ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 2 (Post No.3795)

Written by S NAGARAJAN

 

Date: 7 April 2017

 

Time uploaded in London:-  6-36 am

 

 

Post No.3795

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பிப்ரவரி 2017 ஹெல்த்கேர் இதழில் வெளியான கட்டுரை

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 2

 

by ச.நாகராஜன்

 

 

7) நீங்கள் சாப்பிடும் சூயிங் கம் உங்கள் வயிற்றில் ஏழு வருடங்கள் தங்கி இருக்கும்.

 

சூயிங் கம்மில் இருக்கும் எலாஸ்டமர்கள், ரெசின்கள், வேக்ஸ் போன்ற  இடு பொருள்கள் ஜீரணிக்க முடியாதவையே. ஆனால் அதற்கு அவை ஏழு வருடங்கள் உங்கள் வயிற்றில் தங்கி இருக்கும் என்று அர்த்தமில்லை. அனைவராலும் பரிந்துரைக்கப்ப்டும்  பைபர் உள்ளிட்ட உணவு வகைகளும் கூட ஜீரணிக்க முடியாதவையே. ஆனால் ஜீரண அமைப்பானது வலிமை வாய்ந்த ஒன்று.  உட்கிரகிக்க முடியாதது என்று ஒன்று இருந்தாலும் கூட் அது தொடர்ந்து தன் வேலையைச் செய்யத்தான் செய்யும். சூயிங்கம்மின் ஒட்டுப் பசை போன்ற விசித்திரமான  இயல்பு பற்றிக் கவலைப்பட வேண்டாம்.. அது ஜீரணப் பாதை வழியே சென்று நேராக டாய்லட்டைத் தான் அடையும்.

 

8) இருட்டில் படித்தாலோ அல்லது டிவியின் அருகில் இருந்து பார்த்தாலோ உங்கள் பார்வை பழுதுபடும்.

மங்கிய வெளிச்சத்தில் பார்ப்பதோ அல்லது பலவண்ணம் கொண்ட டிவி டியூபை அருகிலிருந்து  பார்ப்பதோ நிச்சயமாக உங்கள் கண்களை அதிகம் உழைக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது நீண்டகால சேதத்தை விளைவிக்கும் என்பதற்கு இது வரை ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் இது ஒருவேளை உணமையாய் இருந்திருக்கக் கூடும் ஏனெனில் அப்போது சில டிவி பெட்டிகள் அதிக கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தன்மை உடையனவாக தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு பல காலம் ஆகிறது. இன்றைய டிவி பெட்டிகளும் கம்ப்யூட்டர்களும் பாதுகாப்பானவையே.

உங்கள் குழந்தைகள் டிவி அல்லது கம்ப்யூட்டரின் அருகில் இருந்து பார்த்தால், அது அவர்களின் கண்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகத் தோன்றினால் ஒரு டாக்டரிடம் சென்று கண் பார்வையைப் பரிசோதிப்பது நல்லது. தான். என்றாலும் கூட டிவி அருகிலிருந்து பார்ப்பது கண்ணாடி அணியும் தேவையை உருவாக்காது..

 

9) ஒரு நாளைக்கு நீங்கள் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

பொதுவாகப் பார்த்தால் உடலில் நீர்ச்சத்தே இல்லாமல் நாம் நடப்பதில்லை. அத்துடன் நமது உடல் பொதுவாகவே தனது திரவத்தின் அளவை சீராக்கிக் கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது 1945ஆம் ஆண்டு கிளப்பி விடப்பட்ட ஒரு தகவல். நேஷனல் ரிஸர்ச் கவுன்ஸிலைச் சேர்ந்த  ‘ஃபுட் அண்ட் நியூட்ரிஷன் போர்ட்; என்ற அமைப்பானது  வயதுக்கு வந்தவர்கள் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் நீர் அருந்த வேண்டும் (எட்டு டம்ளர் நீருக்குச் சமம்) என்று தெரிவித்தது. ஆனால் இதில் பரிதாபம் என்னவென்றால் அனைத்து ஊடகங்களும் இந்த வரியுடன் நிறுத்திக் கொண்டது. அடுத்த வரியைக் கவனிக்கவே இல்லை. அடுத்த வரியில் அது, இந்த இரண்டரை லிட்டர் நீரும் உங்களுக்கு உங்கள் உணவிலிருந்தே கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது.

ஆகவே இப்போது இந்த வரி இப்படி திருத்தப்பட வேண்டும். எட்டு டம்ளர் தண்ணீரை ஒரு நாளைக்கு குடியுங்கள் அல்லது அந்த அளவு நீரைத் தரும் உணவைச் சாப்பிடுங்கள்!

 

 

10) சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்துத் தான் நீச்சல் அடிக்கச் செல்ல வேண்டும்

 

இந்தத் தவறான தகவல் ஏராளமானோரின் பொன்னான மணி நேரங்களை வீணாக்கியது தான் மிச்சம். சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்துத் தான் நீச்சலுக்குச் செல்ல வேண்டும் என்று சொல்வதற்கான ஒரு காரணமும் உண்மையில் இல்லை. ஒரு பிரமாதமான விருந்திற்குப் பின்னர் எந்த விதமான உடல் ப்யிற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்பது பொதுவான உண்மை  தான்.   ஆனால் அப்படிப்பட்ட விருந்தை தினமும் ஒருவர் சாப்பிடுவதில்லை.

தினமும் சாதாரண உணவு வகைகளைத் தான் சாப்பிடுகிறோம். இன்னொன்று, விருந்தோ சாதாரண சாப்பாடோ அதிக வேகமாகப் பாயும் நீர் எப்போதுமே ஒருவருக்கு ஆபத்துத் தான்! அப்படிப்பட்ட நீரை விட்டுப் பாதுகாப்பான இடத்திற்குத் தான் நீங்கள் நீந்தச் செல்ல வேண்டும்.

 

11) இறந்த பிறகும் கூட விரல் நகங்களும் முடியும் வளரும்

 

இந்தத் தவறான தகவல் பல வருடங்களாக இயற்பியல் நிபுணர்கள் மறுக்க முடியாத ஒன்றாக இருந்தது. இதை அவர்களால் காரணத்துடன் மறுக்கவும் முடியவில்லை. இப்போது சரியான தகவல் தெரிய வருகிறது. இறந்த பின்னர் உடலில் உள்ள தோல் வறள ஆரம்பிக்கிறது. மெலிதான திசுக்கள் பின்னடைவு அடைகிறது. தோல் வறளும் போது நகங்கள் பார்ப்பதற்குத் தெளிவாகவும் பிரதானமாகவும் இருக்கிறது. இதுவே தான் முடி வளர்வது போலத் தோன்றுவதற்கும் காரணமாக ஆகிறது. தோல் சுருங்க ஆரம்பிக்கவே முடி மிகவும் பிரதானமாக ஆகிறது.வளர்வது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவிக்கிறது!

 

12) ஷேவ் செய்யப்பட்டவுடன் முடி வேகமாகவும், சொர சொரப்பாகவும், கறுப்பாகவும் ஆகிறது

இந்த தகவல் தவறு என்பதை நீங்களே உங்கள் முடியின் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அறிய முடியும். புதிய முடி வளரும் போது அதன் நுனி மழுங்கி இருக்கும். நாட்பட நாட்பட, அது நலிந்து மெலிதானது போலத் தோன்றும். அது சரி, அது ஏன் கறுப்பாகக் காணப்பட வேண்டும். மற்ற இடங்களைப் போல சூரிய வெளிச்சத்தால்  ப்ளீச் செய்யப்படாததால் தான்!

இது சம்பந்தமாக ஒரு ஆய்வு கூட இருக்கிறது. 1928இல் நடந்தது இது. ஷேவ் செய்த போதும் ஷேவ் செய்யப்படாத போதும் உள்ள முடி வளர்ச்சி பற்றி செய்யப்பட்ட ஆய்வில்  அது கறுப்பாகவும் இல்லை, சற்று கனமாகவும் இல்லை, அது வேகமாகவும் வளரவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது! சமீப காலத்திய ஆய்வுகளும் கூட இதை நிரூபிக்கின்றன.

 

12) காரமான உணவு வகைகள் மற்றும் மன அழுத்தம் அல்சர் என்னும் வயிற்றுப் புண்ணை உருவாக்குகின்றன

இரவு சாப்பிட்ட கார உணவு தான் வயிற்றுப்புண்ணை உருவாக்கி விட்டது என்று மறுநாள் காலையில் எண்ணினால் அது தவறு. ஒரு காலத்தில் டாக்டர்கள் மன அழுத்தம், வாழ்க்கை முறை மற்றும் கார வகை உணவுகளே அல்சருக்கு காரணம் என்று நம்பினர். ஆனால் இப்போதோ அல்சருக்கு காரணம் Helicobacter pylon  என்ற பாக்டீரியா என்பதைத் தெரிந்து கொண்டனர்.

வயிறில் சிறு குடலில் ஏற்படும்  புண்கள் சில சமயம் சில மருந்துகளினால் கூட வருகின்றன. ஆஸ்பிரின் இரும்புச் சத்துக்கான அயர்ன் மாத்திரைகள் ஆகியவையே வயிற்றுப் புண் ஏற்பட முக்கிய காரணம் என்று டாக்டர் அருண் சுவாமிநாத் என்பவர் கண்டு பிடித்துள்ளார். இவர் நியூயார்க் நகரில் உள்ள லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையில் இன்ஃப்ளேமெடரி பவல் டிசீஸ் திட்டத்திற்கான டைரக்டர் ஆவார்.

 

 

13)உங்கள் உடலில் உஷ்ணத்தின் பெரும் பகுதி தலை வழியே செல்கிறது.

இந்தத் தகவல் தவறானது என்று 2006ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது. மனித உடலில் உள்ள மொத்த உஷ்ணத்தில் தலை வழியே செல்லும் உஷ்ணமானது 7 முதல் 10 சதவிகிதம் அளவே என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது  தலையின் வழியே செல்லும் உஷ்ணமானது மொத்த உடலில் உள்ள தோல் பரப்பில் தலையில் உள்ள தோல்பரப்பின் விகிதாசார அளவிலேயே இருக்கிறது!

 

14) குளிரில் ஈரத் தலையுடன் வெளியில் சென்றால் ஜலதோஷம் பிடிப்பது நிச்சயம்

 

குளிர் காலத்தில் தலையை உலர்த்த நேரமில்லை என்று ஈரத் தலையுடன் வெளியில் செல்கிறீர்கள்,! ஜலதோஷம் வந்து விடும் என்று கவலைப் பட வேண்டாம்.

எல்லோரும் ஈரத் தலை ஜலதோஷத்தைத் தரும் என்று சொல்கிறார்கள். ஆனால் நிபுணர்களின் கருத்துப் படி வைரஸ் மற்றும் பாக்டீரியா தான் ஜலதோஷத்தைத் தருகின்றனவே தவிர காலநிலையில் உள்ள உஷ்ண நிலை மாறுபாடு அல்ல. ஆகவே தலை சிறிது ஈரமாக இருந்தாலும் கூட ஜலதோஷம் வந்து விடுமோ என்று கவலைப்படுவதை இனி விட்டு விடலாம்.

(அடுத்த இதழில் முடியும்)

. *************

 

ஆதாரம் : லைவ் ஸயின்ஸ் இதழ்

நன்றி: லைவ் ஸயின்ஸ்

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: