Written by London Swaminathan
Date: 6 July 2017
Time uploaded in London- 6-10 am
Post No. 4056
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
சங்கீத மேதை மஹா வைத்யநாதையர் பற்றி தமிழ் தாத்தா உ.வே.சாமிநதையர் எழுதிய புத்தகத்தில் ஒரு அரிய விஷயத்தைச் சொல்லுகிறார். ஆனால் இது பற்றி அதிகம் பிரஸ்தாபிக்காமல் ஒரே ‘பாரா’வில் விஷயத்தை முடித்துவிட்டு ஓடி விடுகிறார்.
பாண்டவ பாஷை!
இப்படி உண்மையிலேயே ஒரு பாஷை இருந்ததா? அல்லது மதுரை வணிகர்கள், அல்லது நாம் சிறு பிள்ளைகளுக்குப் புரியக் கூடாதென்பதற்காக உபயோகப் படுத்தும் ஒரு மொழி (உத்தி) யா என்று விளங்கவில்லை.
முதலில் உ.வே.சா. சொல்லுவதைப் படியுங்கள்:-
“சகோதரர்களோடு பேசுங்காலத்தில் ஏதோ ஒரு பாஷையில் அவர் (மகா வைத்யநாதையர்) பேசுவார்; அஃது இன்ன பாஷையென்று யாருக்கும் விளங்காது. ஒரு முறை நான் என்ன பாஷையென்று கேட்டேன்; அவர் இதனைப் பாண்டவ பாஷையென்று சொல்வதுண்டு. விராட நகரத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் தமக்குள் வழங்கி வந்ததைப் போன்றதென்று கேள்வி” என்றார்.
மதுரையில் வணிகர்கள், வாடிக்கையாளர்கள் பேரம் பேசுகையில், தமக்குள் சில சங்கேத சொற்களைப் பரிமாறிக்கொள்வார்கள். ‘இந்த ஆளுக்கு விலையை இவ்வளவு குறைக்கலாம் அல்லது கூட்டு என்றோ, வந்த வாடிக்கையாளர் ஒரு சாவுக் கிராக்கி; நேரத்தை வீணடிக்காதே; ஆளை புறக்கனி என்றோ சங்கேத மொழியில் பேசிக் கொள்வார்கள்.
இதே போல நாம் வீட்டில் சிறு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாதென்பதற்காக “ நான் சாக்லெட்டை அங்கே வைத்திருக்கிறேன்” என்று சொல்லாமல் ‘அசா அல் அலெ அட் அங்கே இருக்கிறது’ என்று சொல்லுவோம். சிலர் ‘அ’ என்பதற்குப் பதிலாக ‘க’ என்பதைப் பயன்படுத்துவர் ‘கசா கக் கலெ கட்’ என்பர். ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி சில உத்திகள் இருக்கும்.
இது பற்றி உவே.சா. வேறு எங்கும் சொல்லி இருக்கிறாரா என்று தெரியவில்லை. இப்படி உண்மையிலேயே வேறு ஒரு பாஷையைப் பாண்டவர்கள் விராட தேசத்தில் பேசினார்களா என்றும் தெரியவில்லை.
என்னுடைய சம்சயம் (ஐயப்பாடு)!
இப்படி பாண்டவ பாஷை என்று ஒன்று இருந்ததா? அல்லது மஹா வைத்திய நாத அய்யர் கிண்டலாக இப்படிக் பகன்றாரா? என்பதே.
வாசகர்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எழுதுங்கள்.
-சுபம்-