Written by S NAGARAJAN
Date: 6 July 2017
Time uploaded in London:- 5-20 am
Post No.4055
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
பாக்யா 30-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
ஓளி மாசைத் தடுக்க உலகில் முதன் முதலில் சட்டம் இயற்றிய நாடு!
ச.நாகராஜன்
“நான் நியூயார்க்கிற்கு வந்து 35வது மாடியில் இருந்த எனது அபார்ட்மெண்டின் ஜன்னலைத் திறந்து பார்த்த போது பனி மூட்டமும் ஒளி மாசும் சேர்ந்திருந்தது. வானத்தில் எனது நட்சத்திரத்தை என்னால் காண முடியவில்லை. ஆகவே அதை பேனாவால் என் மணிக்கட்டில் வரைந்து கொண்டேன். ஆனால் அது அழிந்து கொண்டே இருந்தது.பின்னர் பச்சை குத்தும் பார்லருக்குச் சென்று அதை பச்சை குத்திக் கொண்டேன்” – உலகில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் பிரேஜிலைச் சேர்ந்த பேரழகி சூப்பர் மாடல் ஜிஸ்லி பண்ட்சென்
*
ஓளி மாசு கூட உண்மையில் மாசு தானா? ஆம்! இயற்கை படைத்திருக்கும் அற்புதமான பிரபஞ்சத்தில் விண்ணில் மின்னும் கோடிக்கணக்கான தாரகைகளை நகரிலிருந்து பார்க்க முடியாமல் லட்சக்கணக்கானோரைத் தடுப்பது நகரில் மின்னும் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசு தான்!
இயற்கையான சூரியனின் ஒளியும் அது மறைந்த பின்னர் ஏற்படும் இருளும் பல்வேறு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.
கடல் ஆமைகளுக்கு அதிக ஓளியினால் எங்கு முட்டைகளை இடுவது என்று தெரியவில்லை; விழிக்கின்றன! ஆண் வண்டுகளுக்கோ இன விருத்திக்காக பெண் வண்டுகளுடன் கூட முடியவில்லை. இடம் விட்டு இடம் செல்லும் பறவைக் கூட்டங்களோ வழி தெரியாமல் தவிக்கின்றன.
அதிக ஒளியினால் மனிதர்களும் அவஸ்தைப் படுகின்றனர்.
செக்ஸ் உறவில் ஆர்வமே போய்விடுகிறது. அதிகச் சோர்வு ஏற்படுகிறது. ஏன். தூக்கமின்மையுட்ன சில சமயம் கான்ஸர் வியாதி கூட ஒளி மாசினால் உருவாகிறது.
இருள் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்கிறார் கின்கென்பார்க் என்னும் விஞ்ஞானி. “யாரும் இல்லாத தேசம் போல இருளைப் போக்கி ஒளி மயமாக்குவது நல்லதல்ல’ என்கிறார் அவர்.
நாளுக்கு நாள் இந்த ஒளி மாசு அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டு விழித்துக் கொண்ட முதல் நாடு செக்கோஸ்லேவேகியா தான். 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து விளக்குகளும் அது எந்த நோக்கத்திற்காக போடப்பட்டதோ அந்த இடத்திற்கு மட்டும் வெளிச்சம் தந்து இதர இடத்திற்குப் போகாதபடி பாதுகாப்பு ஷீல்டு எனப்படும் ஃபிக்ஸர்களைப் போட வேண்டும் என்று அது சட்டத்தைப் பிறப்பித்தது.
உலகில் இப்படி ஓளி மாசைத் தடுக்க முதன் முதலில் சட்டம் இயற்றிய செக்கோஸ்லேவிகியாவைத் தொடர்ந்து பல நாடுகளும் இதே போல சட்டங்களை இயற்றின.
ஆனால் 2016இல் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வின் படி உலகில் மூன்றில் ஒரு பங்கு மனித இனத்திற்கு வானத்தைப் பார்க்கவே முடியவில்லையாம். பால் வீ தி எனப்படும் மில்கி வே அவர்களுக்குத் தெரிவதே இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 99 விழுக்காடிற்கும் அதிகமான மக்கள் ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதன் முதலில் 1988ஆம் ஆண்டில் இண்டர்நேஷனல் டார்க் – ஸ்கை அசோசியேஷன் (International Dark-Sky Association) உலகின் இருளைப் பாதுகாக்கத் தோன்றியது. ஒளியுடன் இருளையும் பாதுகாக்க இது பாடுபடுகிறது!
சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தவுட்ன் உலகின் பெரு நகரங்கள் அனைத்திலும் ஒளி விளக்குகள் செயற்கை ஒளியை உமிழ்கின்றன.
இருளை நம்பி இருக்கும் தாவரங்களும் பிராணிகளும் இன்னலுக்குள்ளாகின்றன.
உண்மையில் சொல்லப் போனால் உலகமானது சூரியனின் ஒளி-இருள் ஆகிய இந்த இரு நிலைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது! சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமே பருவ கால நிலைகளைச் சரியாக ஏற்படுத்துகிறது. இயற்கையான சூரிய ஒளி இதற்கு இன்றியமையாதது. இது அதிகமாகவும் கூடாது; குறையவும் கூடாது!
ஆஸ்திரேலியாவில் மட்டும் பத்தொன்பது லட்சத்தி நாற்பதினாயிரம் தெரு விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு பத்து ஆஸ்திரேலியருக்கும் ஒரு விளக்கு! இதற்காகும் செலவு 2100 லட்சம் டாலர்கள். 115 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடை இவை வெளிப்படுத்துகின்றன.பூமியை மாசு படுத்துகின்றன!
உலகெங்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் நான்கில் ஒரு பங்கு விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் தான்! தேவையற்ற விதத்தில் விளம்பரங்களுக்கும் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரமோ மிக அதிகம். இத்தாலியைச் சேர்ந்த டெர்னா என்ற நிறுவனம் மாலையில் பகல் நேர வெளிச்சம் அதிகமாக இருந்த நேரத்தில் விளக்குகளைச் சற்று தாமதமாக எரிய விட்டதின் மூலமாக மட்டும் 6452 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சக்தியைச் சேமித்திருக்கிறது!
தேவையற்ற விதத்தில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான் இடத்தில் ஒளியைப் பரவ விடுவது, தேவைக்கு மேல் மிக அதிக அளவிலான வெளிச்சம் கொண்ட பல்புகளை எரிய விடுவது, கண்கள் கூசும் விதத்தில் விளக்குகளை எரிப்பது, மிக அதிக பல்புகளின் தொகுதிகளை ஒரே இடத்தில் எரிய விடுவது ஆகியவற்றால் ஒளி மாசு ஏற்பட்டு, அதன் மூலம் விபத்துக்கள், நோய்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் ஏற்படுகின்றன.
இவற்றைத் தவிர்க்கும் விதத்தில், உலகெங்கும் ஒளி மாசை நீக்க அனைவரும் நடவடிக்கை எடுத்தால், மின்சாரமும் சேமிக்கப்படும், பூமியும் பிழைக்கும்.
முயன்றால் வெற்றி தவிர வேறெதுவும் இல்லை!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி லூயி அகாஸிஸ் (Louis Agassiz) ஐஸ் காலம் (Ice Age) பற்றிய தனது ஆராய்ச்சியால் மிகவும் பிரபலமானவர்.அவர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நெடுங்காலம் பணியாற்றினார். அவருக்கு அரிய வகை மீன்கள் கிடைத்தால் போதும், மிகவும் சந்தோஷப்படுவார். மீனவர்கள் அனைவருக்கும் தெரியும்,புதிய அரிதான வகை மீன் கிடைத்தால் உடனடியாக் அதை அகாஸிஸிடம் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று.
ஒரு நாள் அவரது இருப்பிடம் வந்த பிரதம விருந்தினர் ஒருவர்,”இது என்ன அகாஸிஸ் மீன் கடை நடத்துகிறாரா அல்லது இது ஒரு ரெஸ்டாரண்டா?” என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். போஸ்டனில் அடிமை ஒழிப்பை ஆதரித்துப் போராட்டம் நடத்திய அமெரிக்க செனேடர் சார்லஸ் சம்னர் (Charles Sumner) க்வின்ஸி மார்கெட் என்ற சந்தையில் புதிய ரக மீன் ஒன்றைப் பார்த்தார்.அவ்வளவு தான், அதை வாங்கிக் கொண்டு ஓடோடி வந்து அகாஸிஸிடம் அதைக் காட்டி மகிழ்ந்தார்.
பாரிஸில் அகாஸிஸ் இருந்த போது நடந்த சம்பவ்ம் இது : ஒரு செல்வச் செழிப்பான சீமாட்டி அகாஸிஸிடம் வந்து,”எப்படி இப்ப்டிப்பட்ட ஒரு மேதை மீன்களை வெட்டி ஆராய்ச்சி செய்ய முடியும் என்று தான் ஆச்சரியப்படுவதாகக் கூறினார். அதற்கு அகாஸிஸ், “மேடம், குட்டி மீன்கள் நீந்தி ஓடும் ஒரு நீரோடை அருகில் என்னை வாழ விட்டால், அதை விட வேறு எதுவும் வேண்டாம் என்று அங்கேயே என் வாழ்நாள் முழுவதையும் கழிப்பேன்” என்று கூறினார்.
அகாஸிஸ் ஒரு மீன் மேன் –MAN!
***