Written by S NAGARAJAN
Date: 2 July 2017
Time uploaded in London:- 5-40 am
Post No.4044
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
16-6-2017 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
செரிங்கட்டி விதிகள்! – 2
ச.நாகராஜன்
“நல்ல காடுகளே நமக்கு அறிவை வழங்கியுள்ளன. காடுகளே நம்மை மனிதர்களாக ஆக்கியுள்ளன. இங்கிருந்து தான் நாம் வந்திருக்கிறோம். ஒருவேளை, அதனால் தானோ என்னவோ நாம் செரிங்கட்டி என்னும் இந்த இடத்தின் மீது ஒரு அரிய பாசப்பிணைப்பைக் கொண்டுள்ளோம். இது நமது இளமையின் தேசம்” – பாய்ட் நார்டன்
இரண்டாவது உலக் மகா யுத்தத்தில் ராணுவத்தில் பணியாற்றிய வால்டர் கனான் (Walter Cannon) என்ற விஞ்ஞானியே “எதிர்த்துப் போராடு அல்லது இடத்தை விட்டு ஓடு” என்ற பொருள் படும் “Fight or Flight” என்ற பொருள் பொதிந்த வாசகத்தை முதலில் உலகுக்கு அளித்தவர்.
போரில் காயம் பட்ட வீரர்கள் ஏன் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இறக்கின்றனர் என்பதை ஆராயப் புகுந்தார் அவர்.
காடுகளில் கொல்லப்படும் மிருகங்களில் காணப்படும் அதே விதமான அறிகுறிகளான அதி வேக நாடித்துடிப்பு, பிதுங்கிய விழிகள், உடல் முழுதும் வேர்வை வெள்ளம் ஆகியவற்றை இந்த ராணுவ வீரர்களிடம் அவர் கண்டார். நாடித்துடிப்பிற்குப் பதிலாக அவர்களின் இரத்த அழுத்தத்தை அவர் அளக்க ஆரம்பித்தார். அது மிக மிகக் குறைவாக இருந்தது. உடனே சோடியம் பைகார்பனேட்டை அவர்களுக்குத் தர, குறிப்பிடத் தகுந்த நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
இந்த ஆய்வுகளால் மனித உடலின் அங்கங்கள் இரட்டை விதமான நரம்பு மண்டலக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைக் கண்டார்.
ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் இப்படிப்பட்ட கட்டுப்பாடு இயற்கையின் அனைத்து இடங்களிலும் உள்ளது.
இயற்கையின் கட்டுப்பாடு என்பது சுற்றுப்புறச் சூழல் அமைப்பு, அதில் உயிர் வாழும் உயிரினங்கள் என்ற அனைத்து அம்சங்களிலும் எதிரொலிக்கிறது.
இந்த அடிப்படையை வைத்தே விஞ்ஞானிகள் செரிங்கட்டி காடுகளில் தங்கள் ஆய்வைச் செய்து ஆறு விதிகளைக் கண்டனர்.
முதல் மூன்று விதிகளைப் பார்த்தோம். இனி அடுத்த மூன்று விதிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
சிறிய மிருகங்களை பெரிய மிருகங்கள் அடித்துத் தின்பது என்பது அதன் பெரிய உடலாலும் சக்தியாலும் முடிகிறது. 1980லிருந்து 1987 முடிய சிங்கங்களும் நரி முதலிய மிருகங்களும் கொல்லப்பட்டதாலும் கடத்தப்பட்டதாலும் செரிங்கட்டியில் சிறிய மிருக வகைகள் எண்ணிக்கையில் உயர்ந்தன. இதை இடைவிடாது ஆராய்ந்த விஞ்ஞானிகள் சிங்க்ளேர் மற்றும் அவரது சகாக்கள் புதிய விதியைக் கண்டனர்.
செரிங்கட்டி விதி எண் 4
ஒரு மிருகத்தின் உடல் அளவு அந்த மிருக வகையின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான அம்சம்.
ஒரு மிருக இனத்தின் எண்ணிக்கை குறையும் போது தானாகவே அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. மிக அதிகமாகும் போது அவற்றிற்கான உணவுக்கு வழி இல்லை என்பதால் தானாகவே எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது.
சிங்க்ளேர் ஒவ்வொரு மிருக இனத்தின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதற்கு ஒப்பீட்டு வரைபடங்கள் தயாரித்து இதைக் கண்டு பிடித்தார். ஆக செரிங்கட்டியின் விதி எண் 5 உருவானது.
விதி எண் 5
மிருகங்களின் எண்ணிக்கையானது அதன் அடர்த்தியைப் பொறுத்து உள்ளது.
உணவுக்கு ஓரிடத்தில் வழி இல்லை என்னும் போது குறிப்பிட்ட மிருகங்களின் கூட்டம் இடம் விட்டு இடம் மாறுகிறது. விஞ்ஞானி சிங்க்ளேர் இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும் நான்கு லட்சம் ‘தாம்ஸன் மான்’களும் இப்படி ‘மைக்ரேஷன்’ எனப்படும் இடம் விட்டு இடம் பெயர்தலைக் கண்டு வியந்தார்.
ஆக செரிங்கெட்டியின் ஆறாவது விதி உருவானது.
விதி எண் 6
இடம் விட்டு இடம் பெயர்தலானது ஒரு மிருக வகையின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது.
டாக்டர் ஆஸ்கார் பாமன் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி 1892இல் செரிங்கட்டி காடுகளை ஆராய அதனுள் புகுந்தார்.
அன்றிலிருந்து இன்று வரை ஏராளமான சுவையான செய்திகளை செரிங்கட்டி காடுகள் மனித இனத்திற்கு தந்து வ்ருகின்றன.
அதில் இயற்கையின் இயல்பான கட்டுப்பாடு முக்கிய அம்சமாக இலங்குகிறது.
இந்த இயற்கை கட்டுப்பாட்டைப் பேணிக் காக்காமல் நமது செயற்கையான வழிமுறைகள் மூலம் இயற்கையைக் கெடுத்து விடக் கூடாது என்பது தான் விஞ்ஞானிகளின் ஒரே வேண்டுகொள்.
புவியை வெப்பமயமாக்கல், இயற்கை உயிரினங்களை பணத்திற்காக அழித்தல், கடத்துதல் போன்றவற்றை மனித இனம் விட்டு விட்டால் இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் இநதக் காடுகள் அழியாமல் வாழும்; மனித இனத்தையும் வாழ வைக்கும்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
கம்ப்யூட்டருக்கு முன்னோடியான ‘மெகானிகல் எஞ்சினை’ உருவாக்கியவ்ர் சார்லஸ் பாபேஜ் (1792-1871) பாபேஜ் பெரிய மேதை என்பதால் லண்டனில் உள்ள இலக்கிய வட்டத்தில் பெரிதும் மதிக்கப்பட்டார். அங்கு உலகின் புகழ் பெற்ற கவிஞரான ஆல்ஃப்ரட் லார்ட் டெனிஸன் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.
தனது அருமையான கவிதையான ‘தி விஷன் ஆஃப் சின்’ (The Vision of Sin) என்ற கவிதையில், “ஒவ்வொரு கணமும் ஒரு மனிதன் இறக்கின்ற தருணத்தில், இன்னொரு மனிதன் பிறக்கிறான்” (Every moment dies a man, Every moment one is born) என்ற தனது கருத்தை அழகுற கவிதை நயத்துடன் உரிய சந்தத்தில் தெரிவித்திருந்தார்.
இதைப் படித்தார் கணித மேதையான சார்லஸ் பாபேஜ். கவிதையானாலும் கணிதத்தில் கோட்டை விடலாமா? நேரடியாக அவரிடம் வந்து அந்த வரியை மாற்றச் சொன்னார்.
“ஒவ்வொரு கணமும் ஒரு மனிதன் இறக்கின்ற தருணத்தில் ஒன்றும் ஒன்றின் கீழ் ஆறும் என்ற விகிதத்தில் மனிதன் தோன்றுகிறான்” (Every moment there dies a man, And one and a sixth is born) என்பதே சரியான உண்மை என்பது அவரது வாதம்.
ஆனால் இவ்வளவு துல்லியமாக மாற்றச் சொன்னாலும் தனது வரியிலும் கூட ஒரு கணிதப் பிழை இருப்பதையும் அவரே ஒப்புக் கொண்டார். அதாவது ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும் 1.167 (என்ற விகிதத்தில் இன்னொரு) மனிதன் பிறக்கிறான் என்பதே துல்லியமான உணமையாகும்!
“ஆனால் கவிதையில் யாப்பிலக்கணம் சந்தத்திற்கான விதியைத் தந்திருக்கிறதே! அதையும் நாம் அனுசரிக்கத் தானே வேண்டும்” என்று ஒரே போடாகப் போட்டார்.
அனைவரும் டென்னிஸனுக்கும் சார்லஸ் பாபேஜுக்கும் நடந்த இந்தக் கவிதை கருத்துப் போரை வெகுவாக ரசித்துப் பாராட்டினர்!
மேதைகள் மேதைகளே!
*****