Written by S NAGARAJAN
Date: 11 May 2017
Time uploaded in London:- 6-26 am
Post No.3897
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 30
சென்று போன சில நாட்கள் : எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடுவின் நூல்
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியாரின் நண்பர்களில் ஒருவர் எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு. புதுச்சேரியில் அவருடன் நெருங்கிப் பழகியவர். அவர் அமிர்த குணபோதினி என்ற மாதப் பத்திரிகையில் பாரதியாரைப் பற்றிய பல குறிப்புகளை சென்று போன சில நாட்கள் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தார்.
1928ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் 1929ஆம் ஆண்டு ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய ஆறு மாதங்களில் வெளி வந்த அவரது கட்டுரைகள் பல சுவையான செய்திகளைத் தெரிவிக்கின்றன.
அவற்றில் ஒரு சில பகுதிகளை மட்டும் இங்கு காண்லாம்.
*
அந்தக் காலத்தில் பாரதியார் தீவிர தேசபக்தராயிருந்தார். எதிலும் நிதானத்தையே யனுசரித்து நின்ற ஸ்ரீமான் ஜி.சுப்பிரமண்ய ஐயரின் கொள்கைகளில் பாரதியார் வேறுபட்டுப் பிரிந்து இந்தியா என்ற தமிழ் வாரப் பத்திரிகையைத் தொடங்கி அதற்கு ஆசிரியராக அமர்ந்தார்.அப்பத்திரிகையின் சொந்தக்காரர் வேறொருவராவார். பாரதியாரின் தமிழ் நடை அது முதற்கொண்டு ஒரு புதுவழியில் மாறியது. அதற்கு முன்னர் எவரும் அவ்வழியில் பத்திரிகையை நடத்தவில்லையென்று சொல்லும்வாறாக வெகு சிறப்புடனும் திறமையுடனும் எழுதி வரத் தொடங்கினார். சிறுசிறு பதங்களுடன் கூடிய ஒரு நவீன கம்பீர நடை. இந்தியா பத்திரிகை சனிக்கிழமை தோறும் வெளியாகி வந்தது. நாலாயிரம் பிரதிகள் வரைப் போய்க்கொண்டிருந்தது.
*
1907ஆம் வருஷத்தில் பரிமளா என்ற நாவலை அச்சிட நாம் சென்னை சென்றிருந்த சமயம் ஒரு கொடிய முறை ஜ்வரத்தினால் வருந்தும்படியாக, பாரதியாரே பரிமளா ‘புரூப்;கள் முக்காற் பாகத்தையும் திருத்தி முடிவு செய்து, அந்த நாவலைப் பற்றி இந்தியா பத்திரிகையின் தலையங்கத்தில் ஆறு கலங்கள் வரை மதிப்புரை வரைந்தார். அதிலே மொழி பெயர்க்குந் தொழிலைக் குறித்தும் தமிழின் இயற்கை இனிமையைக் குறிக்கும் ‘அங்கனாமணி’ என்பதிலும் ‘பெண்மணி’ என்ற தமிழ்ச் சொல் மிக்க இனிமையுடையது என்றும் விஸ்தாரமாக வரைந்தார்.
*
பாரதியாரைப் பிடித்துத் தருவோருக்கு நூறு ரூபாய் பரிசு தரப்படுமென்று ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதிலே அவரது உயரம் இத்தனை அடியென்றும், கஞ்சா, புகையிலை உபயோகிப்பவரென்றும், பூணூலை எடுத்துவிட்டவரென்றும் இன்னும் பல குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
*
புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலையில் ‘தமிழ்நாட்டைப் பற்றி நல்ல கருத்துகள் அமையப் பெற்றதும் அதன் பெருமையை விளக்கக்கூடியதுமான பாடல்களை புனைந்து அனுப்புவோருக்கு இன்ன வெகுமதி தரப்படும்’ என்று ஒரு விளம்பரம் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது….
பாரதியாரின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்ரமணிய ஐயரவர்களும் மற்றும் சில நண்பர்களும் அந்த விளம்பரத்தின் படி ஒரு பாடல் செய்ய வேண்டுமென்று பாரதியாரை நிர்ப்பந்தப் படுத்தினர். அவர்கள் அதிகாரம் செய்யப் பாத்தியதை பெற்றவர்கள். பாரதியார் இவர்களின் விருப்பத்தைக் கேட்டு புன்னகை கொண்டார். வேறு பதில் சொல்லவில்லை. அதன் பின்பு வாத்தியார் ஐயரவர்கள், “வெகுமதிக்கு, நான் உங்களைப் பாடச் சொல்லவில்லை. சங்கத்துப் பண்டிதர் அநேகரின் முன்பு உங்கள் கவி ஜோடி கேட்கட்டுமே என்று தான் சொல்லுகிறேன். சங்கத்தார் கவி கேட்பது தமிழ் நாட்டைப் பற்றி செந்தமிழில் பாடிக் களிக்கட்டும் என்ற நோக்கத்துடன் தான்; ஆகையால் இந்த விஷயத்தில் நீங்கள் ஏன் லோபித்தனம் காட்ட வேண்டும்? என்று குத்திப் பேசிக் கேட்டார். “அதற்கு நான் சொல்லவில்லை” என்று இழுத்தார் பாரதியார். வாத்தியார், “அதெல்லாம் போகிறது, எங்களுக்குத் தேவை ஸ்வாமி” என்று ஒரே போடு போட்டு விட்டார்.
பாரதியார் அதற்கு “நான் கட்டாயம் பாட்டு எழுதி விட்டு மூச்சு விடுகிறேன். அது வேண்டுமென்கிற சங்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் அனைவரும் சர்க்காருக்கு நண்பர்கள். எனது கவியை ‘நல்லது’ என்று அவர்கள் உரத்துச் சொல்லக் கூடப் பயப்படுகிறவர்கள், அதனால் தான் தாமதித்தேன்” என்று சொல்லி ஒரு நிமிஷ நேரம் பூப்பூவாய் நகைத்தார். உடனே வரைவதற்கு எழுதுகோலைக் கொண்டார்.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே”
என்று பல்லவி எழுதி வாசித்துக் காண்பித்தார். வாத்தியார் மலைத்தார். எடுத்த விஷயங்கள் அத்தனையும் பல்லவியிலேயே சுருக்கமாக முடிந்து விட்டது.
*
பாரதியார் எவ்வளவோ காலம் வாழப் போவதாக எண்ணியிருந்தார். எவ்வளவோ வேலைகள் செய்ய நினைத்திருந்தார். ஒரு வாரப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்று நம்மிடம் தர்க்கித்தார். பழைய இந்தியாவின் காரமான நடை கூடாதென்று நாம் சொன்னதையும் ஒப்புக் கொண்டார். 1920ஆம் வருஷத்து சுதேசமித்திரன் அனுபந்தத்தில் நல்ல வேலை செய்தார். 1921ஆம் வருஷ ‘மித்திரன்’ அனுபந்தத்திற்கு இல்லாமல் போய்விட்டார். அவர் வாழ்த்திச் சென்ற தமிழ்நாட்டில் சமீபத்தில் அவரது கீதங்களை அரசாங்கத்தினர் தடுத்து விட்ட ‘திருவிழாவும்’ நடந்தது. நற்காலமாய் அந்தத் தடை நிவர்த்திக்கப்பட்டது தமிழகத்தின் பாக்கியமே. பாரதியார் 1907ஆம் வருஷத்தில் தமது நண்பரொருவர் மரித்ததற்காக இரங்கிச் சில பாடல்கள் புனைந்தார். அச்சமயம் நாமும் அருகிலிருந்தோம். அவற்றின் இரண்டு அடிகளை இப்பொழுது பாரதியாருக்கே உபயோகித்து இவ்வியாசத்தை முடிக்கின்றோம்.
“அந்தோ மறலி நம் அமுதினைக் கவர்ந்தான்
நொந்தோ பயனில்லை; நுவலயாதுளதே!”
*
பாரதியாரைப் பற்றி இப்படி ஆறு இதழ்களில் ராமானுஜலு நாயுடு அவர்கள் அருமையாக எழுதியுள்ள இந்தக் கட்டுரைகள் அவர் இறந்த ஏழு ஆண்டுகளிலேயே வந்திருப்பது குறிப்பிடத் தகுந்தது.
பாரதியார் அன்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் ‘சென்று போன சில நாட்கள்’
****