Written by London swaminathan
Date: 11 APRIL 2017
Time uploaded in London:- 21-43
Post No. 3809
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
காளிதாசனும் சங்க காலப் புலவர் முதுகண்ணன் சாத்தனாரும் தாமரை பற்றி ஒரே சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இரண்டு உவமைகளிலும் சொல் ஒற்றுமை தவிர வேறு சுவையான செய்தியும் உள்ளது.
தமிழில் கோவில் என்றால் வைணவர்களுக்கு திருவரங்கம்; சைவர்களுக்கு சிதம்பரம். இதே போல மலர் என்று சொன்னால் தமிழில் தாமரை, வடமொழியில் புஷ்பம் என்று சொன்னால் தாமரை.
ரிக்வேதத்திலும் அதர்வ வேதத்திலும் புஷ்ப, புஷ்கரம், புண்டரீகம் என்ற மூன்று சொற்கள் தமரைக்குப் பயன்படுத்தப் படுகிறது.
புஷ்கரம் இருக்கும் இடம் புஷ்கரணி (கோவில் குளம்)
தாமரைக்கு சம்ஸ்கிருதத்தில் அதிகமான பெயர்கள்! இந்துப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் பூ — அதிலும் குறிப்பாக — தாமரை தொடர்பானதாகவே இருக்கும் (கமலம், பங்கஜம்,நீரஜம், அரவிந்த, தாமரை…. என்று).
காளிதாசன் மட்டும் 90 இடங்களில் தாமரை உவமையைப் பயன்படுத்தியுள்ளான். பெண்களின் முகம், கை, கால், விரல், உதடு என்று பல இடங்கள். மலராத மொட்டு- சோகமான முகத்துக்கும் மலர்ந்த பூ- சிரித்த முகத்துக்கும் உவமை. ஆனால் சூரியனைக் கண்ட தாமரை போல என்ற உவமை சங்க இலக்கியத்தில் இல்லை- காளிதாசனில் உண்டு.
தாமரைக்குள்ள பல பெயர்களில் சத பத்ரம் ( நூற்றிதழ்), சஹஸ்ரபத்ர (ஆயிரம் இதழ்) என்ற பெயர்களும் அடக்கம்.
பிரம்ம தேவன் தாமரையில் அமர்ந்திருப்பதனால் அவருக்கு சதபத்ர யோனி என்ற பெயர் உண்டு. பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் தொப்புளில் இருந்து தாமரைமேல் பிறந்தவர்.
இதை காளிதாசன் குமார சம்பவ காவியத்தில் (KS 7-46) பயன்படுத்துகிறான்
“சிவன் ஓரக்கண்ணால் பார்த்தபோது பிரம்மாவைப் பார்த்து தலை அசைத்தாராம்; விஷ்ணுவைப் பார்த்தவுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினாராம்; இந்திரனைப் பார்த்து புன்னகை உதிர்த்தாராம். மற்றவர்களை ஒரு ‘லுக்’ (look) விட்டாராம். அதாவது ஒரு பார்வை மட்டுமே. அந்தக் காலத்தில் அரசர்கள், மற்றவர்களை அந்தஸ்து, பதவிக்கு ஏற்ற முறையில் வரவேற்றது இப்படித்தான்.
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்டுதோறும் ஆயிரம் பிரமுகர்களுக்கு மஹாராணி விருந்து கொடுப்பார். எனக்கும் என் மனைவிக்கும் அழைப்பு வந்திருந்தது. நாங்கள் போயிருந்தோம். மஹாராணி எலிசபெத் அம்மையார் எங்களுக்கு மிக அருகில் வந்தார். ஆனால் எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. நாங்கள் அவரை முன்பின் அறியாதவர்கள். எங்களுக்கு மிக அருகில் சில பிரமுகர்கள், எம்.பி.க்கள் பிரபுக்கள் (Lords) ஆகியோரும் நின்றிருந்தனர். அவர்களில் சிலரைப் பார்த்தார்; சிலரைப் புன்னகைத்தார்; ஒரு சிலரிடம் ஓரிரு வார்த்தைகள் நவின்றார். இதைத்தான் காளிதாசன் குமார சம்பவ காவியத்தில் சிவ பெருமானும் செய்ததாகப் பாடுகிறான்.
அந்தப் பாடலில் அவன் பிரம்மாவுக்குப் பயன்படுத்திய சொல் சதபத்ரயோனிம். இதை முதுகண்ணன் சாத்தனார் (புறநானூறு 27) எப்படிப் பயன்படுத்துகிறார் என்று காண்போம்:
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண்கேழ்,
நூற்று இதழ் அலரின் நிரைகண்டன்ன
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து,
வீற்றிருந்தோரை எண்ணும் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரை இலை போல மாய்ந்தசினோர் பலரே;
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக்
………………………
(புறம்.27, சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது)
பொருள்:-
“சேற்றில் வளரும் தாமரையில் தோன்றிய செந்தாமரை மலரின் நூற்றுக் கணக்கான இதழ்களும், தம்முள் வேற்றுமையில்லாமல் உயர்வுடன் தோன்றும். அதுபோல வேற்றுமை இல்லாத உயர்ந்த குடியில் பிறந்து வாழ்ந்தவராயினும், அவர்களுள் உரையும் பாட்டுமாகப் புகழப்பட்டோர் சிலரே ஆவார். தாமரையின் இலை போல புகழில்லாமல் இறந்தவர்களே அதிகம். புலவர் பாடும் புகழுடையோர்– வானத்தில் விமானியே இல்லாமல் தானே இயங்கும் விமானத்தில் பறக்கும் அளவுக்கு உயர்வர். அவர் தாம் செய்த செயல்களை எல்லாம் இப்பூவுலகில் செம்மையாக நிறைவேற்றியவர் ஆவர்”.
இந்தப் பாட்டில் நூற்றிதல் தாமரை = சத பத்ர என்ற செய்தியுடன் விமானி இல்லாத விமானம், அதில் புனித ஆத்மாக்கள் பறப்பது, புகழுடையோர் சிலர்; புகழில்லாமல் வாழ்பவரே மிகப் பலர்– என்ற செய்தியும் கிடைக்கிறது.
காளிதாசன் தாமரை தொடர்பாக 90 உவமைகளைப் பயன்படுதினான். சங்கத் தமிழில் சுமார் 20 உவமைகள் உள்ளன. படித்துப் பயன்பெறுக.
-சுபம்–