கம்பன் தீந்தமிழ் உண்டு கர சிரக்கம்பம் செய்வோம் வாரீர்!! (Post No.4103)

Written by S NAGARAJAN

 

Date: 22 July 2017

 

Time uploaded in London:- 5-28 am

 

 

Post No.4103

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

கம்பன் கவி இன்பம்

 

‘கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! மற்றும் ‘சொல் கண்டார் சொல்லே கண்டார்; ஞான எல் கண்டார் எல்லே கண்டார் ஆகிய கட்டுரைகளைத் தொடர்ந்து வரும் கட்டுரை இது.

 

பல அன்பர்கள் திரு கே.என். சிவராஜபிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை எங்கு கிடைக்கும் என்று கேட்டுள்ளனர்.

 

இந்த நூலை ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் முடிவில் மதுரையைச் சேர்ந்த சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர் திரு சொ.சொ.மீ சுந்தரம் எனக்குக் கொடுத்தார். உடனே அதை ‘படி எடுத்துக் கொண்டு அவரிடம் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அவரோ இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அன்புடன் கூறினார். ஆனால் கடந்த நாற்பதுக்கும் மேலான வருடங்களில் பல இட மாற்றங்கள்; பல புத்தகங்கள் பலரிடம் சென்று விட்டன. ஆகவே இந்தப் புத்தகம் என்னிடம் இல்லை; ஆனால் எழுதி வைத்த கைப்பிரதி இருக்கிறது. அதை அப்படியே தருகிறேன்.

 

கம்பன் தீந்தமிழ் உண்டு கர சிரக்கம்பம் செய்வோம் வாரீர்!!

ச.நாகராஜன்

 

அற்புத கம்ப ரசிகரரும் கவிஞருமான கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயணக் கவுத்துவ மணிமாலையின் புகழைத் தனியே எடுத்துச் சொல்ல வேண்டாம். பாடல்களை ஒரு முறை படித்தாலேயே போதும் அதன் பெருமை தானாகவே புரியும்.

 

இரண்டாவது பாடலாக மலரும் பாடல் இது:

 

 

தேவ பாஷையில் இக்கதை செய்தவன்

யாவனோ அவன் பாவெனும் ஆவிநின்

றேவில் ராமன் தமிழ்க்கதை யாறெழுத்

தோவில் தெக்கணம் எங்கும் உலாயதே

 

 

   வடமொழியில் இந்த ராமகதையை இயற்றிய பெரும் புலவனாம், வான்மீகி முனிவனுடைய கவி என்னும் தடாகத்திநின்றும் உற்பத்தியாகி, கூரிய அம்போடு கோதண்டம் என்னும் வில்லைத் தரித்த ஸ்ரீ ராமனுடைய தமிழ்க்கதையாகிய ஆறு அழிதலில்லாத தென் தேசமாகிய தமிழ் நாடெங்கும் பரவிப் பாயா நின்றது.

 

மூன்றாம் பாடல்:

 

கம்பம் வேய்ந்த குடில்வைகு வார்மணிக்

கம்பம் வாய்ந்த பொன் மாளிகை கண்டவா

கம்பன் தீந்தமிழ் உண்டு கரசிரக்

கம்பம் செய்து கவிஞர் களிப்பரால்

 

(புல்லிய) கம்புகளினால் தெற்றப்பட்ட குடிசைகளில் இதுவரையும் வசித்து வந்த தமிழ்க் கவிஞர் மாணிக்கத் தூண்களால் தாங்கப் பெறும் பொன் மாளிகை ஒன்றினுட் புகுவாராகில் அவர் எத்துணை மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைவார்களோ அத்துணை மகிழ்ச்சியும் ஆச்சரியமும் கம்பனுடைய இனிய தமிழ்ப் பாவைப் பருகுவதனால் அடைந்து அவ்வுணர்ச்சிகளைத் தம் தலை அசைத்தலாலும் கை கொட்டலினாலும் வெளியிட்டு உலகத்தார் அறிந்து கொள்ளும்படி செய்வர்.

 

காமர் பூவுதிர் எனத் தொடங்கும் நான்காம் பாடல் ஏற்கனவே முந்தைய கட்டுரையில் வழங்கப்பட்டது.

ஐந்தாம் பாடல்:-

 

வான யாறு மடுத்த ப்ரவாகமோ?

கான யாறெனும் கங்கை திரண்டதோ?

தேனினால் நனி சிந்துறும் சிந்தென்ப

தேன்?இரா தமுதத்தும் இதன் சுவை!

 

(அன்றி இக்கம்ப ராமாயணத்தை) ஆகாசகங்கை பொங்கி வழிந்த ஒரு பெரு வெள்ளத்தோடு ஒப்பிடுவேனோ? அன்றி, அடவி வழி ஊடுருவிச் செல்லும் கங்கா நதியின் திரண்ட ஜலப்பெருக்கோடு ஒப்பிடுவேனோ? (தேனினுமினிய) தேவாமிர்தத்திலும் இதனுடைய இனிமை இல்லாதிருக்கும் பொழுது தேன் கூண்டுகள் இனிய தேனைச் சிந்தப் பெருகின ஒரு தேன் கடலோடு ஒப்பிடுவது பயன் தராத உவமையாம்.

 

கவிஞர் சிவராஜ பிள்ளை எப்படியெல்லாமோ முயன்று பார்க்கிறார்.

 

ஆகாய கங்கையின் பொங்கி வழியும் ப்ரவாகமா?

தேன் கடலா?  திவ்விய அமுதா?

எதைச் சொன்னாலும் அது சரியான உவமை ஆகாது.

 

    உணர்ச்சி பொங்க வார்த்தை வராது தோற்கும் நிலையில் கண்களில் நீர் வர, தலையை அசைக்க, கையைத் தட்ட – இதைப் பார்க்கும் அன்பர்கள் கம்பனின் பெருமையைத் தானே உணர வேண்டியது தான்!

 

அற்புத ரசிகக் கவிஞர் சிவராஜ பிள்ளையின் இதர பாடல்களையும் இனி  சுவைத்து மகிழ்வோம்.

****

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: