Written by London swaminathan
Date: 26 APRIL 2017
Time uploaded in London:- 9-23 am
Post No. 3853
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
ஒருவருக்கு ஆன்மீகப் பாதையில் முன்னேற குரு அவசியம் என்பது இந்துக்களுக்குத் தெரியும். ஆயினும் ஏன் அவசியம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றனர் நீதி வெண்பா பாடிய புலவரும் ராமகிருஷ்ண பரம்ஹம்சரும்.
இறைவன் என்பவன் எங்கும் நிறைந்த ஜோதி- காட்டுத்தீ
குரு என்பவர் விளக்கு
ஆயினும் வெளிச்சம் வேண்டுவோரோ அல்லது நெருப்பு வேண்டுவோரோ காட்டுத் தீயிடமோ சூரியனிடமோ நெருங்கிப் போக முடியுமா?
முடியாது.
விளக்கை நெருங்கலாம்; பயன்படுத்தலாம். வெளிச்சமும் கிடைக்கும்; அதி.லிருந்து நெருப்பை எடுத்து இன்னொரு விளக்கும் ஏற்றலாம்; அடுப்பையும் பற்றவைத்து சமைக்கலாம்.
முற்று மிறை செயலே முற்றிடினுந் தன்னருளைப்
பெற்றவர்தம் பாலே பெரிதாகும் – பற்றுபெருந்
தாபத் திடத்தே தழன்றிடினும் நற்சோதி
தீபத் திடத்தே சிறப்பு
நீதி வெண்பா பாடல் (புலவர் பெயர் தெரியாது)
பொருள்:–
நல் சோதி =நல்ல ஒளி
பற்று பெரு தாபத்திடத்து = பற்றக் கூடிய பெரிய காட்டுத் தீயினிடத்தில்
தழன்றிடினும் = ஒளி விட்டாலும்
தீபத்திடத்தே = விளக்கினிடத்திலேயே
சிறப்பு = அந்த ஒளிக்குச் சிறப்பு ஆகும்
(அது போல)
முற்றும் = உலகெங்கும்
இறை செயல் = கடவுளின் அருள்
முற்றிடினும் = நிறைந்திருந்தாலும்
தன் அருளைப் பெற்றவர்தம் பாலே = ஆண்டவனின் அருளைப் பெற்ற அடியாரிடத்திலேதான்
பெரிதாகும்= இறைவன் அருள் அதிகமாகக் கிடைக்கும்.
அதாவது எளிதில் பெறலாம்.
சதுரங்க (Chess செஸ்) விளையாட்டும் குருவும்
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார்:- ” சதுரங்க விளையாட்டை ஆடிக் கொண்டிருப்பவர்களைவிட, ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எந்தக் காயை நகர்த்துவது சரியான ஆட்டமாகும் என்பதை நன்கு சொல்லக்கூடும். உலகத்திலுள்ள மனிதர்கள் தாங்கள் வெகு சமர்த்தர்கள் என்று கருதுகின்றனர். ஆனால் பணத்தாசை, கௌரவ (புகழ்) ஆசை, விஷய சுகங்கள் இவை போன்ற உலகப் பற்றுகள் அவர்களை விட்டபாடில்லை. விளையாட்டில் கலந்திருப்பதனால் சதுரங்கக் காயை சரியானபடி நகர்த்துவதற்குச் சாத்தியமில்லாமற் போகின்றது. உலகத்தைத் துறந்த புண்ய புருஷர்கள் அதனுள் சம்பந்தப் பட்டிருப்பது இல்லை. அவர்கள் சதுரங்க ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் போன்றவர்கள். விஷயங்களின் உண்மைச் சுபாவம் அவர்களுக்குத் தெரிகின்றது.
உலகத்தில் உழலும் மனிதர்களைவிட அவர்களே விஷயங்களை நன்றாக எடை போடமுடியும். அதாலால் நல்ல வாழ்க்கையை விரும்புவோர், ஈசுவரனைத் தியானித்து அவனை நேரில் கண்டவர்களின் சொற்களில் நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு வழக்கு தொடர்பாக ஆலோசனை கேட்க எப்படி வக்கீலிடம் போகிறோமோ அப்படி ஆன்மீக விஷயங்களுக்குக் குருவிடம் போக வேண்டும்.
ஒரே குரு ஏன்?
நமக்குக் கொஞ்சம் கொஞ்சம் விஷயங்களைக் கற்பிக்கும் ஒவ்வொருவரையும் குரு என்று சொல்லாமல் ஒரே ஒருவரை மட்டும் குரு என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
முன்பின்னறியாத தேசத்திற்கு நீ போனால், அவ்விடங்களில் பரிச்சயமுள்ள ஒரு வழிகாட்டியை (Guide கைடு) நம்பி அவன் சொல்கிறபடி நீ நடக்க வேண்டும். அப்படி இல்லாமல் அங்கு பலபேர் சொல்கிறபடி நடந்தால் நீ நிச்சயமாகத் தடுமாறிப்போவாய். அது போல ஈசுவரனை அடையும் முயற்சியில், அவரிடம் போகும் வழியைத் தெரிந்துகொண்ட ஒருவரின் — ஒரு குருவின் — புத்திமதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
24 குருக்கள்
குரு ஒருவராக இருப்பினும் உப குருக்கள் பலர் இருக்கலாம். எந்த ஒன்றையும் யாரிடமிருந்து கற்றாலும், அவர் ஒரு உப குரு ஆகின்றார். மஹானான அவதூதருக்கு அப்படிப்பட்ட உப குருக்கள் இருபத்து நான்கு பேர் இருந்தனர்”.
இது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது.
–சுபம்–