Written by S NAGARAJAN
Date: 15 March 2017
Time uploaded in London:- 6-28 am
Post No.3724
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 35
ச.நாகராஜன்
114ஆம் வயது – (1953-1954)
ஸு யுன்னுக்கு இப்போது வயது 114. ஷாங்காயை விட்டு மாஸ்டர் ஸு யுன் கிளம்பப் போகிறார் என்பதை அறிந்தவுடன் பிக்ஷுக்களும் சீடர்களும் அன்பர்களும் அவரிடம் வந்து ஒரு வார காலம் சான் தியானம் பற்றிச் சொல்லுமாறு வேண்டினர்.
மரகத புத்தர் இருந்த யு ஃபு மடாலயத்தில் ஒரு பெரிய தியான மண்டபம் இருந்தது. மடாலயத் தலைவர் வெய் ஃபாங் தலைமையில் ஒரு பெரிய குழு அவரை வரவேற்கவே அவர்களது வேண்டுகோளை ஏற்று ஸு யுன் தியான வகுப்பை 1953ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி துவக்கினார்.
அது முடிந்த போது இன்னும் ஒரு வாரம் அதைத் தொடர வேண்டும் என்று அனைவரும் வேண்டினர். அந்த வேண்டுகோளை ஏற்று இன்னும் ஒரு வாரம் மாஸ்டர் ஸு யுன் உரை நிகழ்த்தினார்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற் அந்த உரைகள் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு நாளும் அந்த உரையைக் கேட்ட அனைவரும் புளகாங்கிதம் அடைந்தனர்.
முதல் நாள்
தியானம் என்று சம்ஸ்கிருதத்திலும் ஜென் என்று ஜப்பானிய மொழியிலும் கூறப்படும் சான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. சான் என்பதில் இருபது வகைகள் உள்ளன என்பதை மஹாப்ரக்ஞான சூத்ரம் விளக்குகிறது. ஆனால் இவற்றில் எந்த ஒன்றும் முடிந்த முடிபல்ல.
தியானத்தில் அமரும் போது மார்பை முன்னே தள்ளி இருக்கச் செய்ய வேண்டும். பிராண சக்தியை மேலேயும் கொண்டு போகக் கூடாது. கீழேயும் விடக் கூடாது. தியானத்தின் முதல் இருக்கையை எண்ணங்கள் எழுவ்துடனான யுத்தம் என்றே சொல்லலாம்.
இரண்டாம் நாள்
சொந்த அனுபவத்தினாலேயே சான் தியானத்தின் பயனை ஒருவர் அறிய முடியும். ஒரு பண்டிதரின் தேர்வை சான் தியானத்திற்கான நேர எல்லையுடன் ஒப்பிடலாம். தேர்வுக்கு ஒருவர் அமர்கிறார். அந்தத் தேர்வுக்கென ஒரு நேரம் நிர்ணயிக்கப்படுகிறது.
நமக்குள்ள (தேர்வுக்கான) பொருள் சான் தியானம் என்பது. ஆகவே தான் இது சான் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதை பிரக்ஞா மண்டப்ம் என்றும் கூறலாம். நம்முடைய திரிக்கப்பட்ட எண்ணங்களாலேயே நாம் நாமாக இருக்கிறோம். அந்த எண்ணங்கள் இல்லாத நிலையில் புத்தர் புத்தராக இருக்கிறார். இப்போது சான் தியானம் என்ன என்பது தெரிந்து விட்டதால் அதை ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தால் வேறெதுவும் வெல்ல முடியாத ஒன்றை அறிவோம்.
மூன்றாம் நாள்
நம்முடைய சுமையை இறக்கி வைத்து விடுவது ஒரு வழி. நம்முடைய வீடு அருகிலேயே இருக்கிறது.
இப்போது எண்ணிய முந்தைய எண்ணம் எழாதிருந்தால் நாம் மனம் மட்டுமே. அடுத்து வரும் எண்ணம் எழாதிருந்தால் நாம் புத்தரே.
நான்காம் நாள்
தவறான எண்ணம், அறியாமை, பொறாமை ஆகியவற்றை அகற்றுங்கள் உங்கள் மனதை அலை பாய விடாதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்..
ஐந்தாம் நாள்
முதலாவதாக நாம் நம்மைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக பொறுத்துக் கொள்ளும் மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும்… உங்களது ‘நம்பும் மனம்’ வ்லிவுடையாத இருந்தால், உங்களது பொறுத்துக் கொள்ளும் மனம் வந்த வழியே திருப்பிச் செல்லாமல் இருந்தால் நீங்கள் இந்த உடலுடன் இருக்கும் போதே புத்த நிலையை அடைய முடியும்.
ஆறாம் நாள்
நமது ஆசைகளாலேயே நாம் இந்த பிறவிக் கடலில் இருக்கிறோம். 84000 விதமான ஆசைகள் உள்ளன. இதனாலேயே நாம் புத்த நிலைமையை அடைய முடிவதில்லை. நாம் புத்தரையும் போதிசத்வரையும் போல மற்றவருக்கு சேவை செய்யத் தொடங்கினால் போதி விதைகளை எங்கும் விதைத்து அதற்குரிய மிக அருமையான பழங்களைப் பலனாகப் பெற முடியும்.
ஏழாம் நாள்
சான் தியானம் என்பது சிறுபிள்ளை விளையாட்டு இல்லை. ஆகவே நீங்கள் மிகுந்த முயற்சி எடுத்து உங்களைப் பண்படுத்துவதில் வெற்றி பெற வேண்டும்.
இப்படியாக் அருமையான உரைகளை அனைவரும் கேட்டு மகிழ்ந்து பயனடைந்தனர்.
ஏழு நாட்களில் அவர் ஆற்றிய மிக நீண்ட உரைகளில் ஓரிரு முத்துக்களைச் சுருக்கமாக மேலே பார்த்தோம்.
இதன் பின்னர் மாஸ்டர் ஸு யுன் பல்வேறு ஆலயங்களுக்கும் அழைப்பின் பேரில் சென்றார்.
நான்காம் மாதம் தலை நகரிலிருந்து அழைப்பு வந்தது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் அங்கு வந்து குழுமினர்.
அங்கு சீன் புத்த சங்கம் தொடங்கியது.
பின்னர் அவர் பல இடங்களுக்கும் சென்று இறுதியில் யுன் ஜு சென்றார். ஒன்பதாம் மாதத்தில் காண்டனிலிருந்து ப்ல பிக்ஷுணிகள் அவரைப் பார்க்க அங்கு வந்தனர். சீடர்களான அவர்கள் மடாலயம் வந்த போது சிதிலமடைந்து இருந்த சுவர்களையே கண்டனர்.
மாஸ்டர் எங்கே என்ற அவர்கள் ஒரு பிக்ஷுவைக் கேட்க அவர் ஒரு பசுந் தொழுவத்தைச் சுட்டிக் காட்டினார்.
அந்த சிறிய பசுந் தொழுவத்தில் ஒரு ஓரத்தில் தியான நிலையில் அவர் அமர்ந்திருந்தார்.
மெதுவாக கண்களைத் திறந்த அவர் வந்திருந்தோரைப் பார்த்து “நீங்கள் என்னைப் பார்க்க ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்?” என்றார்.
அவரைத் தரிசிக்க வந்ததாக அவர்கள் தங்கள் நோக்கத்தை கூறிய போது ஸு யுன், “ நான் இங்கு வந்த போது முதலில் நான்கு துறவிகளே இருந்தனர் ஆனால் ஒரு மாதத்திலேயே ஐம்பது பேர் இங்கு வந்து விட்டனர். இந்த தொழுவத்தைத் தவிர சில சிதிலமான சுவர்களே இங்கு உள்ளன. ஆனால் என்னைப் பார்க்க வந்ததாக நீங்கள் சொல்வதால் இங்கு இருக்குமிடத்தில் சில நாட்கள் தங்குங்கள்.” என்றார்.
பசுந்தொழுவத்தை ஸு யுன் பெரிதும் விரும்பினார். ஆனால் நாள் ஆக ஆக இன்னும் பலர் அங்கு வந்தனர். உபாசகர் ஜியான் யு ஜியா நிதி உதவி அளித்தார். அங்கு நிலத்தைப் பண்படுத்தி பயிர் செய்ய ஸு யுன் விழைந்தார். பிரார்த்தனை மண்டபமும் செப்பம் செய்யப்பட்டது. குளிர் காலம் வந்தது. மாஸ்டரை நான் ஹுவா மடாலயம் அழைத்தது.
இப்படியாக 114ஆம் ஆண்டு முடிந்தது.
-தொடரும்