Written by S NAGARAJAN
Date: 31 March 2017
Time uploaded in London:- 5-30 am
Post No.3774
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 26
ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 11
by ச.நாகராஜன்
ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்தக் கட்டுரையுடன் என்னிடம் இருக்கும் குமரிமலர் பத்திரிகை கட்டுரைகள் முடிவுறுகின்றன.
அவரது பத்திரிகைத் தொகுப்பு ஒரு அரிய பொக்கிஷம். தேர்ந்தெடுத்த சமூக நல பிரக்ஞை கொண்ட ஒரு நல்ல இலக்கியவாதியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். தன்னலமற்று லாப நோக்கற்று இந்தப் பணியை அவர் மேற்கொண்டு ஆற்றியதை எவ்வளவு சொல்லிப் புகழ்ந்தாலும் தகும்
ஏ.கே. செட்டியாரின் இலக்கியப் பணியில் அடங்கிய குமரிமலர் உள்ளிட்ட அனைத்து நூல்களையும் தமிழக அரசு உரிய தொகையைக் கொடுத்து நாட்டுடமை ஆக்கினால் அது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு அரிய வரபிரசாதமாக அமையும்,
இன்னும் இரு கட்டுரைகளை மட்டுமே இங்கு என்னால் கொடுக்க முடிகிறது. மேலும் பல பாரதியார் சம்பந்தமான செய்திகளை அவர் வெளியிட்டிருக்கக் கூடும்.
- ஜன்ம பூமி என்ற ஒரு கட்டுரையை குமரி மலர் வெளியிட்டிருக்கிறது.
ஜன்ம பூமி
சி.சுப்பிரமணிய பாரதி (1909)
முதலில் இதைப் பற்றிய குறிப்பைக் காண்கிறோம்.
ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் 1909-ஆம் ஆண்டில் “ஜன்ம பூமி”
(ஸ்வதேச கீதங்கள்-இரண்டாம் பாகம்) என்ற நூலை வெளியிட்டார்.32 பக்கம் உள்ள நூலின் விலை அணா மூன்று. புதுச்சேரியில் சைகோன் சின்னையா பிரசில் அச்சிடப் பெற்றது. அந் நூலில் உள்ள “சமர்ப்பணம்”, முகவுரை ஆகிய இரண்டையும் இங்கு வெளியிடுகிறோம்.
இந்தக் குறிப்பைத் தொடர்ந்து சமர்ப்பணம் மற்றும் முகவுரையைக் காணலாம்.
- அடுத்து சாரல் என்ற கட்டுரையை குமரிமலரில் காண்கிறோம்.
சாரல்
சி.சுப்பிரமணிய பாரதியார் (1918-20)
இந்தக் கட்டுரை பற்றிய குறிப்பை முதலில் காண்கிறோம்.
இதுவரை எங்கும் நூல் வடிவு பெறாத பாரதி கட்டுரை இது. பாரதி புதுவையை விட்டுத் தெற்கே வந்து, தனது மனைவி செல்லம்மாவின் ஊராகிய கடயத்தில் இருந்த சமயம் – 1918 – 20 – எழுதியது. முதலில் “சுதேசமித்திர”னில் பாரதி காலத்தில் வந்திருக்க வேண்டும். 1936-ல் பரலி சு.நெல்லையப்பரால் அவரது “லோகோபகாரி” வாரப் பதிப்பிலும், பிறகு 23-5-1936 அன்று “ஜெயபாரதி” நாளேட்டிலும் வெளியான இக்கட்டுரை கடயத்தின் இயற்கை அழகையும் அவ்வூரில் பாரதியார் வசித்த தனித்த இல்லத்தையும், தெருவில் காணக்கூடிய கழுதைகளையும், ஊரின் சிறுமை மனிதர்களையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. கடயம் தென்காசிக்கு முன்னதாக ஆறேழு மைலில் உள்ளது. குற்றாலத்துச் சாரல் இங்கும் பிரசித்தம்.
(புதுவை வேதபுரம்; கடயம் ஆலமரம்; பாரதியார்-சக்திதாசன்)
(சிறப்பு மிக்க இக்கட்டுரையைக் குமரி மலர் மூலம் மீண்டும் – இந்த ‘பார்ரதி தின’ மாதத்தில் – இன்றைய தலைமுறையினர் கவனத்திற்குக் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் – ரா.அ.பத்மநாபன்)
இக்குறிப்பைத் தொடர்ந்து சாரல் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது அருமையான கட்டுரை இது.
இது வரை குமரி மலரில் வெளியாகியுள்ள பாரதியாரின் சில கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள் ஆகியவற்றோடு அவரைப் பற்றி அறிந்தோரின் கட்டுரைகள் பற்றிய சில குறிப்புகளையும் அவற்றின் சில பகுதிகளையும் பார்த்தோம்.
இன்று கடையில் பாரதியார் படைப்புகளாக வெளி வந்துள்ள நூல்களில் இவை அனைத்தும் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
பாரதியாரின் படைப்புகள் என்ற வரிசையில் அனைத்தும் தாங்கிய நூல்கள் அனைவரும் வாங்கக் கூடிய மலிவுப் பதிப்பு நூல்களாக வெளி வருதல் வேண்டும்.
ஒரு சில அரிய கட்டுரைகளைத் தாங்கி வரும் நூல்களின் விலை அவை நூலகங்களுக்கு மட்டுமே விற்கப்படும் விலையைக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது.
இனி அடுத்து வரும் கட்டுரைகளில் பாரதியார் பற்றிய இதர நூல்களைப் பற்றிப் பார்ப்போம்.
குமரிமலருக்கும் அதன் ஆசிரியர் திரு ஏ.கே.செட்டியார் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து விட்டு மேலும் பாரதியார் பாதையில் செல்வோம்.
– தொடரும்