Written by S NAGARAJAN
Date:26 April 2017
Time uploaded in London:- 5-52 am
Post No.3851
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 28
பாரதியும் ஏவிஎம்மும் – சில உண்மைகள்!
ச.நாகராஜன்
பாரதியும் ஏவிஎம்மும் என்ற இந்த மின்னுலை எழுதியவர் ஹரி கிருஷ்ணன். 2000ஆம் வருட இறுதியில் அகத்தியர் குழுவில் எழுதி பின்னர் சிஃபி.காமால் தொடராக இது வெளியிடப்பட்டிருக்கிறது.
பாரதியின் பாடல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கிடைக்கப்பட வேண்டும் என்று பாரதி பக்தர்கள் பெரும் முயற்சி எடுத்தனர். அதைப் பற்றிய உண்மை வரலாற்றை அலசி ஆராய்ந்து உண்மைகளைத் தரும் நூல் இது.
முக்கியமாக பாரதியாரின் நூல்களை ஏவி. மெய்யப்பச் செட்டியார் காப்புரிமை பெற்று வைத்திருந்ததையும் அவரிடமிருந்து அது தமிழக அரசால் பெறப்பட்ட விதத்தையும் அதில் அடங்கி இருக்கும் “உண்மைகளையும்” தருவது இந்த நூலாசிரியரின் நோக்கம்.
மஹாகவி மறைந்த 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கு திலகர் ஸ்வராஜ்ய நிதியிலிருந்து ஆயிரம் ரூபாயும் தமிழ் மக்கள் உதவிய நிதி ரூபாய் பன்னிரெண்டும், ரங்கூனிலிருந்து வந்த நிதியாதாரமும் சேர்ந்து ஒரு தொகை கிடைத்தது. பாரதி ஆசிரமம் என்ற ஒரு அமைப்பை மஹாகவியின் மனைவியார் செல்லம்மா பார்தியும், பாரதியின் மைத்துனர் ரா.அப்பாதுரையும் சேர்ந்து ஏற்படுத்தினர்.
1924இல் பாரதியாரின் இளைய மகள் சகுந்த்லாவுக்குத் திருமணம் நடந்த போது பாரதியாரின் பாடல்கள் அடகு வைக்கப்பட்டு இரண்டாயிரம் ரூபாய் கடனாகப் பெறப்பட்டது. பாடல்கள் அதிக விற்பனையை எட்டாத நிலை.
பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாவும் பாரதியாரின் தம்பி சி.விசுவநாதனும் இயன்ற அளவு பாரதியாரின் பாடல்களைப் பரப்ப முயன்றனர்.
பாரதியின் பஜனை சமாஜம் என்ற அமைப்பை மதுரையில் சீனிவாச வரதன் ஆரம்பித்து வீதி தோறும் பாரதி பஜனைகள் செய்தார்.
பாரதியாரின் பாடல்களை தமது நாடகங்களில் எஸ்.ஜி.கிட்டப்பா போன்றோர் பாடிப் பரப்பினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தி அரும் பாடு பட்டு பாரதியாரைப் பரப்ப பெரு முயற்சி எடுத்தார்.
1931ஆம் ஆண்டு பாரதியாரின் பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமையை திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்.
ஆனால் இந்த பாடல்களை ஏவி எம் வாங்கியது பற்றி எதிரொலி விசுவநாதன் என்னும் பாரதி பக்தர் வேறு விதமாகக் கூறுகிறார். பாரதியாரின் தம்பி சி.விசுவநாதன் 1941க்கும் 1944க்கும் இடையில் ஒரு மார்வாடி கடையில் பாரதியாரின் பாடல்களைப் பாடும் உரிமையை விற்று விட்டார். அவரிடமிருந்து ஏவிஎம் அதிகப் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்.
இத எதிரொலி விசுவநாதனின் தகவல்.
1944ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் மாநாடு கோவையில் நடந்தது. அதில் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் தனி நபரிடமிருந்து பாரதி பாடல்களை “மீட்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது.
அவ்வை டி.கே சண்முகம், எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் இதற்குத் தங்கள் ஆதரவை நல்கினர்.
1947இல் பாரதியின் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதையொட்டி வெளியிடப்பட்ட மலரிலும் மற்றும் நாளிதழ்களின் சிறப்பு மலர்களிலும் கூட பாரதியாரின் பாடல்களை வெளியிட ஏவிஎம்மின் அனுமதி தேவைப்படவே அவரது அனுமதி பெறப்பட்டு வெளியிடப்பட்டது.
11-3-1948இல் பாரதி விடுதலைக் கழகம் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு வ.ரா. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாரண.துரைக்கண்ணன், அ.சீனிவாசராகவன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் திருலோக சீதாராம் மற்றும் வல்லிக்கண்ணன் ஆகியோர் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
4.8.1934 அன்று ஜோஷிங்லால் மேத்தா “வாங்கிய” பாரதியாரின் பாடல்களை ஏவிஏம் 10-9-1946 அன்று “வாங்கினார்.” அவர் மூன்றண்டுகள் பாரதியாரை “தம்மிடம் வைத்திருந்தார்”.
இந்த நிலையில் வ.ராவின் மணி விழா நடைபெற இருந்தது. அதற்கு நிதியுதவி செய்யும் முக்கியமானவர்களில் கல்கி ஒருவர். அவர் வ.ராவிடம் மெய்யப்ப செட்டியாரை எதிர்த்து பாரதி விடுதலைக் கழகத்தில் தலைவர் பதவி வகிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்ள தலைவர் பதவியை நாரண.துரைக்கண்ணன் ஏற்றார்.
இதற்கிடையில் ஔவை சண்முகம் சகோதரர்கள் பில்ஹணன் என்ற தமிழ் படத்தை 1948ஆம் ஆண்டு எடுக்க அந்தப் படத்தில் பில்ஹணன் நாடகத்தில் வரும் பாரதியாரின் பாடல்களை அப்படியே பயன்படுத்தி இருந்தனர். தன் அனுமதியின்றி திரைப்படத்தில் அந்தப் பாடல்களைப் பயன்படுத்தியது தவறு என்று பாரதியாரின் “உரிமையாளரான” மெய்யப்பர் ஒரு அறிக்கையை விடுத்தார்.
இதை அடுத்து மண்டபம் கட்டி மகிழ்ந்த தமிழ் மக்களுக்கு பாரதியை விடுவிக்க வேண்டாமா என்று டி.கே.எஸ். சகோதரர்கள் தமிழ் மக்களின் முன் ஒரு வேண்டுகோளை வைத்தனர். இதனால் வெகுண்ட மெய்யப்பர் அவர்கள் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
முன்பே பாரதியாரின் பாடல்களை வெளியிட்ட பரலி சு.நெல்லையப்பர் வழக்கில் சாட்சி சொல்ல முன் வந்தார். பாரதியாரின் கைப்பட எழுதப்பட்ட கடிதங்களை நெல்லையப்பர் நீதிமன்றம் முன் வைத்து பாரதியார் தமிழர்களின் சொத்து என்றார்.
ஏவிஎம்மின் வழக்கு நீதி மன்றத்தில் தோற்றது.
பாரதியார் ‘விடுதலை’யானார்.
அப்போது மத்ராஸ் பிராந்தியத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ரெட்டியாரை பாரதி விடுதலைக் கழகத்தார் சந்தித்து பாரதியின் பாடல்களை நாட்டுடமை ஆக்க வேண்டுமென்று வேண்டினர்.
அவரது குடும்பத்தினரிடமிருந்து இதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும் என்றார் முதல்வர்.
உடனடியாக ஐவர் அடங்கிய குழு பாரதியாரின் மனைவியார் செல்லம்மா பாரதியைச் சந்தித்தது. அவர் மனமுவந்து அற்புதமான ஒரு கடிதத்தை எழுதி ஒப்புதலை அளித்தார்.
பின்னர் ஒரு நாள் வெரி அர்ஜெண்ட் என்று இரவு ஏழு மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் மெஸஞ்சர் மூலமாக உடனடியாகத் தன்னைச் சந்திக்க மெய்யப்பருக்கு அழைப்பு விடுத்தார் ஓமந்தூர் ரெட்டியார்.
எட்டு மணிக்கு அவரைச் சந்தித்த ஏவிஎம் இந்தக் கணமே அரசுக்கு உரிமையை மாற்றி வழங்கி விடுகிறேன் என்று கூற, பாரதியார் பாடல்கள் அரசின் வசம் வந்தன.
நாரண துரைக்கண்ணனின் குழந்தை டிப்தீரியாவில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த போது அதையும் பொருட்படுத்தாமல் நாரண துரைக்கண்ணன் பாரதி பணிக்காக ஓடோடிச் சென்றார். அவரது குழந்தை இறந்து விட்டது.
பல பேரின் உழைப்பும் தியாகமும் பாரதியாரின் மீது கொண்ட பக்தியும் அதற்கு அடிப்படையில் தமிழ் பக்தியும் தேச பக்தியும் இருந்ததால் பாரதியார் நிஜமாகவே தமிழ் மக்களுக்குச் சொந்தமானார்.
மேலே கண்ட விவரங்களை வரிசையாக அழகுற ஹரி கிருஷ்ணன் தெரிவிக்கிறா இந்த நூலில்.
பாரதி பக்தர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
ஆனால் நூல் முழுவதும் கொப்பளிக்கும் கோபமும் எரிச்சலும் மெய்யப்பரின் மீதான காரசாரமான வார்த்தைகளும் நூலின் நல்ல ஆய்வு நோக்கத்தைச் சற்று தடம் பிறழச் செய்கிறது.
பாரதியாரின் பாடல்களை வாங்கி மெய்யப்பர் பொருள் ஈட்டினார் என்பது நூலாசிரியரின் உள்ளார்ந்த மனதிலிருந்து எழும் ஆதங்கம்.
பாரதியாரின் வரலாற்று ஆசிரியர்கள் மெய்யப்பரை காப்பாற்றி, “வரலாற்றின் உண்மையை மறைத்தும் திரித்தும் எழுதுவது எத்தனை வெட்கக்கேடு “ என்று ஹரி கிருஷ்ணன் தனது வேதனையைக் கொட்டித் தீர்க்கிறார்.
கோபம், எரிச்சல், ஏமாற்றம், வேதனை ஆகியவற்றைச் சற்றுத் தூரத் தள்ளி வைத்து விட்டு, விடப்பட்டிருக்கும் சில உண்மைகளையும் ஆவணங்களையும் சேர்த்து இன்னும் நல்ல விதமாக இன்னொரு பெரிய நூலை ஹரி கிருஷ்ணன் எழுதினால் அது பாரதி இயலுக்கு உகந்த ஒரு சிறப்பான நூலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தமிழுக்கும் அது அணி சேர்க்கும்.
ஹரி கிருஷ்ணனுக்கு எமது பாராட்டுகள்.
இந்த நூலை இணைய தளத்தில் கீழ்க்கண்ட தொடுப்பில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்;
http://www.freetamilbooks.com/ebooks/bharati-and-avm