Research Article Written by London Swaminathan
Date: 13 June 2017
Time uploaded in London- 21-09
Post No. 3998
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
அஸ்வ மேத யாகத்தில் ஒரு குதிரை பலியிடப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். இதை நாம் அப்படியே எடுத்துக்கொண்டு நம்பினாலும் இதுவரை அஸ்வமேத யாகம் செய்த வரலாற்று அரசர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இதிஹாச புராண புருஷர்களையும் சேர்த்தாலும் வெள்ளைக்காரர்களும் முஸ்லீம்களும் நாள்தோறும் கொல்லும் கோடிக்கணக்கான மிருகங்களைப் பார்க்கையில் இது கால் தூசுக்கு சமம். அதுமட்டுமல்ல அவர்கள் மாடுகள், கோழிகளைச் செய்யும் சித்திரவதைப் படங்களைப் பார்த்து, அழுதுவிட்டு, வெஜிட்டேரியன்களாக மாறிய வெள்ளைக்காரச் சிறுவர்கள் ஏராளம். இவர்கள் ஏன் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது எவருக்கும் விளங்காது. நிற்க.
அஸ்வமேத யாகத்தில் 200 வெவ்வேறு வகையான உயிரினங்களை பலியிட்டதாகச் சொல்லுவர். ஆனால் வேடிக்கை என்னவென்றால் அதற்கான ஆதாரம் ஏதுமில்லை. மேலும் அந்த உயிரினங்களின் பட்டியலில் பாதிப்பெயர்களுக்கு அர்த்தமே விளங்கவில்ல!. இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம் என்று ஒரு ஊகத்தில் மொழி பெயர்த்து எழுதியுள்ளனர்.
ஆனால் அக நானுற்றுச் செய்யுள் ஒன்றில் வேள்விக் குண்ட ஆமை ஒன்று ஊர்ந்து வந்ததை ஒரு பாட்டில் காணும் போது அவர்கள் , பல உயிரினங்களை அடையாளபூர்வமாக ஒரு கம்பத்தில் கட்டிவிட்டு அவிழ்த்து விட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் யஜூர் வேதத்தில் ‘நெல்’லை மாமிசத்துக்குப் பதிலாகப் பயன்படுத்திய செய்தியும் உளது.
எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதி வெளியிட்ட யஜூர்வேதக் கதைகள் என்ற நூலில் கீழ்கண்ட கதை உளது:-
“ஆதியிலே யக்ஞம் செய்யுங்கால்
மனிதனை பலியயளிக்க தேவர்கள் நினைத்தார்கள். அவனை எண்ணியவுடன் அவனிடமிருந்த யக்ஞசாரம் சென்றுவிட்டது. உடனே ஒவ்வொரு மிருககங்களாக எல்லா மிருகங்களையும் அளிக்க எண்ணியவுடன் அவைகளிடமிருந்து யக்ஞசாரம் எல்லாம் சென்றுவிட்டன. எங்கு சென்றன என்று தேடியபோது அவை பூமியிலே சென்று மறைந்துவிட்டன. பூமியிலிருந்து எடுத்தவுடன் அது நெல் தானியமாயிற்று. இந்த நெல் தானியத்தை அளிப்பதே மிருக பலி அளிப்பது போலாகும் என்று ரிஷி ஒருவர் சொல்லியதற்கு அது எப்படியாகும்? என்று சீடன் ஒருவன் வினவினான்.
அதற்கு ரிஷி பதில் அளித்ததாவது:-
அதன் நுணுக்குகள் ரோமம் போலாகும். சலத்துடன் கலந்தால் அது மாமிசம் போலாகும். சுட்டால் அது எலும்பாகும். நெருப்பிலிருந்து எடுத்து நெய்யுடன் கலந்தால் தாது போலாகும்” (1-2-3-7-9)
இந்தக் கதையைப் பார்க்கையில் வேத காலத்திலேயே நெல் தானியத்தைப் “பலி” கொடுத்து ஒவ்வொரு பிராணியையும் பலியிட்டதாக எண்ணினர் போலும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
இதே போல புருஷமேத யக்ஞத்தில் 184 தொழில் செய்வோர் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோரை அடையாளம் கூடக் காண முடியவில்லை.
ஆயிரக்கணக்கிலுள்ள இந்து சமய நூல்களில் அரிச்சந்திரன் மகன் ஒருவனைப் பற்றி மட்டுமே புருஷ மேதம் தொடர்பான செய்தி உளது. அதிலும் கூட அவனை விஸ்வாமித்ரர் கூட்டிச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆக புருஷமேத யாகத்தில் எவரும் பலியிட்டதாக எழுத்தில் கூட இல்லை. ஆனால் உலகில் போரில் பலியிடுவோரின், பலி இடப்படுவோரின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இதைப் பறேறி வெளிநாட்டினர் எழுத நியாயமே இல்லை.
வாஜசயனேயி சம்ஹிதையில் அத்தியாயம் 36 முதல் 40 வரை பல புதுவகை யக்ஞங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இந்தப் புருஷமேதம்.
உலகில் கோண்டு (Khonds) இனப் பழங்குடி மக்கள், கெல்த் (Celt) இன மக்கள், எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், அஸ்தெக் (Aztec) நாகரீக மக்கள் எல்லோரும் உண்மையிலேயே மக்களைப் பலியிட்டதை விரிவாக எழுதி வைத்துள்ளனர். அப்படிப்பட்ட எந்த வருண னையும் நம் நாட்டிலுள்ள பல்லாயிரக் கணக்கா சமய நூல்களில் இல்லை. இது ஒரு பெரிய வித்தியாசம். இதுவே நமது கலாசாரம் பழங்காலத்தில் மற்றவர்களை விட எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தது என்பதைக் காட்டுகிறது. அஸ்வமேத யாகப் பட்டியலில் உள்ள 200-க்கும் மேலான உயிரினங்கள், புருஷ மேத யாகத்திலுள்ள 184 வகையான மனிதர்கள் — இவை எல்லாம் வெளிநாட்டுக் காரர்களுக்கு விளங்கவே இல்லை. யாகத்தில் பலியிடுவோர் பட்டியலில் குஷ்டரோகி முதலிய வியாதிக்காரர்களும் சேர்க்கப் பட்டிருப்பதால் அவர்கள் பலியிடப் படவில்லை; அவர்கள் எல்லோரும் நலம்பெற வேண்டுவதே புருஷ மேத யாகம் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். யஜூர் வேதத்தில் ஒரு அத்தியாயம் முழுதும் புருஷமேதம் பற்றி இருக்கிறது. ஆனால் எவராலும் வாயே திறக்க முடியவில்லை!
Article related to this topic:-
தித்தியம், ஆமை | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/தித்தியம்-ஆமை/
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). அகநானூற்றுப் பாடல் 361ல், வேள்விக் குண்ட ஆமை (தித்தியம் ஆமை ) பற்றி சொல்லப்படுகிறதே; …
–சுபம்—