Translated by London Swaminathan
Date: 11 July 2017
Time uploaded in London- 10-15 am
Post No. 4071
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
வேதம் என்பது சம்ஹிதை (துதிப்பாடல் பகுதி), பிராமணம் (யாகம் செய்யும் வழிமுறைகள்), ஆரண்யகம், உபநிஷத் (தத்துவ விளக்கங்கள்) நிறைந்தது.
இதில் ரஹசிய மொழியில்தான் விஷயங்களைச் சொல்லுவர். இதில் ரிஷிகளுக்குள் ஒரு போட்டி! பேரானந்தம்!
ஆங்கிலம் மட்டுமே படித்த, இந்து கலாசாரமே தெரியாத– புரியாத – அறிவிலிகள் இது பற்றி ஏராளமாகப் பிதற்றியுள்ளன. வெளிநாட்டாருடன் போட்டி போட்டுக் கொண்டு மார்கஸீய அரை வேக்காடுகளும் குட்டையைக் குழப்பியுள்ளன.
யார் சொல்லுவதை நம்பலாம்?
காஞ்சி, சிருங்கேரி சங்கராசார்யார்கள் போன்ற சந்யாசிகள் சொல்லுவதை நம்பலாம். இந்து மதத்தில் நம்பிக்கை உடையோர் சொல்லுவதை நம்பலாம்.
யார் சொல்லுவதை நம்பக் கூடாது?
ஒழுக்கங் கெட்ட, வாழ்க்கையில் சத்தியத்தை, நேர்மையைக் கடைப்பிடிக்காத அதுகளையும் இதுகளையும் நம்பக்கூடாது. வெளிநாட்டிலிருந்து வந்து வேதத்தை மொழி பெயர்த்த பல அதுகளும் இதுகளும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் மாதிரித்தான். அதாவது ஒரு சாரார் இடமிருந்து காசு வாங்கி மற்றவர்களைத் திட்டுவது,
‘ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல’ என்று வீட்டில் பேசுவது இவர்களுடைய வாடிக்கை. நிற்க. நல்ல விஷயங்களுக்கு வருவோம்.
பிராமண நூல்களில் கிடைக்கும் சில அற்புதமான மேற்கோள்களைப் பார்ப்போம்
“சமுத்ரே த்வா மதனே சாதயாமி இதி.
மனோ வை சமுத்ர:
மனஸோ வை சமுத்ராத் வாசா அ ப்ரயா தேவாஸ் த்ரயீம் வித்யாம் நிரகனன்”
“மனம் தான் கடல்;
வாக்குதான் மண்வெட்டி (கரண்டி).
தேவர்கள் அந்த மூன்று வேதங்களையும் தோண்டி எடுத்தனர்”– சதபத பிராமணம் (7-5-2-52)
நாம் தமிழில் “கடலில் மூழ்கி முத்து எடுப்போம்” வாருங்கள் -என்று பல சந்தர்ப்பங்களில் சொல்கிறோம். அந்த இடத்தில், படிப்போருக்கு நாம் அரிய விஷயங்களை ஆழ்ந்து இறங்கி கண்டு பிடிப்போம் வாருங்கள், என்பது புரியும். அதைப் போல வேதங்கள் என்பது தேவர்கள் — அல்லது அவர்களைப் போன்ற ரிஷிகள் — கண்டவை — மனக் கண்ணில் கண்டவை –என்பது தெளிவாகத் தெரியும். இதை அறியாத ஆங்கில மாக்கள் ” பாருங்கள் வேதங்கள் என்பவை பற்றி பலவிதமான கருத்துகள் இருக்கின்றன– ஆகவே அவைகளும் கவிஞர்களால் இயற்றப் ப ட்டவையே’’ என்று வாதிப்பர்.
ஆனால் நம்முடைய நூல்கள் ரிஷிகளை ‘மந்த்ர த்ருஷ்டா’ — மறை மொழிகளைக் ‘கண்டவர்கள்’ என்று சொல்லுகின்றன. ‘இயற்றியவர்கள்’ என்று எண்ணிவிடக்கூடாதே என்பதற்காக ‘அபௌருஷேயம்’ (மனிதர்களால் இயற்றப்படாதவை) என்றும் தெளிவாகச் செப்புகின்றன.
இப்போது நீங்களே தெரிந்து கொள்ளலாம். வேத வாழ்வைக் கடைப்பிடிக்காத வெளிநாட்டினர் சொல்லுவது சரியா? அல்லது நம்முடைய மூதாதையர்கள் சொல்லுவது சரியா என்று.
இங்கு அப்பர் தேவாரப் பாடலை ஒப்பிடுவது சாலப் பொருந்தும்
விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே
xxx
பிரஜாபதியின் தாடி
பிரஜாபதியின் (பிரம்மா) தாடி முடிதான் வேதங்கள்!
ப்ரஜாபதேர் வை ஏதானி ஸ்மஸ்ரூணி யத் வேத:
–தைத்ரீய பிராமணம் 3-39-1
xxx
சொற்களே வேதங்களின் தாய்!
“வாக் அக்ஷரம் ப்ரதமஜா ருதஸ்ய வேதானாம் மாதா அம்ருதஸ்ய நாபி:”
–தைத்ரீய பிராமணம் 2-8-85
“சொல் என்பது அழியாதது, முதலில் பிறந்தது, வேதங்களின் தாய், மரணமிலாப் பெருவாழ்வின் அச்சு (மூலாதாரம்)”
xxx
சரஸ்வதி
வாக், வாக் தேவி என்பதெல்லாம் சரஸ்வதியையும் குறிக்கும். சாதாரண மக்களுக்கு — பாமர மக்களுக்கு — இப்படி தத்துவ விஷயங்களைச் சொன்னால் புரியாதே என்பதற்காக பிற்காலத்தில் சரஸ்வதி முதலிய உருவங்களைப் படைத்து விளக்கினர். அதாவது எப்படி ரஹஸிய மொழி மூலம் அரிய கருத்துக்ளைத் தந்தனரோ, அதே போல சாதாரண கற்சிலை- விக்ரஹ — உருவங்கள் மூலம் அரிய– பெரிய கருத்துக்களை மனதில் பதிய வைத்தனர்.
xxx
பாகவத புராணம் சொல்லும்:
நான்முகனிடமிருந்து வேதங்கள் தோன்றின; “முன்போல எப்படி சொல் தொகுப்பை உண்டாக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு முகங்களில் இருந்து ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நான்கையும் படைத்தார். அத்தோடு யாக யக்ஞங்கள், துதிகள் ஆகியவற்றையும் உருவாக்கினார்” — பாகவதம் 3-12-34)
(விஷ்ணு புராணமும் இதைச் சொல்கிறது).
xxxx
காயத்ரியிலிருந்து உண்டானது வேதம்
ஹரிவம்சம் சொல்கிறது–
“உலகைப் படைத்த பிரம்மா, மூன்றே வரிகள் உள்ள காயத்ரீயைப் படைத்தார் – அதுதான் வேதங்களின் தாய் – அந்த காயத்ரீயில் இருந்து நான்கு வேதங்களும் உருவாயின”
(இதன் உட்பொருள்- நான்கு வேதங்களில் காணப்படும் காயத்ரீ மந்திரம் முழு வேதங்களுக்கும் சமம் ஆனவை.
xxxx
மஹாபாரதம் சாந்தி பர்வதத்திலும் ‘
“வேதானாம் மாதரம் பஸ்ய மஸ்தாம் தேவீம் சரஸ்வதீம், அதாவது, வேதங்களின் தாயான சரஸ்வதி என்னிடம் வசிக்கிறாள்” என்று சொல்லும்.
இவ்வாறு வேத, இதிஹாச, புராணம் மூலம் இழையோடும் கருத்துக்களை நாம் நுணுகி ஆராய்ந்தால் என்றுமுள – சாஸ்வதமான- சத்தியத்தையே வேதங்கள் உரைக்கின்றன என்பது தெளிவுபடும்.
—சுபம்–