written by S NAGARAJAN
Date:11 April 2017
Time uploaded in London:- 5-44 am
Post No.3807
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
விஞ்ஞானம் மெய்ஞானம்
ஞான ஆலயம் மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை
விஞ்ஞானம் நிரூபிக்கும் வால்மீகி முனிவர் கூறும் உண்மைகள்!
by ச.நாகராஜன்
நாஸா நிரூபிக்கும் சேது
அறிவியல் முன்னேற முன்னேற பல்வேறு ஆய்வின் முடிவுகள் ஹிந்து மதம் கூறும் தத்துவங்களையும் கொள்கைகளையும் உண்மை என நிரூபித்துக் கொண்டே வருகின்றன.
வால்மீகி தான் இயற்றிய ராமாயணத்தில் உண்மையைத் தவிர வேறொன்றும் உரைக்கவில்லை.
நாஸா எடுத்த சாடலைட் படம் சேது அணை இருப்பதை உறுதி செய்ததை நாம் அறிவோம் (ஞான ஆலயம் டிசம்பர் 2007 இதழில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையை வாசகர்கள் நினைவு கூரலாம்)
ஜெர்மனியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்களான புரபஸர் க்ளாஸ் டி ருல் (Prof Klaus D Ruhl) மற்றும் அவரது இந்திய சகாவான புரபஸர் விஷாத் திரிபாதி ஆகியோர் ராமர் கட்டிய சேதுவைப் பற்றிய உண்மையை நிரூபிக்கத் தயார் என்று அகில உலக இராமாயண் மாநாட்டில் 2007இல் அறிவித்தனர்.
இராமர் பிறாந்த தேதி
இராமாயணம் நடந்த காலத்தில் ராமர் பிறந்த நேரத்தில் இருந்த பல்வேறு கிரக் நிலைகளை வால்மீகி ரிஷி கூறியிருப்பதை வைத்து ஆராய்ந்து அப்படிப்பட்ட கிரக நிலைகள் கிறிஸ்து பிறப்பதற்கு 5114 ஆண்டுகளுக்கு முன்னர் ஜ்னவரி மாதம் 10ஆம் தேதி அமைந்திருந்ததாக இப்போது பிரபல ஆராய்ச்சியாளர் புஷ்கர் பட்நாகர் கூறுகிறார்.. தி இன்ஸ்டிடியூட் ஃபார் ஸயிண்டிபிக் ரிஸர்ச் ஆன் வேதா என்ற ஆய்வு நிறுவனம் இந்த கணிதத்தைப் போடுவதற்கான ஒரு விசேஷ மென்பொருளை வடிவமைத்துள்ளது. அதன் உதவி கொண்டு இந்த முடிவை அவர் கண்டுள்ளார். இதே கிரக நிலைகள் சுழற்சி அடிப்படையில் இதற்கு முன்னர் வரும் போது காலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள தேதியைக் காண்பிக்கும் என்பது இன்னும் சில அறிஞர்களின் முடிவு.
196 ராமாயண ஸ்தலங்கள்!
2002 ஆம் ஆண்டில் டாக்டர் ராம் அவதார் சர்மா என்ற ஆய்வாளர் ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட 196 இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அங்கெல்லாம் இன்றும் கூட ராமாயணம் நடந்ததற்கான சின்னங்கள் இருப்பதை உறுதிப் படுத்தியுள்ளார்.
குகனின் வமிசாவளியினர்
டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சௌபே மற்றும் புரபஸர் வி.ஆர்.ராவ் ஆகியோர் இன்னொரு உண்மையைத் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.மிராஜ்பூர், வாரணாசி,பண்டா மற்றும் அலஹாபாத் ஆகிய இடங்களில் இன்றும் இருந்து வரும் கொல் என்னும் பழங்குடியினர் குகனுடைய வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுடைய மரபணுக்கள் பத்தாயிரம் வருடங்களாக இருந்து வரும் ஒரு குடியினரின் மரபணுக்களாகும் என்ற அவர் கூற்று ஆரியர் இந்தியாவின் மீது படையெடுத்து வநதனர் என்ற ஆரிய-திராவிட வாதத்தைத் தவிடு பொடியாக்குகிறது.
பிரித்தாளும் சூழ்ச்சியில் கை தேர்ந்த ஆங்கிலேய அரசுக்கு உறுதுணையாக இருந்த பல அறிஞர்களின் கட்டுக்கதையான ஆரிய திராவிட வாதம் தற்போதைய பல்வேறு அறிஞர்களின் ஆய்வால் முற்றிலும் கட்டுக்கதை என்பது நிரூபணமாகி விட்டது.
நான்கு தந்தங்கள் கொண்ட யானை உண்மையே
சுந்தர காண்டத்தில் இராவணனின் அரண்மனை நான்கு தந்தங்கள் கொண்ட யானைகளால் காவல் காக்கப்படுவதை வால்மீகி முனிவர் நான்காவது ஸர்க்கம் 29ஆம் சுலோகத்தில் “வாரணைச்ச சதுர்தந்தை:” என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகிறார்.
அதே காண்டத்தில் 27ஆம் ஸர்க்கத்தில் வரும் சுலோகம் இது:
ராகவஸ்ச மயா த்ருஷ்டச் சதுர்தந்தம் மஹாகஜம் |
ஆரூட: சைல சங்காஷம் சசார சஹ லக்ஷ்மண: ||
விபீஷணனின் பெண்ணான திரிஜடை, இராவணன் அழிக்கப்பட்டு சீதையுடன் இராமன் சேருவதாகத் தான் கண்ட கனவை சீதையிடம் கூறுகிறாள். அப்போது அவள் கூறும் இந்த சுலோகத்தின் பொருள்: “ராகவர் லக்ஷ்மணரோடு கூடியவராய் நான்கு தந்தங்களை உடைய குன்று போல உள்ள யானையின் மீது ஏறினவராக என்னால் காணப்பட்டார்”
நான்கு தந்தங்கள் கொண்ட யானையே இல்லை; அது கற்பனை என பல “பகுத்தறிவுவாதிகள்” கிண்டலும் கேலியுமாக கூறி வந்ததுண்டு.
ஆனால் என்கார்டா என்சைக்ளோபீடியா (Encarta Encyclopedia) என்னும் கலைக்களஞ்சியம் இப்படிப்பட்ட நான்கு தந்தங்கள் கொண்ட யானைகள் 38 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்பதையும் அவற்றின் பெயர்
மஸடோடோண்டாய்டியா (MASTODONTOIDEA) என்றும் குறிப்பிடுகிறது. அந்த இனம் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து பட்டது என்றும் பின்னர் இரண்டு தந்தங்கள் உடைய யானைகள் தோன்றின என்றும் அந்தக் கலைக் களஞ்சியம் தெரிவிக்கிறது.
ஆய்வுகள் பல நவீன உபகரணங்களுடன் நடத்தப்பட நடத்தப்பட புதிய உண்மைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் வால்மீகி கூறி இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே என்பதை நிரூபிக்கின்றன.
சத்தியத்தின் அடிப்படையில் சத்திய நாயகனான ராமனின் சரிதத்தைக் கூறும் வால்மீகி ராமாயணத்தில்,
“ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம்” – அதில் வரும் ஒவ்வொரு எழுத்தும் கூறப்படுகையில் அது மகா பாதகத்தையும் போக்கி விடும் என்று முன்னோர் கூறியது பொருள் படைத்ததல்லவா!
******