Written by S NAGARAJAN
Date: 30 March 2017
Time uploaded in London:- 5-59 am
Post No.3771
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
ஆன்மீக இதழ் அறிமுகம்
ஆத்ம தரிசனம்
ஆன்மீக மின்னணு இதழ்
‘ஆன்மீக பொக்கிஷம்’ என்றும் ‘நமது பாரத தேசத்தின் ஆன்மீகம், கலை, கலாசாரம், பண்பாடு, சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இவைகளை நம் ஆன்மா உணர்ந்து கொள்ள ஆத்ம தரிசனம்’ என்றும் முதல் பக்க பீடிகையோடு சென்னையிலிருந்து வெளி வரும் பத்திரிகை ஆத்ம தரிசனம்
மார்ச் 2017 இதழில் சத்தியவான் சாவித்திரி பற்றிய கதையைக் காண்கிறோம்.
ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வாழ்க்கை வ்ரலாறு அழகுறச் சித்தரிக்கப்பட்டுள்ள கட்டுரை இந்த இதழுக்குப் பெருமை சேர்க்கிறது
மஹாபாரதத்தில் அர்ஜுனனின் தேர் எதனால் எரிந்தது என்ற கதையை அடுத்துக் காண்கிறோம்.
வேதத்தில் பெண்மை என்ற கட்டுரையில் வேதம் பெண்களை இழிவு படுத்தியிருக்கிறதா என்பது அலசி ஆராயப்பட்டிருக்கிறது. அப்படி சில ஸ்லோகங்கள் இருப்பின் அவை இடைச்செருகல் என்பதை கட்டுரை ஆசிரியர் கூறுவதோடு நாம் பிறந்த பூமியை தாய் நாடு பாரத மாதா என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவதிலிருந்தே வேதம் பெண்மையை எப்படிப் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறது என்பதை அறியலாம் என முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.
இந்த இதழ் பெண்மைச் சிறப்பிதழ் என்பதால் இந்தக் கட்டுரை பெண்மையின் சிறப்பைப் போற்றும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம், காரடை செய்யும் விதம்,ஹோலி பண்டிகை தோன்றிய வரலாறு போன்ற கட்டுரைகளுடன் பிள்ளையார் தலங்கள் சிலவற்றைப் பற்றிய பெருமைகளைச் சுருக்கமாகச் சொல்லும் கட்டுரையும் இதழுக்கு அழகு சேர்க்கிறது.
நமது வைதீக கலாசாரத்தைப் பாதுகாக்க புராண பிரவ்சனம். பெரியோர்களின் அணுக்க தீட்சை, மகான்களின் தரிசனம், ஆலய வழிபாடு, குல தர்மப்படியான சடங்குகள், வழிபாடுகள், மக்களுடன் இணைந்து ஒரு தாய் மக்களாக கொண்டாடப்படும் பண்டிகைகள், இசை, நாடகம் வழியே பரம்பரைக் கதைகளை உணரும் அனுபவம் போன்ற ஏராளமான வழிகள் உள்ளன. இவற்றுடன் பத்திரிகையும் ஒரு வழியாக இணைந்தது.
காலத்திற்கேற்றவாறு சென்ற தலைமுறைகளில் வைதிக மார்க்கத்தின் பெருமைக்கு பெரும் அணியாக தர்ம பத்திரிகைகள் புதிய பொலிவுடன் மக்களைக் கவரும் வண்ணம் வெளி வர ஆரம்பித்தன. ஆனால் காலப் போக்கில் இவற்றில் பல வணிக நோக்குள்ள்வையாக காலத்தின் கட்டாயத்தால் மாற்றப்படவே உண்மையான அற உணர்வுகளை ஆதாரத்துடன் கூறும் பத்திரிகைகள் குறைந்தே போயின்.
ஸ்ரீ வத்ஸ சோமதேவ சர்மாவின் வைதீக தர்மவர்த்தனி உள்ளிட்ட சில குறிப்பிடத்தகுந்த பத்திரிகைகள் கடந்த காலத்தில் உலவி வந்தன..
இந்த வகையில் பழைய பாரம்ப்ரிய வழியில் ஆத்ம் தரிசனம் வெளி வருவது மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நல்ல செய்தி!
அதுவும் காலத்திற்கேற்றபடி டிஜிடல் முறையில் அதி நவீன தொழில்நுட்பத்தையும் தன்னுள் கிரகித்து உலகளாவிய விதத்தில் ஒரு நொடியில் ஆன்மீக உணர்வு அனைவரையும் சேரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பான செய்தி.
ஆசிரியர் குழுவைப் பற்றிய செய்தி நம்மை நம்பிக்கை கொள்ள வவக்கிறது.
இதன் ஆசிரியர் சிம்மம் ரகு. இந்திய தொலைக் காட்சிக்கு பல வருடங்கள் நிகழ்ச்சிகள் தயாரித்த பெரிய பின்புலமே இவரது பலம்.
முனைவர் இராகவேந்திர ஷர்மா மீமாம்ஸ சாஸ்திர நிபுணர் இந்த இதழில் வேதமும் பெண்மையும் பற்றிய கட்டுரை இவருடையதே.
திரு ஹரிகேசநல்லூரி வெங்கட்ராமன், திருமதி இராஜேஸ்வர், திருமதி ஐஸ்வர்யா நிதேஷ் ஆகியோரும் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
34 பக்கங்கள் கொண்ட இதழின் விலை ரூ 15/
குட்டையும் ஷொட்டையும் சுட்டிக் காட்டச் சொல்கிறது ஆசிரியர் குழு.
ஷொட்டுகளே அதிகம்.
வடமொழி மூலத்துடன் தமிழ் உரை கொண்ட பல கட்டுரைகள் வெளியிடப்பட்டால் இப்போது வெளியிடப்பட்டு வரும் ஆன்மிக இதழ்களிடமிருந்து மாறுபட்டு இந்த இதழ் தனித்து விளங்கும். இதைச் செய்வதற்கான இதன் பலம் இதன் டிஜிடல் வடிவமே!
முதல் பாராவில் நாம் பார்த்த பத்திரிகையின் பீடிகையை உண்மையாக்கும் வண்ணம் அமைந்திருக்கும் ஆத்ம தரிசனம் வெற்றியுடன் தர்ம பவனி வர வாழ்த்துக்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஆத்ம தரிசனம்
எண் 1, மீனாட்சி பிளாட்ஸ்.
135, பாலகிருஷ்ணன் (நா) தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை- 600033
கைபேசி எண்கள் 9841263010, 9445692485
மின்னஞ்சல் : athmadarshan@yahoo.com
***