Written by S NAGARAJAN
Date: 5 May 2017
Time uploaded in London:- 5-37 am
Post No.3879
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 29
சொன்னால் நம்ப மாட்டீர்கள் : பாரதி மணி மண்டப வரலாற்றில் சுவையான சம்பவங்கள்!
ச.நாகராஜன்
தேசியச் செல்வர் சின்ன அண்ணாமலையின் நினவலைகளை அவர் மிக மிகச் சுவையாகக் கூறும் நூல் : சொன்னால் நம்ப மாட்டீர்கள். 40 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை எடுத்தால் முடிக்க வேண்டியது தான்! முடிக்காமல் கீழே வைக்கவே முடியாது!
ஏராளமான சம காலத்திய சம்பவங்களை அவர் சுவைபடக் கூறும் போது பாரதி பற்றிய செய்திகள் ஆங்காங்கே விரவி வருகின்றன. இவற்றில் பாரதி பக்தர்களைப் பற்றியும், பாரதியைப் பரப்பியவர்களைப் பற்றியும் மக்கள் உலக மகாகவியை எப்படி ஏற்றுக் கொண்டனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக பாரதிக்கு மணி மண்டபம் அமைக்க முயன்ற கல்கியும் சின்ன அண்ணாமலையும் நேசத்தாலும் பாசத்தாலும் இணைந்தவர்கள். இதை விளக்க ஒரே ஒரு சம்பவம்.
திடீரென்று ஒரு நாள் அண்ணாமலையை அழைத்த கல்கி அவரிடம் போர்டு ஆங்கிலியா காரின் சாவியைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்கிறார். காரை ஓட்டிப் பார்த்த அண்ணாமலை அது நன்றாக இருப்பதாகக் கூறுகிறார். சாவியை அவரிடமே தந்த கல்கி இது உங்களுக்குத் தான் என்கிறார்.
எத்தனை நாள் தான் தினமும் கல்கி வீட்டிற்கு அவர் பஸ்ஸில் போவதாம்! என்ன ஒரு அபாரமான அன்பு, நட்பு.
கல்கியினால் சொற்பொழிவாளனாக மாறிய சின்ன அண்ணாமலை தமிழகத்தையே தன் நகைச்சுவை பேச்சினால் சிரிக்க வைத்தார்.
அவர் பாரதி நிதி பற்றி குறிப்பிடும் இடத்தை அவர் சொற்களிலேயே பார்ப்போம்: அத்தியாயத் தலைப்பு : பாரதி நிதி
“எட்டயபுரம் பாரதி மண்டப நிதிக்காக கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் நானும் கோயம்புத்தூர் சென்றிருந்தோம். இலக்கிய ரசிகர்கள் நிரம்பிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டோம். ரசிகர்கள் நிதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கூட்டத்திலிருந்த ஒரு ரசிகர் எழுந்து கல்கி அவர்களே! தாங்கள் எழுதும் ‘சிவகாமியின் சபதம்’ நீண்டு கொண்டே போகிறதே?” என்று சொல்லிக் கொண்டே வரும் போதே நான் இடைமறித்து, “ஆமாம்! நீண்டு கொண்டு தான் போகிறது.
ஐயா, குரங்கிற்குத் தான் வால் நீண்டு கொண்டு போகக் கூடாது. மயிலுக்குத் தோகை நீண்டால் என்ன?” என்று ஒரு போடு போட்டேன்.
அதைக் கேட்டவுடனே மேற்படி ரசிகர், “தங்கள் பதில் என்னைப் பரவசமடையச் செய்து விட்டது. நான் பாரதி நிதிக்குப் பத்து ரூபாய் தான் கொடுக்கலாம் என்று வந்தேன். இப்போது இதோ நூறு ரூபாய் கொடுக்கிறேன்” என்று கூறு ரூ 100 பாரதி நிதிக்குக் கொடுத்தார்”.
கல்கி பாரதி மணி மண்டபம் கட்ட எப்படியெல்லாம் உழைத்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இன்னொரு சம்பவத்தை சின்ன அண்ணாமலை, ‘நாடோடியாக நடித்தேன்’ என்ற அத்தியாயத்தில் தருகிறார்.
பெங்களூரில் பாரதி மணி மண்டப நிதி அளிப்பு விழா நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் நாடோடி அவர்களைக் க்லந்து கொண்டு நிதியைப் பெற்று வர கல்கி ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கடைசி நிமிஷத்தில் நாடோடி அவர்களால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. சின்ன அண்ணாமலையிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார் கல்கி.
நாடோடி என்று ரிஸர்வ் செய்யப்பட்ட சீட்டிலேயே பயணம் செய்தார் சின்ன அண்ணாமலை. பெங்களூரிலும் ரயில் நிலையத்தில் அவரை ‘நாடோடியாகவே’ வரவேற்றார்கள்.
சின்ன அண்ணாமலை தான் யார் என்பதைச் சொல்லவில்லை.
கூட்டத்தில் அவரை நாடோடியாகவே நினைத்து அவரைப் பற்றி அனைவரும் பேசினர். 2000 ரூபாய் நிதி கிடைத்தது.
கூட்டத்தில் நாடோடியாகப் பேசிய சின்ன அண்ணாமலை இறுதியில் “நான் ஒரு ரகசியத்தைச் சொல்லப் போகிறேன். அதைக் கேட்டால் திடுக்கிட்டுப் போவீர்கள். ஆனால் அதை நான் இலவசமாகச் சொல்ல விரும்பவில்லை. ஆளுக்கு நான்கணா பாரதி மணி மண்டப நிதியாகத் தருவதாக ஒப்புக் கொண்டால் சொல்கிறேன்” என்று கூறி நிறுத்தினார்.
“தருகிறோம். ஆனால் நீங்கள் சொல்லப்போகும் உண்மை எங்க்ளுக்குத் தெரிந்ததாக இருந்தால் என்ன செய்வது” என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
“அது தெரிந்திருக்கவே முடியாது” என்றார் சின்ன அண்ணாமலை.
“நீங்கள் நாடோடி அல்ல. சின்ன அண்ணாமலை என்பது எங்களுக்குத் தெரியும் என்றார் அவர்.
சின்ன அண்ணாமலை அசந்து போனார்.
கல்கி நாடோடிக்குப் பதிலாக் சின்ன அண்ணாமலை வருவதாகத் தந்தி ஒன்று கொடுத்திருந்தார்.
சின்ன அண்ணாம்லை நாடோடியாக இருப்பதை விரும்பியது போலவே கூட்டத்தினரும் அவரை நாடோடியாக ஏற்றுக் கொண்டனர்.
இதன் விளைவு: கூட்டத்திற்கு வந்தவர்கள் தனித் தனியாகக் கொடுத்த தொகை ரூ 650/
அடடா, எப்படிப்பட்ட சம்பவங்களின் மூலம் பாரதி மணி மண்டபம் எழுந்திருக்கிறது!
மணி மண்டபத்திற்கு பாரதி அன்பர்கள் தந்த ஒவ்வொரு காசும் பொற்காசு தானே!
சங்கப் பலகை என்ற அத்தியாயத்தில் இன்னும் ஒரு பாரதி மணி மண்டப நிதி சேர்ப்பு சம்பவம் இருக்கிறது.
தேச பக்தர்கள் பற்றிய சுவையான நிகழ்ச்சிகளும் நூலில் அடக்கம்.
பாரதி அன்பர்கள் பாரதி மணி மண்டப வரலாற்றை அறிவது அவசியம்.
அதற்கு இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.
குமரன் பதிப்பகம், சென்னை டிசம்பர் 2004இல் வெளியிட்ட இந்த புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 242.
***