Written by S NAGARAJAN
Date: 6 May 2017
Time uploaded in London:- 5-49 am
Post No.3882
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாக்யா 5-5-2017 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
பூமியைக் காப்பாற்ற நாஸாவின் புதுத் திட்டம்!
ச.நாகராஜன்
“சந்திரனை ஆராய்வதற்காக இவ்வளவு தூரம் சந்திரனுக்கு நாம் வந்துள்ளோம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்போது நாம் நமது பூமியைக் கண்டு பிடித்திருக்கிறோம்” – அபல்லோவில் சென்ற் விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ்
தத்து எடுப்பது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு பழக்கம் தான்! பிள்ளைகளை சுவீகாரம் எடுப்பது போல இப்போது நிறுவனங்களும் பல கிராமங்களை தத்து எடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது வரவேற்கத்தக்க ஒரு நவநாகரீக முன்னேற்றம்.
இந்த வழியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா ஒரு புதுத் திட்டத்தை வகுத்திருக்கிறது. பூமியை தத்து எடுக்கும் திட்டம் தான் அது.
நாளுக்கு நாள் பூமியில் இருக்கும் அனைத்து வளங்களும் சுரண்டப்பட்டு வருகின்றன. நீர் வளம், ஆற்றில் உள்ள மண் வளம், போன்றவை சுரண்டப்படுகின்றன; பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மாசு படுத்தப் படுகிறது.
இதனால் புவியைப் பாதுகாக்க நாஸா விழிப்புணர்ச்சிய ஏற்படுத்த முன் வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி பூமியின் மேற்பரப்பானது 64000 அறுகோண வடிவமுள்ள துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 55 மைல் அகலமுள்ளது. இவற்றில் யார் வேண்டுமானாலும் ஒரு பகுதியைத் தத்து எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ஏதாவது ஒரு பகுதி அளிக்கப்படும். அவர்களுக்கு தத்து எடுத்ததற்கான நற்சான்றிதழும் வழங்கப்படும். 2017, ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினம் என்பதால் அதற்குள் 64000 துண்டுகளையும் தத்து எடுக்க அனைவரும் முன் வர வேண்டுமென்று நாஸா வேண்டுகோள் விடுத்துள்ளது. 64000 பகுதிகளும் தத்து எடுக்கப்பட்டால் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
புவி விஞ்ஞானம் சம்பந்தமாக 18 விண்வெளி கலங்களை நாஸா இதுவரை அனுப்பியுள்ளது. இவற்றிற்கு உறுதுணையாக பெரும் கப்பல்கள், விமானங்கள், தரையில் இயங்கும் பெரும் சோதனைக்கூடங்கள் ஆகியவை அனைத்து உதவிகளையும் செய்கின்றன. இதன் மூலம் பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை இவை அளிக்கின்றன.
இந்த திட்டங்களின் மூலம் கடல் உஷ்ணநிலை, தாவரங்களின் நிலை, மேகங்கள் இருக்கும் உயரம், வளிமண்டலத்தில் உள்ள தூசு, மாசு, மண்வள்ம் உள்ளிட்ட பல அரிய புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பூமியைத் தத்து எடுத்துக் கொண்டோர் புவி வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும், அவ்வளவு தான்!
பூமியைப் பற்றி ஏராளமான அரிய தகவல்கள் உள்ளன.
நமக்குத் தெரிந்த வரையில் இந்த பிரபஞ்சத்தில் உயிரினம் வாழத் தகுதி உள்ள ஒரே கிரகம் பூமி தான்!
பூமியில் என்ன அடங்கியிருக்கிறது என்று பார்த்தால் நமக்குக் கிடைப்பது இரும்பு – 32.1%, ஆக்ஸிஜன் – 30.1%, சிலிகான் – 15.1%, மக்னீஷியம் – 13.9% மற்றவை 8.8 %
பூமியின் மேற்பரப்பில் 70 சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது. நீலக் கடலை விண்வெளி விஞ்ஞானிகள் மேலிருந்து பார்த்து ஆச்சரியப்பட்டு இதற்கு நீல கிரகம் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது சரி தான் என்று மகிழ்ந்து கூறினர்.
பூமியின் வளி மண்டலம் சுமார் பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் வரை உள்ளது. முதல் 50 கிலோமீட்டர் மிகவும் அடர்த்தியாக இருக்கிறது
பூமி ஒரு முறை சுற்றுவதற்காக ஆகும் காலம் 23 மணி, 56 நிமிடம் 4 விநாடிகள். சூரியன் தனது பாதையில் ஒரு டிகிரி நகர்தலையும் எண்ணிப் பார்க்கும் போது இது 24 மணி நேரமாக ஆகிறது
பூமியில் ஒரு வருடம் என்பது சரியாகப் பார்த்தோமேயானால் 365.2564 நாட்கள் ஆகும். கூடுதலாக உள்ள .2564 நாளை நான்கு வருடத்திற்கு ஒரு முறை லீப் வருடத்தில் சேர்த்துக் கொள்கிறோம். பூமிக்கு ஒரு சந்திரனும் இரண்டு சாடலைட்டுகளும் உண்டு.
இப்படி புவி பற்றிய அரிய விவரங்கள் ஏராளம் உண்டு. ஆகவே தனித்துவம் மிக்க நாம் வாழும் கிரகத்தைக் காப்பாற்ற உத்வேகமூட்டவே பூமி தினம் கொண்டாடப்படுகிறது.
இதை நாஸா நல்ல விதத்தில் கொண்டாட, தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒரு செய்தியே
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ஃபேஸ்புக்கை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு பல விசித்திரமான பொழுதுபோக்குப் பழக்கங்கள் உண்டு.
ஒவ்வொரு வருடமும் ஒரு புது ஹாபியை அவர் மேற்கொள்வார். 2009ஆம் ஆண்டு அவர் ஒவ்வொரு நாளும் ஒரு புது டையை அணிந்து கொண்டு அனைவரையும் அசத்தினார். 2010ஆம் ஆண்டு அனைவருக்கும் அவர் ஒரு சவால் விட்டார்- தான் சீன மொழியான மாண்டரினைக் கற்று புலமை பெறப் போவதாக! அதன்படியே சீன மொழியை தினமும் கற்றார்.
2011ஆம் ஆண்டு அவர் எடுத்த ஹாபி – தன் கையால் கசாப்பு செய்யப்பட்ட மாமிசத்தையே தான் உண்ணப் போவதாக எடுத்த முடிவு. கலிபோர்னியாவில் பன்றி மாமிசத்தை நண்பர்களுடன் அவர் சாப்பிடும்போது அவர்கள் தாங்கள் அதை விரும்பிச் சாப்பிட்டாலும் கூட அது உயிருடன் இருந்ததை நினைக்க விரும்பவில்லை என்றனர். இதை பொறுப்பற்ற தன்மை என்று விமரிசித்த அவர் கோழி வெள்ளாடு பன்றி போன்றவற்றை எப்படி அறுப்பது என்பதைக் கற்று தானே கசாப்பு வேலையை ஆரம்பித்தார். இதனால் வெளியிடங்களில் சென்று சாப்பிடும் போது அவர் சைவ உணவையே சாப்பிட வேண்டியிருந்தது. இப்படி விசித்திர பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் ஃபேஸ்புக்கில் உள்ள வேலைப் பளுவிலிருந்து மீள முடிகிறது என்கிறார் அவர்!
***