நிழல் போலத் தொடரும்-புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 5 (Post No.3928)

நிழல் போலத் தொடரும்-புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 5 (Post No.3928)

 

Written by London Swaminathan

 

Date: 21 May 2017

 

Time uploaded in London: 7-42 am

 

Post No. 3928

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (3914) 16th May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (3901) 12-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (3899) 11-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-1(3896) 10th May 2017

 

தீயவை

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 

ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.

தம்மபதம் 1,2

 

xxx

 

வள்ளுவர் சொன்னார்,

 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல் (குறள்-314)

 

ஒருவர் யாராவது நமக்குத் தீங்கு செய்தால் அவர் வெட்கப்படும்படி நாம் அவருக்கு நன்மை செய்ய வேண்டும்; பின்னர் அவர் செய்த தீமையையும் நாம் செய்த நல்லதையும் மறந்து விட வேண்டும்.

புத்தர் சொன்னார்,

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை தம்மபதம் (5)

xxx

 

மலையின் மீது இருந்து காணும் காட்சி

வள்ளுவர் சொன்னார்,

 

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை (திருக்குறள் 758)

 

தன் கையில் பொருள் ஒன்றை வைத்துக் கொண்டு கவலையில்லாமல், காரியத்தினைத் தொடங்குவது, மலையின் மீது நின்று கொண்டு கீழே நடக்கும் யானைகளின் சண்டையைக் காண்பது போன்றது.

புத்தர் சொன்னார்

புத்திசாலி மனிதன் விழிப்புடன் இருந்து எண்ணங்களைக் கட்டுப்படுத்தினால்  அவன் துன்பங்களை உதறிவிட்டு, மேலே உள்ள ஞானம் என்னும் அரண்மனைக்குச் செல்வான். அதன் பலகணியிலிருந்து  துன்பப் படுவோரைக் காண்பான். இது குணம் என்னும் குன்று ஏறி நின்ற முனிவர்கள் மலை உச்சியிலிருந்து சமவெளியிலுள்ள அஞ்ஞானிகளைக் காண்பதற்குச் சமம்.

தம்மபதம் 28

xxx

 

இந்திரனே சான்று

வள்ளுவர் சொன்னார்,

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி (திருக்குறள் 25)

 

ஐம்புல ஆசைகளை ஒழித்த ஒருவனுக்கு எவ்வளவு ஆற்றல் உண்டு என்பதற்கு இந்திரனே சாட்சி.

((இந்தக் குறளுக்குப் பொருள் தருவதில் பரிமேல் அழகர்கூட தவறு செய்துவிட்டதை எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். அவர், இது இந்திரனைக் கிண்டல் செய்வது என்று நினைத்து விட்டார். உண்மையில் இந்திரன் புலனடக்கம் மிக்கவன். அகல்யை சம்பவம் உதாரணம் ஆகாது))

புத்தர் சொன்னார்

புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.

தம்மபதம் 30

அதர்வண வேதத்திலும் (11-5-19) இக் கருத்து உளது.

 

xxx

 

அருள் புரிக

வள்ளுவர் சொன்னார்,

 

வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்

மெலியார் மேல் செல்லும் இடத்து (திருக்குறள் 250)

 

ஒருவன் தான் பலசாலியாக இருக்கும்போது மற்றவனைத் துன்புறுத்துவது சரியல்ல. அவன், தன்னைவிட பலசாலியான ஒருவன் தன்னை இப்படித் துன்புறுத்தினால் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல் ( திருக்குறள் 318)

 

ஒருவன் தனக்குத் துன்பம் இழைக்கும்போது அதனால் ஏற்படும் கஷ்டத்தை அறிந்த மனிதன், பிற உயிர்களுக்கு துன்பம் இழைப்பது யாது கருதியோ?

புத்தர் சொன்னார்

 

பிறருடைய குற்றத்தைப் பற்றியோ, அவர்கள் என்ன செய்தார்கள் , என்ன செய்யவில்லை என்றோ எண்ணாதீர்கள். உங்களுடைய தவறுகளையும் நீங்கள் எதைச் செய்தீர்கள், எதைச் செய்யத் தவறினீர்கள் என்று சிந்தியுங்கள்

ஒருவன் தான் செய்த தீமையின் விளைவுகள் தெரியாத வரை அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான்; அது அவனுக்கு இன்பமாகத் தோன்றும். ஆனால் தீய செயல்களின் விளைவுகள் அவனுக்குத் திரும்பும்போது அவன் அதை அனுபவித்து அறிவான் தம்மபதம்-119

 

-Subaham-

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: