Written by London swaminathan
Date: 16 APRIL 2017
Time uploaded in London:- 8-57 am
Post No. 3823
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
சிலப்பதிகாரத்தில் மாடல மறையோன் என்ற பிராமணன், கண்ணகி-கோவலன் கதையின் பாலமாக அமைகிறான். கதையிலுள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவது இந்தப் பிராமணனே. அதுமட்டுமல்ல, நாடே நடுங்கும் சர்வ வல்லமை படைத்த சேரன் செங்குட்டுவனுக்கு அறிவுரை பகரும் துணிச்சலும் உடையவன் இந்தப் பிராமணன் ஒருவனே.
மாடலன் பல முக்கியச் செய்திகளைச் சொல்லுகிறான்:—
1.பாண்டிய மன்னன், 1000 பொற்கொல்லர்களைப் பலி கொடுத்தான்
2.கண்ணகி-கோவலன் பெற்றோர்களின் பரிதாபமான முடிவு
3.மாதரி என்னும் இடைக்குலப் பெண் தீப்பாய்ந்து இறந்தாள்
4.மாதவி புத்தமத துறவி ஆனாள்
5.சமண மதப் பெண் துறவி கவுந்தி அடிகள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தாள்
6.மாதவி, தனது மகள் மணிமேகலை, ஒருக்காலும் நாட்டியத்தொழிலில் இறங்கக்கூடாது என்று உத்தரவிட்டாள்.
இப்படிப் பல செய்திகளை இளங்கோ யாத்த சிலப்பதிகார காவியத்தின் நீர்ப்படைக் காதையில் வரிசையாகக் காணலாம்.
மாதரி தீப்பாய்ந்த சம்பவம்:-
தாதெரு மன்றத்து, மாதரி எழுந்து,
“கோவலன் தீதிலன்; கோமகன் பிழைத்தான்;
அடைக்கலம் இழந்தேன்; இடைக்குல மக்காள்!
குடையும், கோலும் பிழைத்தவோ” என
இடையிருள் யாமத்து எரியகம் புக்கதும்”
பொருள்:
இடைக்குல மக்கள் சந்திக்கும் தாதெருமன்றத்தில் மாதரி உரத்த குரலில் சொல்கிறாள்: கோவலன் எந்தத் தப்பும் செய்யவில்லை; அரசன்தான் தவறு செய்தான்; செங்கோல் வீழ்ந்ததோ! அந்தோ அடைக்கலம் கொடுத்த ஆட்களை இழந்துவிட்டேனே” — என்று சொல்லி நள்ளிரவில் தீக்குளித்தாள்.
xxxxx
கவுந்தி அடிகள் உயிர்நீத்தாள்
தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்
…………..
உண்ணா நோன்போடு உயிர்பதிப் பெயர்ர்ந்ததும்
பொருள்:
சமணப் பெண் துறவி கவுந்தி அடிகள் உண்ணாநோன்பு நோற்று உயிர் துறந்தாள்.
xxxxx
மாசாத்துவான், புத்தர் விகாரம் சென்றவுடன் அவன் மனைவி இறத்தல்:–
கோவலன் தாதை கொடுந்துர எய்தி
மாபெரும் தானமா வான்பொருள் ஈத்து, ஆங்கு
இந்திர விகாரம் ஏழுடன் புக்கு
…………
துறந்தோன் மனைவி, மகன் துயர் பொறாஅள்
இறந்தவர் எய்தி, இரங்கி மெய்விடவும்
பொருள்:
கோவலன் தந்தை எல்லாப் பொருட்களையும் தானம் செய்துவிட்டு பௌத்த மத இந்திர விஹாரத்துள் சென்றான். அவன் மனைவி வருத்தமுற்று இறந்தாள்.
xxxxx
Statues of Kannaki and Kovalan
மாநாய்கன் தானம், மனைவி இறத்தல்:—-
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத்து ஆசீவகர்முன்
புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
தானம் புரிந்தோன் தன்மனைக் கிழத்தி
நாள்விடூஉ, நல்லுயிர் நீத்து, மெய் விடவும்
பொருள்:
கண்ணகியின் தந்தையும் தனது செல்வத்தை தானம் செய்துவிட்டு, ஆசீவகர் வழி சென்றான். அவன் மனைவி துயருற்று இறந்தாள்.
xxxxx
மாதவி துறவி ஆனாள்:—
மற்றது கேட்டு, மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு, நற்றிறம் படர்கேன்;
மணிமேகலையை வாதுயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாதொழிக எனக்
கோதத் தாமம் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறம் கொள்ளவும்
பொருள்:-
மாதவி தனது மாலையுடன், முடியை வெட்டிவிட்டு புத்த மத துறவி ஆனாள்; தனது மகள் நடனக் காரியாகக் கூடாதென்று தாயிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்.
xxxxx
ஆயிரம் பொற்கொல்லர் பலி!
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர்-ஐஞ்ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு,
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற்காலை
தென்புலமருங்கின், தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின்,
நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட
ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன்;
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
வாழ்க , எம் கோ! வழிய, பெரிது, என
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டாங்கு, இருந்த எல்லையுள்………….
பொருள்:
மாடலன் என்னும் பிராமணன் எல்லாக் கதைகளையும் மேற்கண்டவாறு செப்பினன்; செங்குட்டுவனுக்கு ஆர்வம் மேலிடவே, ஐயரே! மதுரை என்ன வாயிற்று? என்று கேட்டனன். அதற்கு அந்தப் பிராமணன் சொன்னதாவது: ” கொற்கையிலே இருந்த வெற்றிவேற்செழியன் மதுரைக்கு வந்தான். பொன் வேலை செய்யும் ஆயிரம் பேரை, தன் ஒரு முலையை வெட்டி எறிந்த திருமாபத்தினிக்கு (கண்ணகிக்கு) மாலை வேளையில் உயிர்ப்பலியாகப் படைத்துத் தன் பழைய புகழினை இழந்த மதுரை மூதூரில் அரசு கட்டில் ஏறினான். அவன் தீதற்ற சீர்மையுடன் மக்களைக் காத்துவரும் முறைமை உடையவன். ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு சக்கரமே உடைய தேரில் பவனி வரும் சூர்ய தேவன் இருளை நீக்குவது போல, அந்த சந்திர குலப் பாண்டியன் செழியன், பாண்டிய நாட்டின் அவலத்தைப் போக்கி, சிம்மாசனம் ஏறி, அங்குச் சூழ்ந்திருந்த இருளினை அகற்றினன்.
எம் கோமானே! ஊழிதோறும் ஊழிதோறும்,உலகினைக் காத்து நீயும் வாழ்வாயாக” -என்று சேரன் செங்குட்டுவனை அந்தப் பிராமணன் (மறையோன்) வாழ்த்தினான்.
—சுபம்–