Written by S NAGARAJAN
Date: 12 June 2017
Time uploaded in London:- 6-59 am
Post No.3993
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
contact: swami_48@yahoo.com
பாக்யாவில் வெளி வரும் அறிவியல் துளிகள் தொடரில் 19-5-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
“ஆற்றல் புரட்சி” செய்யும் 13 வயதுச் சிறுவன்
ச.நாகராஜன்
“ மின்சாரம், நீர், ஏன், இசை நிகழ்ச்சி கூடத்தான் – இவை எல்லாவற்றையுமே நாம் எளிதில் கிடைப்பவையாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்குக் கிடைத்த வரங்களை எண்ணிப் பாருங்கள்” – டாமியன் மார்லே
பதிமூன்றே வயதான ஒரு சிறுவன் உலகில் ஆற்றல் புரட்சியைச் செய்கிறான் என்றால் அது விழிகளை விரிய வைக்கும் ஆச்சரியச் செய்தி தானே
அதிசயம், ஆனால் உண்மை! அமெரிக்காவில் நெவேடா பகுதியைச் சேர்ந்த மாக்ஸ் லோகன் (Max Loughan) என்ற சிறுவன் தான் பிறந்ததன் நோக்கமே உலகை “பிரகாசப்படுத்தத் தான்” என்று அடித்துச் சொல்கிறான்.
தந்தையின் பாய்லர் அறை தான் அவனது லாபரட்டரி. எப்போதும் ஒரு லாபரட்டரி கோட்டை அணிந்து வலம் வரும் இந்தச் சிறுவனுக்கு உத்வேகம் ஊட்டுவது ஐன்ஸ்டீனும் நிகோலா டெஸ்லாவும் தான்.
இன்றைய தேவை பவர் தான். இதை இலவசமாக எடுக்க முயன்றால் உலகின் சர்வ பிரச்சினைக்ளும் தீரும் என்று தீர்க்கமாகக் கூறும் லோகன் தனது இரட்டைபிறவியாகப் பிறந்த தம்பி ஜாக்கின் மீது வயர்களைச் சுற்றுகிறான்.
ஒரு காப்பி டின், கொஞ்சம் வயர்கள், இரண்டு காயில்கள், ஒரு ஸ்பூனை வைத்து அவன் உருவாக்கியது எலக்ட்ரோ மாக்னடிக் ஹார்வெஸ்டர்.
இந்தக் கருவியியை வைத்துக் கொண்டு வயர்களை வானத்தை நோக்கிக் காட்ட வானிலிருந்து ஹார்வெஸ்டர் மூலமாக ஆற்றலைப் பெறுகிறான். அதை ஏ.சி. மின்சாரத்திலிருந்து டி.சியாக மாற்ற தம்பியின் மீது சுற்றப்பட்ட வயரில் இணைக்கப்பட்ட எல்.இ.டி.பல்புகள் பளிச்சென்று எரிகின்றன.
இந்தச் சிறிய கருவியை உருவாக்க ஆன செலவு வெறும் 14 டாலர்கள் தான். இதையே பெரிய அளவில் செய்தால் ஏராளமான மின்சக்தி கிடைக்கும்.
அதாவது படிம எரிபொருளான பெட்ரோல், டீஸல் போன்றவை இல்லாமல் விண்ணிலிருந்தே இலவசமாக ஆற்றலைப் பெற முடியும். படிம எரிபொருளைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டால் வாகனங்கள் கக்கும் புகை வளி மண்டலத்தை மாசு படுத்தாது. வளி மண்டலம் சுத்தமாக இருந்தால் உலகின் இன்றைய அபாயமான ‘பூமி வெப்ப மயமாதல்” என்பது நீங்கி விடும்.
ஆக, இலவசமாக ஆற்றலைப் பெகறுவது சாத்தியம் தான் என்பதை நிரூபித்துக் காட்டிய லோனை டி.விக்கள் மொய்க்கின்றன.
பிரபல விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா 75 ஆண்டுகளுக்கு முன் வகுத்த கருத்தின் அடிப்படையில் அவர் செய்ய விழைந்த இலவச ஆற்றலைப் பெறும் உத்திக்கான கருவியை இப்போது செய்யும் லோகனைப் பாராட்டாதவரே இல்லை.
எலக்ட்ரோ மாக்னடிக் ஹார்வெஸ்டர் என்னும் கருவி எங்குமுள்ள எலக்ட்ரோ மாக்னெடிக் ஆற்றலைத் தன்னுள் பிடித்து சேமித்து வைத்துக் கொண்டு தேவையான இடத்தில் மின் சக்தியை வழங்கும்.
அபல்லோ 13 என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஒரு பரபரப்பான காட்சி வரும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் ஒரு அறை முழுவதும் நிரம்பியிருக்கும் அதி புத்திசாலிகள் முடங்கி விட்ட விண்கலத்தை எப்படி மீண்டும் இயக்கி அதில் இருக்கும் மூன்று விண்வெளி வீரர்களை எவ்வாறு மீட்பது என்பதைப் பற்றி தீவிரமாக விவாதிப்பர். அதில் ஒருவர், “நண்பர்களே, இது அனைத்துமே ஆற்றலைப் பற்றியது தான்!” (Hey Fellows, It is all about Powr) என்று முத்தாய்ப்பாகக் கூறுவார். இந்த திரைப்படத்தின் பொருள் பொதிந்த இந்தக் கூற்று பிரபலமாகி விட்டது.
ஆமாம், ஆற்றல் மயம் உலகம். ஆற்றல் இல்லையேல் உலகமே இயங்காது.
உலகின் மிகப் பெரிய விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா (Nicola Tesla – பிறப்பு 10-7-1856 மறைவு 7-1-1943)வயர்களே இல்லாமல் மின்சக்தியை உலகெங்கும் வழங்குவது குறித்து ஆழ்ந்து சிந்தித்து ஒரு காயிலை 1891ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அது நிகோலா காய்ல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் அவர் இந்த அரிய வயர்கள் இல்லாத மிவின்சக்தியைக் கண்டுபிடிக்கப் போகும் போது ஏற்பட்ட விபத்தினால் அதன் பயன்பாடு தடைப்பட்டது.
அவரது டெஸ்லா காயிலை மேம்படுத்தி உருவாக்கிப் பயன்படுத்தும் முயற்சியில் உலகின் பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்கள் ஈடுபட்டிருக்கின்றன.
இதில் வெற்றி பெற்றால் உலகின் வாழ்க்கை முறையே மாறிப் போகும். இந்த வகையில் 13 வயதுச் சிறுவன் லோகன் உத்வேகமூட்டும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துச் சாதித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று தானே!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அனலாடிகல் ஜாமட்ரியின் தந்தை என்று கூறப்படும் பிரபல விஞ்ஞானியான ரெனே டெஸ்கார்டெஸ் (1596-1650) இளமையிலேயே மேதையாக விளங்கியவர். ஆனால் அவருக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் கிடையாது. தினமும் காலையில் 11 மணிக்கு முன்னதாக அவர் நிச்சயமாக எழுந்திருக்க மாட்டார். அவர் இராணுவத்தில் பணியாற்றியபோது கூட இந்தப் பழக்கத்தைக் கைவிடவில்லை. இராணுவத்தில் அவரது உயர் அதிகாரிகளோ அல்லது அவரது பள்ளியில் அவருக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களோ இதை மாற்ற முயற்சிக்கவில்லை. அவரது காலை பழக்கம் அப்படியே தொடர்ந்து வந்தது.
பின்னால் தனது இந்தப் பழக்கத்தைப் பற்றி அவர் கூறுகையில் தனது எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தத்துவ சிந்தனைகளும் காலையில் படுக்கையில் படுத்திருக்கும்போதே தோன்றின என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த சந்தோஷகரமான காலைத் தூக்கம் 1649ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. ஸ்வீடனின் ராணியான கிறிஸ்டினா அவரைத் தனக்கு ஜாமட்ரி சொல்லித் தரும் பணியைத் தந்தார். ஆகவே அவர் ஸ்டாக்ஹோம் நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு ராணிக்கோ காலை ஐந்து மணிக்குத் தான் கணிதம் கற்க நேரம் இருந்தது. ஆகவே டெஸ்கார்டெஸ் காலையில் எழுந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
காலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற் அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவே இல்லை. அத்துடன் காலையில் இருளில் பனி படர்ந்த குளிர் காலத்தில் நடந்து ராணியின் அரண்மனைக்குத் தொடர்நது சென்று வந்ததால் அவருக்கு நிமோனியா ஜுரம் வந்தது. அதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக ஆனது.
காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் ஒரு சின்ன கெட்ட பழக்கம் ஒரு விஞ்ஞானிக்கு எமனாக அமைந்தது துரதிர்ஷ்டமே!
***