ஸ் (Christopher Chabril and Daniel Simons)  ஆகிய இரு விஞ்ஞானிகள் இதற்காக ஒரு தனிச் சோதனையையே செய்துள்ளனர். அது மாயக் கொரில்லா என்ற பொருள்படும் இன்விஸிபிள் கொரில்லா சோதனை என்று அழைக்கப்படுகிறது.

 

 

இந்த விஞ்ஞானிகள் தன்னார்வத் தொண்டர்கள் சிலரை சோதனைக்கு அழைத்தனர். சோதனையில் வீடியோ ஒன்று போட்டுக் காண்பிக்கப்பட்டது. அது ஒரு பேஸ்க்ட்பால் விளையாட்டு. அதில் விளையாடியது இரு அணிகள். வெள்ளை உடை அணிந்து ஒரு டீம்;; கறுப்பு உடை அணிந்து இன்னொரு டீம். வீடியோ பார்ப்பதற்கான  மொத்த நேரமே ஒரு நிமிடம் தான்.

 

 

சோதனைக்கு வந்த பார்வையாளர்கள் வெள்ளை உடை அணிந்தவ்ர்கள் எத்தனை முறை பந்தைப் போடுகிறார்கள் என்று சொல்ல வேண்டும், அவ்வளவு தான்!

 

இந்த விளையாட்டில் பாதியில் கொரில்லா உடை அணிந்து ஒரு பெண் காட்சியில் தோன்றி நடந்து வந்து நின்று தனது மார்பில் ஒரு தட்டு தட்டிக் கொண்டு பின்னர் நடந்து சென்று விடுவார். அவர் காட்சியில் தோன்றும் மொத்த நேரம் ஒன்பது விநாடிகள் தான்.

படம் முடிந்த பிறகு அந்தப் பெண்மணியைப் பார்த்தவர்கள் யார் யார் என்று கேட்ட போது பாதிப் பேர் அப்படி ஒரு பெண்மணி விளையாட்டின் இடையே வரவே இல்லை என்றனர்.

 

 

இது தான் மாய கொரில்லா சோதனை.

 

இன்னும் பல சோதனைகளில் இப்படி ஒரு மாய கொரில்லா இடையே வருவார் என்று சொன்ன போதும் கூட அதைப் பலரும் கவனிக்கத் தவறி விட்டனர்.

 

மக்களில் பெரும்பாலானோர் திடீரென்று தோன்றும் ஒன்றைப் பொதுவாக கவனிப்பதில்லை.

 

 

 

இன்னொரு சோதனை ஒன்று நடத்தப்பட்டது.

யாரோ ஒரு அன்னியர் ஒரு பெண்மணியை திடீரென்று வழியில் பார்த்து ஒரு முகவரியைச் சொல்லி அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். அப்படிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இடையே இரண்டு மனிதர்கள் ஒரு பெரிய கதவை தூக்கிக் கொண்டு நடக்கின்றனர். பிறகு அந்தப் பெண்மணி முகவரியில் உள்ள இடத்திற்கு எப்படிச் செல்வது என்று விவரிக்கிறார். ஆனால் அவர் விவரிப்பது இன்னொரு நபரிடம். கேள்வி கேட்டவ்ர் அவரில்லை. அவரை விட மாறுபட்ட உடை, உயர்ம் இருந்தாலும் கூட அதைப் பார்ப்பவர்கள் இந்த மாறுதலை உடனடியாகக் கண்டுபிடிக்கவில்லை.

 

 

மேலை நாட்டில் ஒரு முக்கிய கேஸில் ஒருவர் இதனால் தண்டனையையே அடைந்தார். 1995ஆம் ஆண்டில் நடந்தது இது. ஆபீஸர் கெனி கான்லி என்பவர் குற்றவாளி என்று சந்தேகப்பட்ட

ஒருவரைத் துரத்திக் கொண்டு ஓடினார். அதே சமயம் ஒரு புலனாய்வு ஆபீஸர் ஒருவரை அவரது சக அதிகாரிகள் அடித்துக் கொண்டிருந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் கான்லி தான் எதையும் பார்க்கவில்லை என்று சாட்சி சொன்னார். நீதிபதி அதை நமபவில்லை. அவர் தனது நண்பர்களுக்குச் சாதகமாக அந்த சண்டையைப் பார்க்கவில்லை என்று சொல்வதாகக் கூறி அவருக்கு பிழை சாட்சியம் சொன்னதற்காக தண்டனையைத் தந்தார்.

 

 

பாவம் கான்லி. இந்த இன் அட்டென்ஷனல்

ப்ளைண்ட்நெஸ்ஸுக்கு உள்ளான காரணத்தினால் தண்டனை அடைய நேர்ந்தது.

 

 

பொதுவாக் ஐம்பது சதவிகதம் பேருக்கு இந்த மாய கொரில்லா சோதனை ஒரு பெரிய வேதனையைத் தந்து விடுகிறது.

‘தி இன்விஸிபிள் கொரில்லா’ (The Invisible Gorilla( என்ற தங்களது புத்தகத்தில் மனிதர்களின் பார்வைக் கோளாறு பற்றி இந்த இரு விஞ்ஞானிகள் அழகுற விளக்குகின்றனர்.

 

 

 

மனமானது ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பதை விளக்குகையில் மனம் ஏமாற்றும் இன்னும் ஐந்து மாயங்களையும் அவர்கள் விளக்குகின்றனர்.

 

 

நினைவில் அனைவரும் ஒரு காட்சியைப் பார்த்ததை நூறுக்கு நூறு சதவிகிதம் சொல்வது அரிது. நீதி மன்றத்தில் ஒரு சாட்சி பார்த்ததை இன்னொரு சாட்சி மறுக்கிறாரே, அது சகஜமான ஒன்று.

அடுத்து நம்பிக்கை பற்றியது. பலரும் அதீத நம்பிக்கையுடன் அடித்து ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். இதனால் குழப்பம் தான் ஏற்படும்.

 

 

அடுத்து அறிவைப் பற்றியது. நிபுணர்கள் கூட தனக்கு ஒரு விஷயத்தைப் பற்றி மிக நன்றாகத் தெரியும் என்று ஏமாறுவது வழக்கம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தான் அவர்களுக்கு உண்மையில் எவ்வளவு தெரியும் என்பது தெரிய வரும்.

அடுத்து காரண காரியம் பற்றி ஏமாறுவது. ஏதோ ஒரு விஷயம் நடந்த போது அதற்கான காரணம் இது தான் என்று மனதில் தோன்றிய படி கூறி விடுவது வழக்கம். ஆனால் ஆராய்ந்தால் உண்மை வேறு விதமாக இருக்கும்.

 

 

 

இறுதியாக எல்லோரும் சொல்லும் ஒன்றை ஆராயாமல் உடனே நம்பி ஏமாறுவது. மனிதர்கள் தங்கள் மூளைத் திறனில் ஒரு சதவிகிதமே பயன்படுத்துகின்றனர் என்று ஒரு அறிவியல் கூற்றைப் படித்தவுடன் அதை அப்படியே நம்பி விடுவது வழக்கமாகி விடுகிறது. உண்மையில்  மூளையின் செயல் திறனை அளப்பதற்கு எந்தக் கருவியும் இல்லை; யாராலும் அது  முடியாது.

 

 

ஆக இப்படி மனதின் மாய வலையில் விழாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் சாப்ரிஸும் சைமன்ஸும்.

என்றாலும் கூட மாய கொரில்லா வருவதைப் பார்க்காதவர்க்ளே நிறைய பேர் என்பது நிதர்சனமான உண்மை!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . .

.

விஞ்ஞானிகளுக்கு நகைச்சுவை உணர்வே இருக்காது என்பது பொதுவான அபிப்ராயம். அவர்கள் எப்போதும் தங்கள் ஆராய்ச்சியில் மூழ்கி இருப்பர் என்பது அனைவரது கருத்தும் கூட.

ஆனால் உணமை அதுவல்ல. பல விஞ்ஞானிகளுக்கு நகைச்சுவை என்றால் உயிர்.

 

 

உதாரணத்திற்கு இரண்டு சமபவங்களைப் பார்ப்போம்.

பிரிட்டனைச் சேர்ந்த இரசாயன இயல் விஞ்ஞானியான சர் ஹம்ப்ரீ டேவிஸ் ஒரு முறை பாரிஸிலிருந்து திரும்பி வந்தார். அங்குள்ள ஓவியக் கூடங்களை அவர் பார்வையிட்டு வந்திருந்ததால் அவரை அனைவரும், “ எப்படி இருந்தது பாரிஸின் ஓவியக்கூடங்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு உடனடியாக டேவிஸ், “ அடடா, என்னாமாய் இருந்தது படங்களைச் சுற்றி இருந்த ப்ரேம்கள். அது போன்ற ப்ரேம்களை என் வாழ்நாளில் எங்குமே நான் கண்டதில்லை!” என்றார்!

 

 

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் ரிலேடிவிடி தத்துவத்தினால் மிகவும் பிரபலமடைந்தார். இதைப் பொறுக்காதவ்ர்கள் புத்தகம் ஒன்றை எழுதினர். 100 ஆதர்ஸ் அகெய்ன்ஸ்ட் ஐன்ஸ்டீன் என்பது புத்தக்த்தின் பெயர். (100 Authors against Einstein).. இப்படி நூறு எழுத்தாளர்கள் உங்களுக்கு எதிராக ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்களே என்று ஐன்ஸ்டீனிடம் அவரது அபிப்ராயத்தைக் கேட்டனர் சிலர். அதற்கு அவர், “ நான் தவறு செய்திருக்கிறேன் என்றால் அதை நிரூபிக்க ஒருவர் போதாதா என்ன. எதற்கு நூறு பேர் வேண்டும்?” என்று கேட்டார்.

 

நகைச்சுவையுடன் கூடிய பளீர் சுளீர் பதில் அது!

****

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: