Written by London Swaminathan
Date: 28 May 2017
Time uploaded in London: 11-07 am
Post No. 3949
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
புத்தர் பற்றி வெள்ளைக்காரர்கள் எழுதியதை அப்படியே நம்பிவிடக்கூடாது. அவர் ஏதோ இந்து மதத்துக்கு எதிராகப் புரட்சிக்கொடி தூக்கியதாகவும் பிராமணர்களை எதிர்த்ததாகவும் வெளிநாட்டுக்காரர்கள்
எழுதியதை நம்பி இங்குள்ள திராவிட பக்தர்களும் புத்தர் படத்தை தனது வீட்டில் மாட்டி வைத்திரு ப்பர். அவர்களுக்கு புத்தர் ‘தம்ம பத’த்தில் என்ன சொன்னார் என்று தெரியாது பாவம்! அதாவது அறியாத ஜீவன்கள்; சுக்கான் உடைந்த கப்பல்கள்; வழி தெரியாமல் திணறும் அந்தகர்கள்.
என்னுடைய பல திராவிட நண்பர்கள் இன்னும் திருக்குறளையே படித்ததில்லை. படித்த பிறகு அதன் கருத்துகளை வேறு ஜீரணம் செய்யவேண்டும்; பின்னர் அதில் ஒரு திருக்குறளையவது பின்பற்ற வேண்டும்! நடக்குமா?
புத்தமதத்தினரின் வேதப் புத்தகமான தம்ம பதத்தில் 423 ஸ்லோகங்கள் உண்டு. அதில் கடைசி அத்தியாயம் ‘பிராமணர்’ என்ற தலைப்பிட்ட 26-ஆவது அத்தியாயமாகும். அதில் 41 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அதாவது அந்தப் புத்தகத்தில் பத்தில் ஒரு பகுதி. அவ்வளவு முக்கியத்துவம் பிராமணர்களுக்கு!
அசோகனும் தனது கல்வெட்டுகளில் முதலில் பிராமணர்களைக் குறிப்பிட்டுவிட்டே மற்ற வகுப்பினரைக் குறிப்பிடுவான்; அவ்வளவு பய பக்தி.
எப்படி தமிழ் வேதமான திருக்குறள் இருக்கும் வரை இந்துமதம் அழியாதோ, அப்படி தம்மபதம் உள்ளவரை இந்துமதம் அழியாது. ஏனெனில் இரண்டு நூல்களிலும் இந்துமதக் கருத்துகள் அப்படியே உள்ளன. ஆயினும் வள்ளுவனும் புத்தனும் வெறும் சடங்குகளையும், யாகத்தில் உயிர்ப் பலியையும் எதிர்த்தது உண்மையே. அவர்கள் இருவரும் உலக மக்கள் எல்லோரும் ‘வெஜிட்டேரியன்ஸ்’ – சாக பட்சிணிகள்– ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அது என்றுமே நடவாத காரியம். இது இந்துக்களுக்குத் தெரியும். ஆனால் மனிதன் உயர்நிலையை அடைய ஒவ்வொருவரும் மாமிசத்தை தவிர்த்தே ஆக வேண்டும். மாமிசமுண்ணாததால் மட்டும் உயர்நிலையை அடைந்து விடமுடியாது.
தம்மபதத்தில் பிராமணர் பற்றிய அதிகாரத்தில் யார் பிராமணன் என்று விவரிக்கிறார். அதற்கு முன்னரும் 6, 7 இடங்களில் பிராமணர் பற்றிச் சொல்கிறார்.
“ஒரு பிராமணனும் முனிவனும் கடந்த கால பாவங்களில் இருந்து விடுபட்டவர்களாவர்; அவன் தனது தந்தை தாயைக் கொன்று இருந்தாலும், இரண்டு நியாயமான அரசர்க ளைக்கொன்று இருந்தாலும். ஒரு நாட்டையே சீரழித்திருந்தாலும், மனிதர்களின் மாணிக்கம் போன்றோரைக் கொன்று இருந்தாலும் அவர்கள் தூயவர்களே (தம்மபதம் 294, 295)
ஏன் இப்படிச் சொன்னார்? ஒரு முனிவனும், ஒரு பிராமணனும் சொல், செயல், சிந்தனையில் (திரிகரண சுத்தி) ஒன்றுபட்டுவிட்டால் பின்னர் அவர்கள் பூலோக தேவர்கள் ஆவர்.
வள்ளுவனும் புத்தனும் சொன்ன எல்லா கருத்துகளும் ஏற்கனவே உள்ள கருத்துகள்தான். ஆனால் அவைகளைச் சுருக்கமாக, ஆழமாக, அழுத்தமாக, மக்கள் பேசும் மொழிகளில் (பாலி, தமிழ்) சொன்னதும் அவைகளை அவர்கள் தன் வாழ்நாளில் பின்பற்றிக் காட்டியதுமே அவர்களுடைய நூல்களை வேதங்கள் அளவுக்கு உயர்த்தின.
தம்மபத நூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அதில் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த தத்துவ அறிஞர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரையில் வரும் இரண்டு சம்பவங்களைக் காண்போம்:-
முதல் சம்பவம்
ஒரு பிராமணர் யாக யக்ஞாதிகளை முடித்துவிட்டு அவற்றின் பிரசாதத்தைக் கொண்டு வந்தார். புத்தரிடம் வந்தவுடன் அவைகள் என்னவென்று கேட்டார். அவை யாகத்தின் மிச்சம், மீதி என்று அறிந்தவுடன் புத்தர் சொன்னார்:-
“ஓய், பிராமணரே! யாகத் தீயில் குச்சிகளை (சமித்து) வைப்பதன் மூலம் நீவீர் தூய்மையாகிவிட்டதாக எண்ண வேண்டாம். இதெல்லாம் மேம்போக்கானவை. நான் என்னுள்ளே உறைந்துகிடகும் அகத் தீயை எழுப்புகிறேன். அந்த ஞானத் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். இந்த வேள்வியில் என்னுடைய நாக்குதான் யாகக் கரண்டி; என்னுடைய இருதயம்தான் (உள்ளம்தான்) யாக குண்டம்” என்றார் புத்தர்.
பிராமணர்கள் செய்த யாக யக்ஞங்கள் காலப்போக்கில் பொருளற்றுப் போய் வெறும் சடங்குகள் ஆனதால் புத்தர் இப்படிப் புகன்றார். ஆனால் புத்தருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த பிருஹத் ஆரண்யக, முண்டக உபநிஷத்துகளிலேயே இக்கருத்து உள்ளது. புத்தரோ வள்ளுவரோ புதிதாக ஒன்றும் சொல்லவில்லை
இரண்டாவது சம்பவம்
ஒருமுறை புத்தர், அம்பலதிகா என்னும் இடத்திலுள்ள பொது மண்டபத்துக்குள் வந்தார். அப்பொழுது அவர்கள், புத்தர் மீது குற்றச் சாட்டுகளை சுமத்திவிட்டு வெளியேறிய, ஒரு பிராமணன் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். புத்தர் சொன்னார்,
” என்னைப் பற்றியோ, நான் போதிக்கும் விஷயங்கள் பற்றியோ, புத்த பிட்சுக்கள் பற்றியோ யாராவது குறைகூறினால் ஏன் கோபப்படுகிறீர்கள்? இப்படிக் கோபப்பட்டால் உங்களால் ஆன்மீக முன்னேற்றம் காண முடியாது. மேலும் ஏனையோர் சொல்வது சரியா தவறா என்று பகுத்துணரும் சக்தியையும் இழந்து விடுவீர்கள்” என்று எச்சரித்தார்.
புத்தரின் வெற்றிக்கு இதுதான் காரணம். அவர் கோபப்பட்டதாக ஒரு சம்பவமும் இல்லை. மற்றவர்களைக் குறைகூறியதாகவும் ஒரு சம்பவமும் இல்லை. காலப்போக்கில் அவரது பிரதம சீடர்களாக ஆனவர்களும் பிராமணர்களே!
தான் சொல்லும் கருத்துகளை, அவர் பின்பற்றினால், பின்னர் அவருடைய உபதேசங்களுக்கு மந்திர சக்தி வந்துவிடும்.
ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகாநந்தர், ரமண மகரிஷி, காஞ்சிப் பெரியவர் ஆகிய பெரியோர் வாழ்விலிருந்து இவற்றை அறியலாம்.
–சுபம்–
R.Nanjappa (@Nanjundasarma)
/ May 28, 2017பொதுவாகவே வெள்ளைக்காரர்கள் நமது மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உண்மையை அறிய விழைவதில்லை. எப்படி , என்ன குற்றம் சொல்லலாம், எதை எப்படித் திரிக்கலாம் என்பதிலேயே அவர்கள் புத்தி செல்கிறது,
நம் நாட்டில் மதவிஷயத்தில் சரியான படிப்புக்கோ மேற்படிப்புக்கோ வழியில்லை. முன்பு ஃபிலாசபி என்றாவது இருந்தது. தற்போது அதுவும் அருகிவிட்டது.
ஆனால் அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்களில் Religious Studies/ Comparative Religion என்று கற்க வசதி இருக்கிறது. ஆனால் இதிலும் ஒரு குளறுபடி நடக்கிறது. உலகில் எல்லா மதங்களும் அந்த மத நம்பிக்கை உள்ள , அதைப் பின்பற்றும் நபர்களால் கற்பிக்கப்படுகின்றன. அந்தந்த மதத்தை [ தீவிரவாதம் தலைவிரித்தாடும் இஸ்லாம் உட்பட] நல்ல நோக்கோடு விவரிக்கும் நூல்களே பின்பற்றப்படுகின்றன.. ஆனால் ஹிந்துமதம் மட்டும் இதற்கு விலக்காக இருக்கிறது. ஹிந்துமதத்தைப் பின்பற்றாத, அதில் பிடிப்போ அபிமானமோ இல்லாத, ஆனால் ஓரளவு சம்ஸ்க்ருதம் கற்ற வெள்ளைக்காரர்கள் எழுதும் புத்தகங்களே வழக்கிலிருக்கின்றன. இந்தியாவிலும் இவையே பிரபலமடைகின்றன. “வெள்ளைக்காரன் எழுதிவிட்டான்” என்று அதுவே பிரமாணமாகிறது! அதில் இருக்கும் அபத்தங்களையும் திரிசமங்களையும் நம்மவர் அறிவதில்லை.
புத்தமதம் தனி மதமே அல்ல, அது ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவுதான் என்பதை ஆனந்த குமாரஸ்வாமி விளக்கியிருக்கிறார். நமது தற்போதைய கல்வி முறையில் இத்தகைய அறிஞர்களைப்பற்றியோ அவர்களின் கருத்துக்களையோ அறிந்து கொள்ளும் வாய்ப்பு இளைஞர்களுக்கு இல்லை. பாடதிட்டத்தை மீறி விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் 99% பேருக்கு இருப்பதில்லை. 50 வருஷங்களாக இத்தகைய கல்விமுறையே இருப்பதால் உள்ளபடி அறிந்தவர்களும் அதிகம் பேர் இல்லை.
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோருக்கு நமது சங்க இலக்கியம் தெரியாது. அதில் என்னென்ன விஷயங்கள் வருகின்றன என்பதும் தெரியாது. எதற்கும் மூலத்தைப் படித்ததில்லை. பாடத்தில் வந்த பகுதிக்குமேல் படித்ததில்லை. உரையிலும் தற்காலத்தில் வரும் மேற்போக்கான, உண்மைக்கு மாறான அல்லது உள்ளதை மறைக்கும் /திரித்துச் சொல்லும்/ குதர்க்கம் பேசும் உரைகளையே அறிவர். வலைத்தளங்களிலும் உண்மையான நிலையை பெரும்பாலோர் எழுதுவதில்லை.
இந்த உரைகளும் பொதுவில் மாணவர்களுக்குப் [ தமிழை முழுப்பாடமாகப் பயிலாத வர்களுக்குப் ] புரிவதில்லை, பலரும் உரை என்ற பெயரில் பாடலையே அன்வயப்படுத்தி விடுகிறார்கள். பிராமணர்- வேதம் பற்றி வருவனவற்றை பாடத்தில் சேர்ப்பதில்லை, உரையிலும் விளக்குவதில்லை.
திருக்குறளிலும் பிராமணர் பற்றி வரும் குறள்களை நீக்கிவிடுகின்றனர். உதாரணம்: ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் 4 வது குறள்: “மறப்பினும் ஒத்து கொளலாகும்” (134); “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்” (543); “ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல் மறப்பர்” (560) .. இந்த நிலை என்று மாறுமோ என்று தெரியவில்லை.
ஆனால், இதில் தமிழ் நாட்டை மட்டும் சொல்லிப் பயனில்லை எனத் தோன்றுகிறது. மேலை நாடுகளில் கல்வித்துறை இடதுசாரிகளின் பிடியில் வந்துவிட்டது, இதனால் பழைய இலக்கியங்கள் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிட்டன; அல்லது அவை ஒரு சில கொள்கைசார்ந்த முறையிலேயே அணுகப்படுகின்றன. [ Marxism, Freudian analysis, Feminism, deconstruction,etc ] இங்கிலாந்தில் மாணவர்களினிடையே ,
” ஷேக்ஸ்பியர் நமக்குப் புரியாத மொழியில் எழுதியிருக்கிறார்; அந்தப் பேச்சு இன்று வழக்கிலில்லை; அதை ஏன் படிக்கவேண்டும்” என்ற கருத்து நிலவியதாக சர்வேக்கள் வெளிவந்தன. இங்கும் இதுதான் நடக்கிறது. தமிழ் நாட்டில் எல்லாம் திராவிடம் என்னும் நோக்கிலேயே பார்க்கப்படுகிறது.
Theology என்னும் நோக்கிலிருந்து பார்த்தால் , புத்தர் கடவுளைப்பற்றி எதுவும் சொல்லாததால் சைவம், வைணவம் போன்ற பிரிவுகள் புத்த மதத்தை எதிர்த்தன. ஆனால் ஃபிலாசஃபி= Darshana என்ற நிலையிலிருந்து பார்த்தால் நமது உபனிஷதங்களுக்கும் புத்தர் சொன்னதற்கும் அதிக வித்தியாசமில்லை. ஆனால் புத்தர் செய்த தவறு, “அதிகாரி பேதம்” என்ற அடிப்படையை மீறி எல்லோருக்கும் ஒரேவிதமான, உயர் நிலைக்கொள்கையே போதித்தார். அதற்கேற்ற “ஆசாரம்” ( நடைமுறை ஒழுக்கக் கட்டுப்பாடு) விதிக்கவில்லை, இல்லற வாழ்விற்கேற்ற நடைமுறையைச் சொல்லாமல் துறவறத்தையே போதித்தார். இதை அதிக மக்கள் பின்பற்ற இயலாமல் போனது. இதைத் திருவள்ளுவர் நிவர்த்தி செய்தார்- இல்லறம் (ப்ரவ்ருத்தி) துறவறம் ( நிவ்ருத்தி) என்று வைத்தார். இப்படிப் பார்த்தால் புத்தர், திருவள்ளுவர் இருவரும் ஹிந்துதர்மத்துடன் பின்னிப் பிணைந்தவர்கள். இதை நன்றாகச் சொல்லிவிட்டீர்கள். உண்மையை எத்தனை நாள் மறைக்கமுடியும்?
Raghavan Narayanasamy
/ May 29, 2017Excellent essay anna
Santhanam Nagarajan
/ May 30, 2017article super comments by sri Nanjappa : Super O super