Written by S NAGARAJAN
Date:18 April 2017
Time uploaded in London:- 5-29 am
Post No.3828
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
by ச.நாகராஜன்
பகவான் ரமணரைப் பார்க்க வந்த பக்தர் ஒருவர், “எனது வியாபாரத்தை விட்டு விட்டு, வேதாந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார்.
அதற்கு ரமண மஹரிஷி,” உன்னை விட்டு வெளியே தான் பொருள்கள் இருக்கிறதென்றால் அவற்றை விட்டு நீ போய் விடலாம். ஆனால் அவை உன்னை விட்டு வெளியே இல்லை. உனக்குள்ளே தான் இருக்கிறது. உனது எண்ணங்களாக! ஆகவே அவற்றை விட்டு உன்னால் எப்படி வெளியே போக முடியும்?
வேதாந்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பிப்பது என்றால் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும் கூடப் படிக்கலாம். ஆனால் அவை சொல்வது என்ன?
உனக்குள்ளிருக்கும் ஆத்மாவை அறி என்றே அவை அனைத்தும் சொல்கின்றன. ஆத்மன் உனக்குள்ளே தான் இருக்கிறது. அதை உன்னால் தான் அறிய முடியும். உனக்குள் தான் அது இருக்கிறது” என்று பதில் கூறினார்.
16-3-1945 அன்று காலையில் இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஆனால் இது பற்றியே அன்று மாலை மீண்டும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பகவான் இப்படி பதில் சொன்னார்:” உலக விஷயங்களை விட்டு உன்னால் எப்படிப் பறந்தோட முடியும்? அவை மனிதனின் நிழல் போன்றவை. நிழலை விட்டு மனிதன் போக முடியாததைப் போல கூடவே இருப்பவை அவை. ஒரு வேடிக்கையான கதை ஒன்று உண்டு. ஒரு மனிதன் தன் நிழலைப் புதைக்க விரும்பினான். ஆழமான குழி ஒன்றை அவன் தோண்டினான். தனது நிழலைக் குழியின் அடியில் பார்த்து மகிழ்ந்த அவன் மண்ணை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் குழியை மூடினான். ஆனால் குழி முழுவதும் நிரப்பப்பட்ட பின்னர் குழியின் மேலே அவன் நிழல் தெரிந்தது. இதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டு ஏமாற்றமடைந்தான்.
அதைப் போலவே தான் பொருள் களும்அல்லது விஷயங்களைப் பற்றிய எண்ணங்களும். ஆத்மாவை அறியும் வரை உனக்குள்ளே உன்னுடனே தான் அவை இருக்கும்!”
இதற்குத் தான் மிக எளிமையான வழியாக அவர் “நான் யார்?” என்பதை நினைத்துக் கொண்டே இரு. அது உனக்கு வழி காட்டி சரியான இடத்தை அடைய வைக்கும் என்றார்.
மிக எளிமையான வழியை அநுபூதி கண்ட மஹரிஷி மிக எளிமையாக விளக்கி விட்டார்.
அந்த வழியை மேற்கொள்ள அவரது அநுக்கிரஹம் வேண்டித் தான் அவரை நாம் வழிபடுகிறோம்.
ரமணரின் வழி எளிய வழி; அந்த வழியில் இட்டுச் செல்ல அவரது அருள் வேண்டும் என்பதால் அவரைப் பணிவோம்; உயர்வோம்!
***
Source : Day by Day with Bhagawan by Sri A.Devaraja mudaliyar