சத்ரபதி சிவாஜி: சத்ய சாயிபாபா அருளுரை! (Post No.4097)

Written by S NAGARAJAN

 

Date: 20 July 2017

 

Time uploaded in London:- 5-51 am

 

 

Post No.4097

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

பெரியோரின் ஆசி

சத்ரபதி சிவாஜியின் நமஸ்காரம்!-ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!

ச.நாகராஜன்

 

 

ஸ்ரீ சத்ய சாயிபாபா 24-7-2002 அன்று நிகழ்த்திய குரு பூர்ணிமா உரை குறிப்பிடத்தகுந்த ஒன்று.

 

அதில் அணு ரகசியத்தை விளக்கிய கணாதரைப் பற்றிய அனைத்தையும் விவரிக்கிறார்.

 

அந்த உரையில் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு அருமையான சம்பவத்தை எடுத்துரைக்கிறார்.

ஒருமுறை சத்ரபதி சிவாஜி மஹாராஜாவும் அவரது மந்திரியும் மாலை நேரத்தில் உலா சென்று கொண்டிருந்தனர்.  அப்போது எதிரில் ஒரு புத்த துறவி வந்து கொண்டிருந்தார். சிவாஜி தனது மகுடத்தைக் கழட்டி விட்டு அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். மந்திரிக்கோ இது பிடிக்கவில்லை.

 

ஒரு சாதாரண துறவியின் பாதங்களில் மாமன்னனான சாம்ராட் சிவாஜி அடி பணிந்து வணங்குவதா? அவர் மனம் இதை ஏற்கவில்லை.

 

மந்திரியின் மன ஓட்டத்தை சிவாஜி ஒரு கணத்தில் புரிந்து கொண்டார். மந்திரிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

 

சிவாஜி மனித குலத்திற்கே எடுத்துக்காட்டாக தர்ம வழியில் நின்றவர்; தனது சகலத்தையும் தியாகம் செய்தவர்.

 

ஒரு நாள் தனது மந்திரியை சிவாஜி அழைத்தார். உடனடியாக ஒரு வெள்ளாட்டின் தலை, ஒரு செம்மறி ஆட்டின் தலை, ஒரு மனிதனின் தலை ஆகிய மூன்றையும் கொண்டு வருமாறு உத்தரவு பிறப்பித்தார்.

 

மந்திரிக்கு வெள்ளாட்டின் தலையையும் செம்மறி ஆட்டின் தலையையும் கொண்டு வருவதில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை.

 

ஆனால் மனிதனின் தலை?!!!

சுடுகாட்டிற்குச் சென்று அங்கு ஒரு சவமாக இருந்த மனிதனின் தலையை வெட்டி அதைக் கொண்டு வந்தார்.

மந்திரி கொண்டு வந்த மூன்று தலைகளையும் சிவாஜி பார்த்தார். உடனடியாக சந்தைக்குக் கொண்டு சென்று அவற்றை விற்குமாறு மந்திரியிடம் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

 

வெள்ளாட்டின் தலை மற்றும் செம்மறி ஆட்டின் தலை ஆகிய இரண்டையும் மந்திரியால் உடனடியாக விற்க முடிந்தது.

ஆனால் மனிதனின் தலை? அதை யாரும் வாங்க முன்வரவில்லை.

 

இரண்டு நாட்கள் மந்திரி முயன்று பார்த்தார், ஊஹூம், பயனில்லை.

 

யாரும் அதை வாங்க முன் வராத நிலையில் சத்ரபதியிடம் சென்று தன் இயலாமையை மந்திரி கூறினார்.

 

உடனே சிவாஜி, “ மந்திரி அவர்களே! பார்த்தீர்களா?  ஒரு துறவியின் பாதங்களில் என் சிரத்தை வைத்து வணங்கிய போது நீங்கள் வெகுவாக வருத்தப்பட்டீர்கள். உடலை விட்டு உயிர் பிரிந்த போது செத்த மனிதனின் தலைக்கு என்ன நேர்கிறது என்பதை நீங்கள் பார்த்து விட்டீர்கள். அதை நிலை தான் ஒவ்வொருவனுக்கும் நேரும். அதற்கு மதிப்பே இருக்காது. ஆகவே உயிருடன் இருக்கும் போது மிகப் பெரும் ஆத்மாக்களின் முன்னர் பணிந்து வணங்கி நம்மை நாம் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். புரிகிறதா?” என்றார்.

 

தர்ம நெறி வாழ்வும் சத்தியமுமே மனிதனுடன் எப்போதும் கூட வந்து அவனைக் காப்பாற்றும்.

 

மந்திரி இதைப் புரிந்து கொண்டார்.

தனது உரையின் இறுதியில் மீண்டும் சிவாஜியைக் குறிப்பிட்ட பாபா, துரியோதனனையும் எடுத்துக் காட்டாகக் கூறினார்.

துரியோதனனின் கடைசி விநாடிகளில் அவன் கூறினான்: “ நான் உயிருட்ன இருந்த வரை மிகவும் மரியாதையுடன் மதிக்கப்பட்டேன். நாளை இந்த உடல் காக்கைகளுக்கும் நரிகளுக்கும் தான் விருந்தாக ஆகப் போகிறது”

இதை உணர்ந்து தர்ம நெறியுடன் வாழ வேண்டும் என்றார் பாபா.

அருளாளர்கள் அனைவருமே பெரியோரைப் பணிந்து அவர்கள் ஆசியைப் பெறுதல் வேண்டு என்பதைத் தங்கள் வாழ்வில் வற்புறுத்தி வந்துள்ளனர்.

 

சத்ரபதி சிவாஜி துகாராம் மஹராஜைப் பார்த்து அவருடனேயே தங்கி விடுவதாகச் சொன்ன போது, “வேண்டாம். ஸ்வராஜ்யமே உனது பணி. அதை அடை” என்று அருளினார்.

சமர்த்த ராமதாஸரோ அவரது குருவாக ஒவ்வொரு விஷயத்திலும் சிவாஜிக்கு அருள் பாலித்தார்.

‘உனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்’ என்று ஆசீர்வதித்த ஸ்ரீ சமர்த்த ராமதாஸர், “நான் உன அருகிலேயே உள்ள பாலிக் கோட்டையில் தான் தங்கியுள்ளேன்” என்று அருளினார்.

அதன் பின் பாலிக் கோட்டைக்கு சஜ்ஜன் கர் – “ஆன்றோர் உறைவிடம்” எனப் பெயர் சூட்டப்பட்டது.

பெரியோரைப் பணிவது எவ்வளவு பயனைத் தரும் என்பதை சத்யசாயி பாபா சத்ரபதி சிவாஜியைச் சுட்டிக் காட்டிக் கூறியது எவ்வளவு பொருள் பொதிந்தது!

***

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: