Written by S NAGARAJAN
Date:19 April 2017
Time uploaded in London:- 5-49 am
Post No.3830
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை!
ச.நாகராஜன்
பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் படிக்கும் பக்தர்கள் பொதுவாகவே அவர் தீவிர சிந்தனையிலும் இறை உணர்விலும் இருப்பதை உணர்வர். ஆனால் உலகியல் வாழ்க்கைக்கு ஏற்ப அவர் நகைச்சுவை உணர்வுடன் இருந்து பக்தர்களின் பதிலை ஏற்றுக் கொண்டதைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு.
இதை எடுத்துக் காட்டும் விதத்தில் பகவானின் அணுக்க பக்தரான குஞ்சு சுவாமிகள் பல சம்பவங்களைக் கூறியதுண்டு.அவற்றில் சில:
பகவானுடன் கிரி வலம் வரும் பக்தர்கள் பொதுவாக தெய்வீகப் பாடல்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடிக் கொண்டே செல்வது வழக்கம். ஆனால் ஒரு பையன் மட்டும் மௌனமாக பகவானுடன் வருவது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அனைவரும் ஆளுக்கு ஒரு பாடலைப் பாடி முடித்த போது பகவான் அந்தப் பையனைப் பார்த்து, “எல்லோரும் பாடி விட்டார்களே! நீ ஒன்றைப் பாடக் கூடாதா?” என்றார். அதற்கு உடனே அந்தப் பையன், “ஜீவன் முக்தர்கள் எங்காவது பாடுவார்களா?” என்றான்.
இதைக் கேட்ட பகவான் விழுந்து விழுந்து சிரித்தார்.
சத் தரிசன பாஷ்யம் என்ற நூலை எழுதிய கபாலி சாஸ்திரியார் பகவானின் அணுக்க பக்தர். வேத ரகசியங்களை நூல்களாக எழுதியவர். பின்னாளில் இவர் அரவிந்த ஆசிரமத்திலும் தங்கி இருந்தவ்ர். அவருக்கு திருமணத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை. ஆனால் அவர் வீட்டிலோ அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வைக்க முயன்றனர். ஒரு நாள் அவர் பகவானிடம் வந்து, “ நான் நாளை ஆசிரமத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திக்குருக்கிறேன்: என்றார்.
ஆசிரமத்தை ஏற்றுக் கொள்வது என்றால் பொதுவாக சந்யாச் ஆசிரமத்தை ஏற்றுக் கொள்வதாகத் தான் அர்த்தம்,.
பகவான் ஆச்சரியத்துடன், “அப்படியா! கபாலி! அதற்கு வீட்டில் அனுமதி வாங்கியாகி விட்டதா?” என்று கேட்டார்.
அதற்கு அவர், “நான் இரண்டாவது ஆசிரமத்தைச் சொன்னேன். பிரமசர்யத்திலிருந்து கிரஹஸ்தாசிரமம் போக முடிவு செய்து விட்டேன்” என்றார்.
பகவான் இதைக் கேட்டுச் சிரித்தார்.
முதலியார் பாட்டி என்று அழைக்கப்பட்ட மூதாட்டி பகவானுக்கு அன்டன் தான் சமைத்த உணவைக் கொண்டு வந்து தருவது வழக்கம். பகவான் அதிகமாகச் சாப்பிடாமல் மிகவும் குறைந்த அளவே சாப்பிடுவதாக அவர் எண்ணி வருத்தப்பட்டார். அதனால் சாதத்தை அமுக்கி அமுக்கி சிறிய உருண்டையாக ஆக்கி அதை பகவானுக்குப் படைத்தார். இந்த ட் ரிக்கைக் கண்ட பகவான் பாட்டியைப் பற்றி, “பாட்டியின் ட் ரிக் எனக்குத் தெரியாதா என்ன, அமுக்கி அமுக்கி நிறைய சாதத்தை இப்படிச் செய்கிறாள்” என்று கையால் சாதத்தை உருண்டையாக் அமுக்கிக் காட்டினார்.
இதற்கு பாட்டியிடமிருந்து உடனே பதில் வந்தது ரமணரின் பாணியிலேயே!
பகவான் கையால் அமுக்கி காட்டிய சைகையை அப்படியே திருபபிச் செய்து, “எது அதிகம், எது குறைச்சல்? எது பெரிது, எது சிறிது? எல்லாம் நம் பாவனையில் தான் இருக்கிறது.” என்றார் பாட்டி.
தன் கூறும் சொற்களாலேயே தன்னை பாட்டி மடக்குவதைக் கண்ட ரமணர் சந்தோஷத்துடன், “ பார், பார்! நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறாள்” என்று கூறினார்
இது போன்ற ஏராளமான சம்பவங்கள் பகவானின் வாழ்வில் அவ்வப்பொழுது இடம் பெறுவது உண்டு. பகவானும் இவற்றை வெகுவாக ரசிப்பார். நகைச்சுவை உணர்வுடன் அவர் பக்தர்களின் சொற்களையும் செய்கைகளையும் ஏற்றுக் கொள்வார்.
இதில் பக்தர்களுக்கும் ஆனந்தம்; பகவானுக்கும் ஆனந்தம்!
***