Research Article Written by London swaminathan
Date: 17 March 2017
Time uploaded in London:- 21-11
Post No. 3732
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
சுமேரிய நாகரீகத்தில் நீர் மற்றும் மலை பற்றிய தெய்வப் படங்களைப் பார்த்தாலோ, அவை பற்றி படித்தாலோ உடனே நினைவுக்கு வருவது கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்தான். ரிக் வேதத்தில் நீர் என்பதைக் குறிப்பதற்குள்ள சொற்களை இவர்கள் பயன்படுத்தியதும் தெரிகிறது! இதோ சில சுவையான விஷயங்கள்:–
சம்ஸ்கிருதத்தில் தண்ணீருக்கு ஆபஹ, அபாம் (நபத்), தோயம் என்றெல்லாம் சொற்கள் உண்டு. கங்கை என்பதை அவர்கள் எங்கை (ENKI) என்று மாற்றி நீர் தேவதைக்குச் சூட்டினர். ஆபஹ என்பதை அப்சு(APSU) என்று மாற்றி கடல் தேவதைக்குச் சூட்டினர். தோயம் என்பதை இயா (EA) என்று மாற்றி நீர்த் தேவதைக்குச் சூட்டினர். கைலாஷ் என்பதை லகாஷ் (LAGASH) என்று மாற்றினர்.
தேவாரம் திருமந்திரம் முதலிய பக்தி இலக்கியத்தில் ஆபஹ என்ற சொல்லை அப்பு என்றுதான் தமிழ்ப் படுத்துவர். பிரெஞ்சு மொழியில் கூட தண்ணீருக்கு யூ (EAU) என்றுதான் பெயர். எழுதும்போது இயௌ என்று எழுதுவர்.
பகீரதன் தவம் செய்து கங்கையைக் கொண்டு வந்ததும், சிவன் தலையிலிருந்து கங்கை பொங்கி வருவதும் நாம் அறிந்த கதைகள். இந்தக் காட்சிகளை அவர்கள் அப்படியே மெசபொடோமியாவின் (இராக் நாடு) டைக்ரிஸ், யூப்ரடீஸ் நதிகளுக்குப் பயன்படுத்தினர். நாம் எப்படி இந்தியாவிலுள்ள எல்லா நதிகளிலும், புனித நாட்களில் கங்கை பாய்கிறது என்று சொல்கிறோமோ அதைப் போல அவர்களும் டைக்ரீஸ் யூப்ரடீஸ் நதிகளில் எங்கை (ENKI) என்னும் தெய்வம் இனிய நீரைக் கொட்டுகிறது என்று எழுதி வைத்துள்ளனர்.
புனித நாட்களில் எல்லா நதிகளிலும் கங்கை பாய்வதாக இந்துக்கள் நம்புகின்றனர். தீபாவளி நாளன்று எங்கு குளித்தாலும் அது கங்கைக் குளியலுக்குச் சமம். இதனால்தான் தீபாவளி நாளன்று “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று கேட்கின்றனர்.
நாடு முழுதும் நடக்கும் மினி (Mini Kumba Mela) கும்ப மேளவின்போது அந்த ஊரில் கங்கை பாய்வதாக ஐதீகம்.
கங்கை நீர் எல்லா வீடுகளிலும் ஒரு சொம்பில் இருக்கும் இதைப் புனிதப்படுத்தவும், தீட்டுக் கழிக்கவும், சுத்திகரிக்கவும் இந்துக்கள் பயன்படுத்துவர்.
சுமேரியாவில் கிடைத்த சிலிண்டர் முத்திரைகளில் கங்கை நீர் பூமிக்கு வரும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. இதை கங்கை என்றோ அல்லது கங்கை வரும் காட்சியியைக் காப்பி அடித்து பயன்படுத்தியதாகவும் சொல்லலாம்.
எங்கை என்னும் நதி புனிதமானது என்றும் தூய்மையானது என்றும் களிமண் வடிவப் பலகைகளில் எழுதப்பட்டுள்ளது. கங்கையின் மகள் பெயர் நான்ஷி (NANSHE) என்று சொல்லி அவளுக்கு வருடம் தோறும் எரிப்டு (Eribdu) என்ற இடத்தில் விழா எடுக்கின்றனர். இது நாம் செய்யும் கங்கா ஆரத்தி, கங்கா மாதா விழா போன்றது. நதிகளின் தோற்றுவாயிலிருந்து படகுப் பேரணி புறப்படும்.
சிலிண்டர் முத்திரைகளில், சில படங்களில் ஒரு சொம்பு இருக்கும் அதிலிருந்து நீர் பாய்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். அகஸ்த்ய மகரிஷியின் கமண்டலத்திருந்து காவிரி நதி பாய்ந்ததாக நாம் கூறும் கதையை ஒத்திருக்கும் இது.
சுமேரியர்கள், இந்துக்களைப் போலவே நதிகளைக் கடவுளராகவே கருதினர்
இவையெல்லாம் மற்றொரு பெரிய வரலாற்று உண்மையையும் தெரிவிக்கிறது. அதாவது, அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்பதும் அதுவும் சரஸ்வதி நதி, நிலத்துக்கடியில் மறைந்த பின்னர் (அந்தர்வாஹினி) இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள் என்றும் தெரிகிறது. அது எப்படி?
இந்தியாவின் நடுவிலுள்ள மத்தியப் பிரதேச காடு மலை குகைகளில் பிம்பேட்கா (Bhimbetka Cave Paintings) முதலிய இடங்களில் 40,000 ஆண்டுகள் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைவிடப் பழமையான 50,000 ஆண்டுக்கு முந்தைய ஓவியங்கள் கிடைத்திருப்பதையும் அண்மைக்காலத்தில் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஆகவே இந்திய நாகரீகம் இங்கே தோன்றி இங்கேயே வளர்ந்து உலகம் முழுதும் சென்றது உறுதியாகிறது.
இந்துக்கள் எங்கு குடியேறினாலும் அங்குள்ள நதிகளுக்குக் கங்கை என்று பெயர் சூட்டிவிடுவர். இலங்கையில் ஏராளமான நதிகளுக்கு கங்கை என்று பெயர். அசோக மாமன்னன், கப்பலில் கங்கை நீரை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மீகாங் (மா கங்கா = கங்கை அன்னை), மத்திய ஆப்பிரிக்காவின் காடுகளுக்கிடையே ஓடும் காங்கோ (கங்கா) முதலிய பல நதிகள் கங்கையின் பெயரைத் தாங்கி இன்றும் ஓடுகின்றன.
சுமார் கி.மு.2000 ஆண்டு வாக்கில் பெரிய பூகம்பம், நிலச்சரிவு ஏற்பட்டு சரஸ்வதி நதி மறைந்தது. அத்துடன் அந்த நதிக்கரையில் தோன்றிய ஹரப்பா நாகரீகமும் மறைந்தது. அதையடுத்து ஏற்பட்ட வறட்சி, வெள்ளம் காரணமாக மக்கள் இந்தியாவுக்கு வெளியே செல்லத் துவங்கினர்.
அண்மைக் காலத்தில் நடந்த மரபியல் ஆராய்ச்சி, சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் ஐரோப்பாவில் குடியேறியதையும் காட்டுகிறது. சரஸ்வதி நதியை ரிக் வேதம் போற்றுகிறது. இது மறைந்த பின்னரே கங்கை நதி அந்த இடத்தைப் பிடித்தது. ரிக் வேதத்தின் காலம், சிந்து வெளிக்கு (ஹரப்பா நாகரீகம்) முந்தையது என்பதை அண்மைக் காலத்தில் கிரேக்க மொழி இயல் அறிஞர் நிகலஸ் கஜானாஸ் நிரூபித்துள்ளார். அவரது மொழி இயல் ஆய்வின்படி ரிக் வேதம் கி.மு.3300க்கு முந்தையது. அதற்கு முன் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும், ரிக் வேதம் கி.மு 4500 க்கு முந்தையது என்பதை வானியல் குறிப்புகளை வைத்து முடிவு செய்தனர்.
ஆக சுமேரியர்கள் கங்கை நதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத் திருப்பதால் இவர்கள் புராண கால இஞ்சினீயர் பகீரதனுக்கு பிற்பாடு இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் என்றும் கொள்ளலாம். இமய மலை பூகம்பத்தால் அடைபட்டு திசை மாறி வீணான கங்கை நீரை திசைதிருப்பும் மாபெரும் எஞ்சினீயரிங்/ பொறி இயல் அற்புதத்தைச் செய்தவர் பகீரதன். உலகின் முதல் சிவில் எஞ்சினீயர்.
சுமேரியாவிலும், எகிப்திலும் கி.மு 3000 முதல் முறையான அரசுகள் இருப்பதைக் காண்கிறோம். பல வருடங்களில் அலை அலையாக இந்துக்கள் குடியேறி இருக்கலாம். ஆனால் பெருமளவு குடியேற்றம் சரஸ்வதி நதி மறைந்து, கங்கை அந்த இடத்தைப் பிடித்த காலத்தில்தான் நடந்தது என்றும் கருதலாம்.
இனி கங்கை- எங்கை (GANGA=ENKI) பற்றி மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம்.
மெசபொடோமிய புராணக் கதைகளில் படைப்புத் தெய்வம் என்றும் மனித இனத்தைக் காக்கும் தெய்வம் என்றும் எழுதியுள்ளனர். காலப்போக்கில் பல உள்ளூர் தெய்வங்களுடன் பல கதைகள் கலக்கும்போது எல்லாவற்றையும் ஒரே தெய்வத்தின்பேரில் ஏற்றி விடுவர். இதை இப்போதைய இந்து மதத்திலும் காணலாம். வட இந்தியர்களுக்கு முருகனுக்கு வள்ளி என்ற ஒரு பெண்ணும் மனைவி என்பது தெரியாது. தென்னிந்தியர்களுக்கு ஆஞ்சநேயரின் மனைவி பற்றி தெரியாது; வட இந்தியாவில் அவர் பிரம்மசாரி அல்ல!
முடிவுரை:
கங்கை, கைலாஷ் போன்ற சொற்கள், கங்கை இறங்கிவரும் காட்சி கொண்ட சிலிண்டர் முத்திரைகள், நதிகளின் தெய்வீகதன்மை, புனிதத் தன்மை, தூய்மை பற்றிய சுமேரிய நம்பிக்கைகள் ஆகியன, சுமேரியர்களும் இந்தியாவிலிருந்து போனவர்களே என்பதை உறிதிப்படுத்தும்.
–subham–
.