Written by London swaminathan
Date: 27 APRIL 2017
Time uploaded in London:- 17-50
Post No. 3857
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
பெரியோர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் ஒரு நொடியில் பெரிய அரசாட்சியையும் கவிழ்த்துவிடக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்று திருவள்ளுவர் உள்பட பல தமிழ்ப் புலவர்கள் எச்சரிக்கின்றனர்.
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியோடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து —(குறள் 898)
பொருள்:-
“குணங்களால் குன்று போல உயர்ந்த பெரியவர்கள், ஒருவனை அழிக்க நினைத்தால், நிலைத்து நின்றவர்களும் கூடக் குலத்தோடு அழிந்து போவார்கள்”— என்று வள்ளுவன் எச்சரிக்கிறான்.
ஆனால் அவர்களுக்கு கோபம் வந்த வேகத்தில், தணிந்தும் விடும்.
குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது (குறள் 29)
நற்குணம் வாய்ந்தவர்கள், சிறு தவறுகளையும் பொறுக்க மாட்டார்கள். கோபப்படுவார்கள் (ஆகையால் கவனம் அவசியம்) — என்பது ஒரு பொருள்.
இன்னொரு பொருள்: அவர்கள் கோபப்பட்டாலும் அது கணப்பொழுதில் மறைந்து விடும்; சாபமே தந்தாலும், அந்த சாபத்துக்கு ஒரு விமோசனமும் கொடுத்து விடுவார்கள் என்பது இன்னும் ஒரு பொருள்.
நீதி வெண்பா பாடிய புலவர் (பெயர் கிடைக்கவில்லை) சொல்கிறார்:-
அந்தத் தமிழ்ப் புலவர் செப்புவது யாதெனின்:
கடவுளுக்கு அவமரியாதை செய்தாலும், மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுவான்; ஆனால் அவனது அடியார்களுக்குத் தீங்கிழைத்தால் கடவுளே கூட மன்னிக்க முடியாது. அந்த அடியாரே மனது வைத்து தயை கூர்ந்தால்தான் கதி விமோசனம்.
ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த
நேசரெதிர் நிற்ப தரிதாமே — தேசு வளர்
செங்கதிர்முன் நின்றாலுஞ் செங்கதிர் வன்கிரணந்
தங்கு மணல் நிற்கரிதே தான்
தேசுவளர் = ஒளி மிக்க
செங்கதிர் முன் = சூரியனுக்கு முன்னால்
நின்றாலும் = வெய்யிலில் நின்றாலும்
செங்கதிரவன் கிரணம் தங்கும் மணல் = அந்தச் சூரியனின் சூட்டைக் கிரகித்த ஆற்று மணலில்
நிற்க அரிது = நிற்க முடியாது
அது போல
ஈசன் எதிர் நின்றாலும் = எல்லாம் வல்ல கடவுளை எதிர்த்துப் பேசினாலும், செயல்பட்டாலும்
ஈசன் அருள் பெற்று = அந்த இறைவனின் அருள் பெற்ற
உயர்ந்த = உயர்ந்த இடத்தை அடைந்த
நேசர் எதிர் = அடியார்களுக்கு எதிராக
நிற்பது அரிது =நிற்றல் இயலாது.
நகுலன், சுமுகன், வேனன், நவநந்தர்கள் அழிந்தனர்!
அகந்தையால் அழிந்த மன்னர்களின் பட்டியலை மனு, தனது மானவ தர்ம சாத்திரத்தில் தருகிறார். அவர் சொல்லும் சுமுகன் என்பவன் யார் என்று யாருக்கும் தெரியாது. சுமேரியாவில் மட்டுமே சுமுகன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருக்கிறான்.
அகத்தியனைப் பகைத்த நகுலன் வீழ்ந்தான்;
மக்களைப் பகைத்த வேனன் விரட்டப்பட்டான்;
பரசுராமன் 21 தலைமுறை மன்னர்களை அழித்தான்;
பிராமணர்களைப் பகைத்த நந்த வம்சத்தை அடியோடு அழித்த சாணக்கியன், மகத சாம்ராஜ்யத்தை தாபிக்க உதவினான்.
முஸ்லீம் அரசர்களை வேருடன் சாய்க்க சிவாஜிக்கு சமர்த்த ராமதாசும், ஹரிஹரன், புக்கனுக்கு வித்யாரண்யரும் உதவினர்.
இதைக் கருத்திற்கொண்டே வள்ளுவன் பகர்வான்:-
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும் (குறள் 899)
பொருள்:-
உயர்ந்த கொள்கையுடையவர் கோபப்பட்டால், நாட்டை ஆளும் மன்னர்களும், இடை முறிந்து, பதவியை இழப்பான் – என்பது வள்ளுவனின் எச்சரிக்கை.
எமனை அழைக்காதீர்கள்!
கூற்றத்தை கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்ன செயல் (குறள் 894)
பொருள்:-
பெரியவர்களுக்கு தீங்கு செய்தவர்கள், பின்னால் வரக்கூடிய யமனுக்கு அழைப்பிதழ் அனுப்பி என்னை இப்போதே கூட்டிச் செல் என்று சொல்லுவதற்குச் சமம்.
—Subham–