Written by London swaminathan
Date: 1 April 2017
Time uploaded in London:- 13-46
Post No. 3778
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் தனது ஏழு இலக்கியப் படைப்புகளில் தவ முனிவர்களையும் , அவர்கள் வசிக்கும் தபோவனங்களையும் அற்புதமாக வருணித்துள்ளான். அவைகளைப் படிக்கையில் நாமும் அக்கால முனிவர்கள் வாழ்ந்த காடுகளுக்குச் சென்று, அமைதியான ஆசிரம வாழ்க்கை வாழமாட்டோமா என்ற ஏக்கம் ஏற்படும்.
அவர் சொல்லுவதைப் பார்ப்பதற்கு முன், மின்சார விளக்குகளோ சாலைப் போக்குவரத்து வசதிகளோ, இன்டெர்நெட், மொபைல் வசதிகளோ, ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன் வசதிகளோ இல்லாத ஒரு அமைதியான காடுகளை நம் மனக் கண்முன் கொண்டு வர வேண்டும். அது சண்டை சச்சரவுகள் இல்லாத உலகம். மானும், புலியும் ஒரேதுறையில் பகைமை பாராட்டாது நீர் குடிக்கும் சாந்தி நிலவும் ஒரு உலகம். இதோ காளிதாசன் வாய்மொழியாக அவைகளைக் கேட்போம்:-
“சாதகர்ணி என்ற முனிவரின் ஆசிரமம் அடர்ந்த காட்டுக்கு நடுவே இருந்ததாகவும் நான்கு புறங்களும் மேகம் சூழ நடுவேயுள்ள சந்திரன் போல அவருடைய ஆஸ்ரமம் ஜொலித்ததாகவும்” ரகு வம்ச கவியத்தில் கூறுகிறார் (13-39)
இன்னும் கொஞ்ச தூரத்தில் சுதீக்ஷ்ணர் என்பவர் ‘பஞ்சாக்னி’ (FIVE FIRES) தவம் செய்கிறார். அதாவது நாலு புறமும் விறகுகளை வைத்து எரிமூட்டி நடுவில் நின்று கொண்டு சூரியனைப் பார்த்து தவம் செய்கிறார். அவர் ‘பெயரில்’ கடுமை இருந்தாலும் செயலில் சாந்தம் மிக்கவர்.(13-41)
அவர் ருத்ராக்ஷம் அணிந்து மான்களைத் தடவிக் கொடுக்கிறார். யாகத்திற்கு வேண்டிய தர்ப்பைப் புல் முதலியவற்றைக் கொண்டு வருகிறார். நான் மேலே பறந்து செல்லுவதை அறிந்து, அவர் கைகளை உயரே உயர்த்தி வணக்கம் சொல்லுகிறார். ஆயினும் மவுனத்தைக் கடைப்பிடிக்கிறார் (13-42)
அதோ, அது சரபங்க முனிவரின் ஆசிரமம். அவர் சமித்துக் குச்சிகளால் வெகு காலம் ஹோமம் செய்துவிட்டுத் தன்னையே ஹோமத் தீயில் ஆகுதி செய்து மேலுலகம் சென்றார் அவருடைய தபோவனம் தூய்மையானது. இது மிருகங்களின் சரணாலயம்; அவை இயற்கைப் பகையைவிட்டு சாந்தமாக உலவும் இடம் இது. (13-45)
அவர் விருந்தாளிகளை நன்கு உபசரிப்பார். இப்போது அவர் இல்லாவிடினும் தந்தை விட்டுச் சென்ற நற்பணியை, அவரது மகன்கள் செய்வது போல, அவரால் வளர்க்கப்பட்ட இம்மரங்கள் பழங்களை அளித்து அதிதி பூஜை (விருந்து உபசாரம்) செய்கின்றன!
இதோ அதுதான் சித்திரகூட மலை. அங்குள்ள நீர்வீழ்ச்சிகள் எழுப்பும் ஓசை, அதிலுள்ளை குகைகளில் எப்போதும் எதிரொலி செய்த்கொண்டே இருக்கின்றன. சிகரங்களின் உச்சியில் மேகங்கள் தவழ்வது, ஒரு மாட்டின் கால்களில் சேறு பூசியது போல காணப்படுகிறது (13-47)
அந்த மலை ஒரு எருது போலக் காட்சி தருகிறது (காளை மாடுகள் மணல் மேடுகளில் கொம்புகளினால் முட்டி சேற்றுடன் காணப்படும். அதை மனதில் கொண்டு கவி இப்படிச் சொன்னார் போலும்)
குமார சம்பவ காவியத்தில் சப்தரிஷிகளை வருணிக்கையில் அவர்கள் முத்துச் சரங்களால் ஆன பூணூல்களை அணிந்து தங் கத்தினாலான மரவுரிகளை அணிந்திருந்ததாகக் கூறுகிறார். அவர்கள் வைத்திருந்த ஜபமாலைகள் ரத்தினக் கற்களால் ஆனவையாம் (6-6)
காட்டில் தவம் செய்ய, பார்வதி (உமா) , தனது தோழி மூலமாக தந்தையிடம் அனுமதிகேட்டதாகவும் காளிதாசன் பாடுகிறான் (5-6)
குமாரசம்பவத்தில் மேலும் ஒரு துறவியைக் காட்டுகிறான். சடைமுடியுடன் ஒரு யோகி வருகிறார். அவர் மான் தோல் அணிந்தவர். பலாச தண்டம் கையில் ஏந்தி இருந்தார். பிரம்ம தேஜஸுடன் காணப்பட்டார். ஒரு பிரமச்சாரி போல தபோவனத்துக்குள் நுழைந்தார். உமாவும் அவரைத் தக்கபடி உபசரித்தாள். (5-30)
அந்தக் காலத்தில் மக்கள் பல்வேறு விதமாகத் தவம் இயற்றியதையும் காளிதாசன் படம்பிடித்துக் காட்டுகிறான்:
“புகையினால் மிகச்சிவந்த கண்களை உடையவனும் , கால்களால் மரக்கிளைகளைப் பிடித்துக் கொண்டிருப்பவ்னும், கீழ்நோக்கிய முகம் உடையவனுமான ஒருவனை ராமர் பார்த்தார்”. (ரகு 15-49)
ராமாயண காலத்திலேயே ஒருவன் கீழே தீயை மூட்டி அதில் முகத்தைக் காட்டியவாறு, தலை கீழாக தொங்கிக் கொண்டு தவம் செய்ததை இது காட்டுகிறது.
ஒரு முனிவர் யாரையாவது சாபம் இட்டால் அவருடைய தவ வலிமை (POWER AND ENERGY தபோ சக்தி) குறைந்து விடும் என்ற உண்மையை ரகு வம்சத்தில் எடுத்துரைப்பான் காளிதாசன் (15-3):
ராமனை பார்த்தவுடன் அவனே அசுரனைக் கொன்றுவிடுவான் என்பது முனிவர்களுக்குத் தெரிந்தது:–
“லவணன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட மஹரிஷிகள் தங்களுடைய தேஜசினால் (தவ வலிமை) அவனை வீழ்த்தவில்லை ஏனெனில் ரக்ஷகன் இல்லாதபோதுதான் சாபத்தை ஆயுதமாகக் கொண்ட ரிஷிகள் அவர்களுடைய தவத்தைச் செலவழிப்ப்ர் ” (15-3)
பிராமணரல்லாதாரும், அசுரர்களும் கூட தவம் செய்து வரம் பெற்ற கதைகள் புராணம், இதிஹாசம் முழுதும் இருக்கின்றன. ஆரிய திராவிட வாதம் பொய் என்பதற்கு இவை நல்ல சான்றுகள். தசரதன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது, ஒரு யானை தண்ணீர் குடிக்கிறது என்று எண்ணி அம்புவிட்டான. ஆனால் அதுவோ ஒரு சூத்திர முனிவருடைய புதல்வன், குடத்தில் நதி நீரை எடுத்தபோது எற்பட்ட ஓசை ஆகும். உடனே தசரதன் அவனை தாய் தந்தையிரிடம் எடுத்துச் செல்ல, அந்த முனிகுமாரன் இறந்து விடுகிறான். அப்போது அந்த வயதான முனிவர், நீயும் புத்திரசோகத்தால் இறப்பாய் என்று தசரதனுக்குச் சாபம் தருகிறார். இதிலிருந்து சூத்திர முனிவர்கள், ஆதிகாலத்தில் இருந்ததும் அவர்களும் சாபம் இட முடியும் என்பதும் தெரிகிறது. வால்மீகி சொன்ன இவ்விஷயத்தைக் காளிதாசனும் சொல்கிறான் (ரகு. 9-46/49)
எல்லோரும் எல்லாம் செய்யக்கூடாது, செய்ய முடியாது என்பதையும் குமார சம்பவத்தில் (5-33/34) காட்டுகிறான்.
உமாவிடம் புதிய துறவி கேட்கிறார்:
“காட்டில் தர்ப்பைப் புல்லும், யாகத்திற்கான மரக்குச்சிகளும் எளிதில் கிடைக்கிறதா? குளிப்பதற்கேற்ற நீர் உள்ளதா? உன்னுடைய உடல் தாங்கக்கூடிய வகையில் தவம் செய்கிறாயா? உடலை வைத்துத் தான் சமயச் சடங்குகளைச் செய்யமுடியும்” (சுவரை வைத்துத்தான் சித்திரம்). அந்த நேரத்தில் உமாவின் கைகளிலிருந்து மான்கள் புல்லை வாங்கிச் சாப்பிட்டதையும் காளிதாசன் பாடுகிறான்.
ஆக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களும் தவம் செய்தனர். அதை ஒரு அதிசய நிகழ்ச்சியாகச் சொல்லாமல் சாதாரண நிகழ்வாகவே செப்புகிறான்
குமார சம்பவத்தில் வரும் ஆசிரமக் காட்சி (5-17):–
அந்த வனம் புனிதம் நிறைந்தது; போரிடும் மிருகங்கள் சண்டை போடுவதைக் கைவிட்டுத் திரிந்தன. வந்த விருந்தாளிகளுக்குத் தேவைப்பட்ட பழங்களை மரங்களே தந்து, அவர்களை உபசரித்தன. புதிதாக வேயப்பட்ட இலைகள் உடைய பர்ண சாலைகளில் யாகத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இந்தக் காட்சி சாந்தம் தவழும் சூழ்நிலையை ஓவியம் போலக் காட்டுகிறது.
வசிட்டரின் ஆசிரமத்துக்குச் சென்ற திலீபன் கண்ட காட்சிகள் (ரகு.2-17/18):——
“காட்டுப் பன்றிகள், அங்குள்ள நீர்ச் சுனைகளில் நின்று கொண்டிருந்தன. மயில் கூட்டம் மரங்களை நோக்கிப் பறந்தன; மான்கள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. முனிவர்கள் ‘இங்குடி’ மர விதைகளை உடைத்து அதிலிருந்து எண்ணை எடுத்து விளக்கேற்றினர்”.
இவ்வாறு பலவகை முனிவர்கள், பெண் துறவிகள், காட்டிடை உள்ள ஆசிரமங்களின் வருணனை, காளிதாசனின் படைப்புகளில் பல இடங்களில் உள்ளன. பழங்கால முனிவர்கள், அமைதி தவழும் காடுகளுக்கிடையே எப்படி வாழ்ந்தனர் என்பதை நாம் இவற்றிலிருந்து அறிகிறோம்.
சாகுந்தலம் நாடகம்
இதே போல கண்வர் ஆசிரமக் காட்சிகள், சாகுந்தல நாடகத்தில் வருகின்றன.
சாகுந்தலம் நாடகம் முதல் காட்சி:
“நாம் ஒரு தபோவனத்தின் எல்லையில் நிற்கிறோம் என்பது சொல்லாமலே விளங்கும்; மரப் பொந்துகளிலிருந்து காட்டு அரிசி தானியங்கள் உதிரந்திருப்பதைப் பார்க்கவில்லையா? அவைதான் கிளிகளின் கூடுகள்; அதோ பார்; அந்தக் கற்கள் எண்ணை பூசியது போல பளபளவென மின்னுகிறது. அதில்தான் தவ முனிவர்கள் இங்குடிக் கொட்டைகளை நசுக்கி இங்குடி எண்ணை எடுத்துள்ளனர். ந ம்முடைய ரதங்கள் வந்த சப்தத்தையும் பொருட்படுத்தாமல் மான்கள் புற்களை மேய்கின்றன; அதோ தொலைவில் கயிற்றில் உலர்த்துவதற்காகத் தொங்கவிடப்பட்டுள்ள மர உரிகளில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டு இருக்கிறது.
“இன்னும் கொஞ்சம் தள்ளிப் பார்; மரங்களைச் சுற்றி வாய்க்கால் வெட்டி நீர் பாயும்படி செய்துள்ளனர். இலைகளின் பசுமையை மறைக்கும்படி ஹோமப் புகை வந்து கொண்டிருக்கிறது மான்கள் கொஞ்சமும் அச்சமின்றி மேய்ந்து கொண்டிருக்கின்றன. தர்பைப் புல் அழகாக வெட்டி விடப்பட்டுள்ளது.”
காட்சி இரண்டில் வரும் வருணனை:
“இதோ ஆச்ரமத்தின் அருகில் வந்துவிட்டோம்; காட்டெருமைகள் காட்டின் சுனைகளில் இறங்கி விளையாடட்டும்; அவை கொம்புகளால் நீரை, வாரி இறைக்கின்றன. மரத்தடியில் கூட்டம் கூட்டமாக நிற்கும் மான்கள் மென்று தின்று அசை போடட்டும். வாசனை மிகுந்த கிழங்குகள் விளையும் அந்த சதுப்பு நிலத்தில் காட்டுப் பன்றிகள் தண்ணீரில் விழுந்து புரளட்டும்
மேலும்,
“சூரிய காந்தக்கற்கள் தொடுவதற்குக்
குளுமையய் இருக்கும்; ஆனால் அதனுள்ளே
வெப்பம் மறைந்திருக்கும்; மற்றொரு ஒளி அதன் மீது விழவே அவை வெப்பத்தை உமிழும்; அது போலத்தான் தவ சீலர்களும்;
சாந்தமே உருவானவர்கள்; அவர்கள் உல்லத்தே தவத்தின்
சக்தி — ஞானத் தீ – உளது; அதைத் தூண்டும் போது, அது கொழுந்து விட்டு எரியும்.”
இப்படி முழுக்க முழுக்க காட்டின் வருணனையும் தவ சீலர்களின் குணங்களும் புகழப்படுகின்றது.
சகுந்தலை வரும் காட்சிகளில் அவள் எப்படி மான்களுக்கும் பறவைகளுக்கும் உணவு படைக்கிறாள்; மரங்களையும் கொடிகளையும் உடன்பிறவாச் சகோதரிகள் போல கவனிக்கிறாள் என்று அற்புதமாக வருணிப்பான் காளிதாசன்.
விக்ரம ஊர்வசீய நாடகத்திலும் இக்காட்சிகளைக் காணலாம். அங்கே பெண் துறவியரின் தோற்றம்மும் குணங்களும் நம்மைக் கவரும்..
அவைகளைப் படிக்கையில் பழங்கால பாரதத்தின் புகழ்மிகு சித்திரம் நம் மனக் கண் முன்னே தோன்றும்!
–சுபம்–
nagu1947
/ April 1, 2017A useful post
[image: –]
Nagulendran Nagendran
[image: https://%5Dabout.me/nagu210947
2017-04-01 18:17 GMT+05:30 Tamil and Vedas :
> Tamil and Vedas posted: ” Written by London swaminathan Date: 1 April
> 2017 Time uploaded in London:- 13-46 Post No. 3778 Pictures are taken
> from various sources; thanks. contact; swami_48@yahoo.com உலகப்
> புகழ்பெற்ற கவ”
>