Written by S NAGARAJAN
Date: 29 March 2017
Time uploaded in London:- 5-31 am
Post No.3767
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 25
ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 10
by ச.நாகராஜன்
ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்
குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்/
52) அடுத்து 1973ஆம் ஆண்டு மே மாத குமரி மலர் இதழில் (பிரமாதீச – வைகாசி இதழ்) வீர்யம் என்ற தலைப்பில் உள்ள பாரதியார் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அருமையான இந்தக் கட்டுரையானது “ஜெயபாரதி” சென்னை 1936 வருஷ அனுபந்தம் – இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன் மறுபதிப்பை குமரிமலர் இதழில் காண்கிறோம்.
கட்டுரையின் முதல் நான்கு பாராக்களைக் கீழே காணலாம்:
“வீர்யமாவது வீரனுடைய குணம். வீரன் எவன் என்பதை லட்சண ரூபமாகக் காட்டுவதைக் காட்டிலும், திருஷ்டாந்த ரூபமாகக் காட்டினால் நன்கு விளங்கும்.
அர்ஜுனன் வீரன்; கர்ணன் வீரன்; இந்திரஜித் வீரன்; ராவணன் வீரன்; ராமன் வீரன்; லட்சுமணன் வீரன்; ஹனுமான் வீரன்; சிவாஜி வீரன்; காந்திஜி வீரன்;
வீரர்களில் தர்மவீரர் என்றும், அதர்ம வீரர் என்றும் இருபாற் படுவர்.
ராமன், பார்த்தன் போன்றோர் தர்ம வீரர்; ராவணன் முதலியோர் அதர்ம வீரர்.
ஜெய பாரதி பத்திரிகை பாரதியாரின் கட்டுரைகளை தேடிப் பிடித்து வெளியிடுவதை தனது முக்கிய குறிக்கோள்களின் ஒன்றாகக் கொண்டிருந்தது.
இந்தப் பத்திரிகையில் எனது தந்தையார் திரு வெ.சந்தானம் பணியாற்றி வந்தார். பின்னரே தினமணி இதழில் சேர்ந்தார்.ஜெயபாரதி பத்திரிகை முனைந்து பாரதியாரின் கட்டுரைகளைத் தேடிப் பிடித்து வெளியிட்டதையும் என் தந்தையாரைப் பற்றியும் பாரதி ஆர்வலர் ரா.அ.பத்மநாபன் பாரதி புதையல் திரட்டு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
53) அடுத்து குமரி மலர் வெளியிட்டுள்ள கட்டுரை அன்பே தீர்ப்பு.
அன்பே தீர்ப்பு
சி.சுப்பிரமணிய பாரதியார்.
இந்தக் கட்டுரையும் “ஜெயபாரதி”, சென்னை வருஷ அனுபந்தம் 1936 – இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையாகும்.
இதில் அன்பின் வலிமையை அழகுற மஹாகவி விளக்குகிறார்.
கட்டுரையின் இறுதி ஐந்து பாராக்களை இங்கே காணலாம்:
“அன்பு கொள்கையில் இருந்தால் போதாது. செய்கையில் இருக்க வேண்டும்.
உன்னிடம் ஒரு கொடி ரூபாய் இருந்தால், அந்த ஒரு கோடி ரூபாயையும் தேச நன்மைக்காகக் கொடுத்து விட்டு நீ ஏழையாகி விடத் துணிவாயானால் நீ தேசத்தின் மீது அன்புடையவ்னாகக் கருதப்படுவாய்.
உன்னுடைய குழந்தையின் உயிரைக் காக்கும் பொருட்டாகப் புலியின் வாயில் நீ போய் முதாலவ்து கையிடத் துணிவாயானால், நீ குழந்தையிடன் அன்புடையவ்னாகக் கருதப்படுவாய்..
பறையனுக்கு ஸ்நானம் செய்வித்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட்டால் நீ மனித ஜாதியினிடம் அன்புடையவனாக விளங்குவாய்.
எல்லா ஜந்துக்களிடத்திலும் ஆரம்பப் பழக்கத்துக்கு, எல்லா மனித உயிர்களிடத்திலும் தெய்வபக்தி காண்பித்தால் உலகத்தின் துயரங்கள் தீர, நியாயமான ஜனவகுப்பு ஆரம்பமாக ஹேது உண்டாகும்.
54) அடுத்து பாரதியார் கடிதம் (1919) என்ற தலைப்பில் பாரதியார் எழுதிய கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுரையின் முற்பகுதியை இங்கே காணலாம்:-
க்டையம்
15, நவம்பர் 1919
ஸ்ரீமான் வயி. சு. ஷண்முகம் செட்டியாருக்கு ஆசீர்வாதம்.
- ……
- பகவத் கீதையை அச்சுக்கு விரைவில் கொடுங்கள். தங்களுக்கு இஷ்டமானால் அதற்கு நீண்ட விளக்கம் எழுதி யனுப்புகிறேன்.. நீண்ட முகவுரையும் எழுதுகிறேன்.
தங்களன்புள்ள சி.சுப்பிரமணிய பாரதி என்று கடிதம் முடிவுறுகிறது.
மஹாகவியின் புத்தகப் பதிப்பு ஆர்வத்தைத் தெளிவாக இக்கடிதத்தில் காண்கிறோம்.
-தொடரும்