Written by London swaminathan
Date: 30 March 2017
Time uploaded in London:- 10-21 am
Post No. 3772
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
சங்கத் தமிழ் இலக்கியங்களில் மதில் சுவர் மீது என்ன என்ன எந்திரப் பொறிகள், கருவிகள் வைக்கப்பட்டிருந்தன என்ற குறிப்புகள் உள. அந்தக் காலத்திலேயே உயரமான கட்டிடங்களை இடி மின்னல் தாக்காமல் இருக்க நம் முன்னோர்கள் பலவழிகளைக் கண்டு பிடித்தனர் கோபுரங்களின் மீதுள்ள மிகப்பெரிய கலசங்களில் வரகு என்னும் தானியத்தை நிரப் பிவைப்பர். இதுவும் இடி தாக்காமல் இருப்பதற்கான ஒரு உத்தி என்று சொல்லப்படுகிறது. ஆயினும் அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எது எப்படியாகிலும், இவ்வளவு காலமாக இடி தாக்கி அவைகள் அழிந்ததாகச் செய்திகள் இல்லை. கோபுரக் கலசம் விழுந்தாலும், கோபுரம் இடிந்து விழுதாலும் அவைகளின் பலவீனம்தான் காரணம் அல்லது பூகம்ப/ நில அதிர்ச்சி போன்ற இயற்கை உற்பாதங்கள்தான் காரணம் என்றும் அறிகிறோம்.
கலைக் களஞ்சியங்களைப் பார்த்தால் இடி தாங்கியை (lightning rod OR conductor) பென்சமின் பிராங்ளின் (Benjamin Franklin) கண்டுபிடித்தார் என்று போட்டிருக்கும். ஆனால் கம்பன் காலத்திலேயே இடிதாங்கிக் கம்பிகள் கோட்டைச் சுவர்களில் பொருத்தப்பட்டதாக அவன் பாடலில் இருந்து அறிகிறோம்.
மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்
வேதமும் ஒக்கும் விண் புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்
திண் பொறி அடக்கிய செயலால
காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்
சூலத்தால் காளியை ஒக்கும்
யாவரும் தன்னை எய்துதற்கு அரிய
தன்மையால் ஈசனை ஒக்கும்
–பால காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்:-
அயோத்தி மாநகரத்தின் கோட்டை மதில் மிகவும் உயரமானது. அதன் முடிவு எங்கே இருக்கிறது என்று காணமுடியாது; ஆகையால் முடிவே காணமுடியாத வேதத்திற்கு இணையானது; இதன் ஒரு பக்கம் விண்ணுலகத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதால் இதைத் தேவர்களுக்கு ஒப்பிடலாம்; போர் பொறிகளை (எந்திரங்களை) ஒளித்து வைத்திருப்பதால் பொறிகளை (ஐம்புலன்களை) அடக்கிய முனிவர்களுக்குச் சமமானது. காவல் தொழிலில் கலைமானை வாஹனமாகக் கொண்ட துர்க்கைக்குச் சமம். தன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளி தேவி போல இருக்கும்; எவரும் நெருங்க முடியாத தன்மையால் ஈசனைப் போல இருக்கும்.
“மதில் சுவர் மிக உயரமானது” — என்று ஒரே வரியில் சொல்லி இருக்கலாம். ஆனால் அங்கே அது வேதம், தேவலோகம், முனிவர், துர்கை, காளி, ஈஸ்வரன் போன்றது என்று சொல்லும் அழகு மிகவும் ரசிக்கத்தக்கது. அது மட்டுமல்ல; பொறி, துக்கை என்ற சொற்களில் இரு பொருளை வைத்து சிலேடை செய்து விளையாடுகிறான் கம்பன்!
ஐம்பொறி என்பது ஐம்புலன்கள்; மதிலில் ஒளிந்திருக்கும் பொறிகள்- எந்திரங்கள்.
துர்கா என்றால் பாதுகாப்பு அரண் என்று பொருள்; வடநாட்டில் கோ ட்டைகளின் பெயர்கள் ‘துர்க்’ என்றே முடியும் (தமிழ்நாட்டிலும் கூட இப்படிச் சில ஊர்கள் உண்டு). நம்மைப் பாதுகாப்பதால்தான் அவளைத் துர்கை என்று வழிபடுகிறோம்.
பாட்டில் இடிதாங்கி என்ற சொல் இல்லை. ஆயினும் கோட்டையின் மீது திரிசூலத்தை நட்டு வைப்பதும் கோவில் கோபுரம் மீது உலோகக் கலசங்களை வைப்பதும் இதற்காகவே என்பதை எல்லோரும் அறிவர். பழைய உரைகாரர்களும் இப் படியே பொருள் சொல்லி இருக்கிறார்கள்.
கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இது தமிழனின் கண்டு பிடிப்போ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் வட நாட்டில் கோட்டைகளின் மீது திரிசூலம் இருந்ததாக பார்த்தது இல்லை; படித்ததுமில்லை. மேலும் கம்பன், சோழ நாட்டில் என்னென்ன கண்டானோ அதை அப்படியே அயோத்தி நகரத்தின் மீது ஏற்றிப் பாடி இருக்கிறான். ஆக சோழர் காலத்தில் கோட்டைகளின் மதில் மீது சூலம் இருந்தது தெளிவாகிறது. கோவிலின் உயரத்துக்கேற்ற பிரம்மாண்டமான கோபுரக் கலசங்களை வைத்தவனும் தமிழனே. நானே மதுரை மீனாட்சி கோவிலின் தெற்கு கோபுரத்தின் மீதேறிக் கலசங்களைக் கட்டிப்பிடித்து நின்றிருக்கிறேன். 169 அடி உயரத்தில் நின்றுகொண்டு மதுரையைப் பார்க்கும்போது தலை சுற்றும்; காற்றுவேறு அடிப்பதால் ஒரு சில நிமிடங்களுக்கு கலசத்தைக் கட்டிக்கொண்டே நின்று பார்த்துவிட்டு போதும் என்று திரும்பி விடுவோம். கோபுரக் கலசங்களையும், கோட்டையின் திரிசூலங்களையும் சேர்த்து வைத்துப் பார்க்கையில் இதன் காரணமும் விளங்குகிறது. இது தமிழனின் கண்டு பிடிப்பு என்றும் தெரிகிறது. ஆயினும் இவை, விஞ்ஞான முறையில் இடியைத் தடுக்கவல்லதா என்பதை ஆராய்தல் அவசியமே!
–SUBHAM–
manjeshwarmuthurajan
/ April 2, 2017Kambar has learnt other versions and written Ramayana. I don’t think he has written based on southern cultural practices alone instead of depicting the reality.