Written by London Swaminathan
Date: 22 July 2017
Time uploaded in London- 11-00 am
Post No. 4104
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ஒரு பாட்டுக்கு எனக்கு முழு அர்த்தம் விளங்கவில்லை. இது நீதி வெண்பாவில் உள்ளது. அந்த நூலை யார் எழுதினார்கள் அல்லது தொகுத்தார்கள் என்பது தமிழ் கூறு நல்லுலகிற்குத் தெரியாது. கால வெள்ளத்தில் மறைந்துவிட்டது. நாம் மிகவும் போற்றும் மூன்று பெண்களை எமனென்று வருணிக்கிறது இந்தப் பாடல்! ஓரளவுக்கு அர்த்தம் விளங்குகிறது!
முதலில் பாடலைப் படித்துவிட்டு விவாதிப்போம்:-
என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேதத்திற் சானகியே – பின்யுகத்திற்
கூடுந்திரௌபதையே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனாமே
பொருள்:-
கிரேதத்து- கிரேதா யுகத்தில்
இரேணுகையே – இரேணுகை என்பவளே
கூற்றுவன் ஆம் – யமன் ஆகும்
திரேதத்தில் – திரேதா யுகத்தில்
தன் நேர்- தனக்குத் தானே ஒப்பாகிய (வேறு எவரையும் உவமை சொல்ல முடியாத)
சானகியே – சீதை என்பவளே
கூற்றுவனாம் – யமன் ஆகும்
பின் யுகத்தில் – அதற்கடுத்த துவாபர யுகத்தில்
கூடும் – வந்த
திரௌபதியே – திரௌபதையே
கூற்றாம் – யமன் ஆகும்
கலியுகத்தில் – இப்பொழுது நடக்கும் கலி யுகத்தில் என்றாலோ
வீடுதொறும் – ஒவ்வொரு வீட்டில் இருக்கும் (ஒவ்வொரு பெண்ணும்)
கூற்றுவனாம் ஆம் – யமன் ஆகும்
என்னே – இஃது என்ன ஆச்சரியம்!
மொத்தத்தில் கருத்து என்னவென்றால் பெண்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காமல் அடக்க ஒடுக்கமாக வாழவேண்டும். முன் யுகத்தில் இருந்ததைவிட இப்பொழுது பெண்கள் மிகவும் கெட்டுப் போய்விட்டார்கள் என்பதே.
அது எப்படி?
ரேணுகா – பரசுராமன் கதை பலருக்கும் தெரிந்ததே. ரேணுகாவுக்கு காமம் தொ டர்பான தீய எண்ணங்கள் வரவே அவரது கணவர் ஜமதக்னி ரேணுகாவைக் கொல்ல உத்தரவு இடுகிறார். உடனே பரசுராமன் அதைச் செய்கிறார். அதைப் பாராட்டி ஜமத்னி முனிவர் ஒரு வரம் தருகிறார். தன்னுடைய அம்மா ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். ரேணுகா மீண்டும் உயிர் பெறுகிறாள்.
இதில் ரேணுகா செய்த தவற்றால் ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஆனால் எல்லாம் சுபமாக முடிகிறது. பரசுராமர் க்ஷத்ரியர்கள் மீது கோபம் கொண்டு 21 தலைமுறையை அழித்ததற்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை.
சீதை, ஒரு மாய மானுக்காக ஆசைப்பட்டதால் ராவணன் கடத்துகிறான். இலங்கையே அழிகிறது. பிறகு சீதையைப் பற்றி ஒரு சலவைத் தொழிலாளி சந்தேகம் கிளப்பவே அவள் பூமாதேவியிடம் திரும்பிச் செல்கிறாள். இங்கு சீதை செய்த தவறு எல்லாப் பெண்களையும் போல தங்கத்துக்கு (பொன் மான்) ஆசைப்பட்டது. அதாவது அது பொன் மான் இல்லை என்று கணவன் தெளிவு படுத்தியும் அடம்பிடித்ததால் வந்த வினை.
மூன்றாவது, திரவுபதி சிரித்ததால் வந்த வினை. ரத்தினக் கல் போல இழைக்கப்பட்ட தரையைத் தண்ணீர் என்று நினைத்து துரியோதனன் தனது பட்டாடையைத் தூக்கவே பலகணியில் இருந்து அதைப் பார்த்த திரவுபதி ‘களுக்’ என்று சிரித்துவிட்டாள்; பெண்களுக்கான அடக்கம் அவளுக்கு அப்போது இல்லை.
இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்க, வேறு ஒரு சந்தர்ப்பத்தில், அவளுடைய ஆடையை அவிழ்க்க உத்தரவிட்டான். அவள், உடனே சபதம் செய்து, மஹா பாரதப் போருக்குப் பின்னால், துரியோதனன் ரத்தத்தை முடியில் தடவி பழி தீர்த்துக்கொண்டாள். இது பெண்ணின் நகைப்பினால் வந்த வினை.
கலியுகத்தில் ஒவ்வொரு பெண்ணும் இப்படித் தவறு செய்யக்கூடும் என்பதால் புலவர் எச்சரிக்கிறார் போலும்.
இன்று டெலிவிஷன்களில் வரும் சீரியல்களிலும் அப்படித்தானே பெண்களைக் (நீலாம்பரிகளாக) காட்டுகிறார்கள்.
புலவர் பெருமான் காரணம் சொல்லாவிடிலும் மூன்று கதைகளையும் நாமாகத் தொடர்புபடுத்தி விளக்கம் காண முடிகிறது.
வேறு ஏதேனும் பொருள் தெரிந்தால் நீங்களும் சொல்லலாம்.
TAGS:- யமன், பெண்கள்,ரேணுகா, சீதை, திரௌபதி, யுகம்
-சுபம்–
R.Nanjappa (@Nanjundasarma)
/ July 22, 2017ஹிந்து மதத்தில் பெண்களுக்கு உயர்ந்த இடம் தந்திருக்கிறார்கள். உயர்ந்த பொருளுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். காலணியை வீட்டிற்கு வெளியே கழற்றி வைப்போம்; வைர நகையை அனாவசியமாக வெளியில் , அனைவரிடமும் காட்டமாட்டோம். உயர்ந்த பேனாவை அனைவருக்கும் எழுதக் கொடுக்க மாட்டோம். பெண்களின் உயர்ந்த இடத்தைக் கருதி, அவர்களுக்கு எல்லா நிலைகளிலும்- குழந்தை, மணமான நிலை, தாய்மை நிலை- பாதுகாப்பு வேண்டும் என்றார் மநு. இதை இன்று தவறாக விளக்கம் செய்து தடுமாறுகிறார்கள்.
வீடு பெண்களால் அமைகிறது, வாழ்கிறது. A hundred men may make an encampment, it takes a woman to make a home என்று சொல்கிறோம். ஆனால் இன்றைய பெண்கள் குடும்ப வாழ்க்கையை- பொறுப்பை- வெறுக்கிறார்கள். பெண்களுக்கு உரிமை என்று தொடங்கி, ஆண்களுக்குச் சமம் என்பதில் நின்றிருக்கிறது! ஆனால் பௌதிக நிலையில் உள்ள வேற்றுமைகளை எப்படிச் சமன் படுத்த முடியும்? How can biological differences or functions be obliterated ? இந்த வேற்றுமையே அவர்களுக்கு வினையாக இருக்கிறது! உலகெங்கிலும் இந்த நிலைதான்! இதற்கு பாதுகாப்பு இல்லை!
இன்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரேவிதமான படிப்பு, பணி என்று வந்துவிட்டது. இதில் பெண்மையின் இயற்கையான இயல்புகள் பாதிக்கப்படுகின்றன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் இன்று நகைப்பார்கள்.
பெண்களுக்கு கல்வி தேவை- ஆனால் எந்தவிதமான கல்வி ? பல விஷயங்களைப் பேசிய விவேகானந்தர், பெண்கள் கல்வி பற்றி பேச மறுத்துவிட்டார்- அவர்கள் கல்வியை அவர்களே தீர்மானிக்கட்டும் என்றார். ஆனால் இன்று அவர்கள் கல்வியை யாரோ தீர்மானிக்கிறார்கள்! இன்னும் சொன்னால், அவர்கள் நடை உடை பாவனைகளையே ஆண்கள் தான் நிச்சயிக்கிறார்கள். பெண்கள் அழகுப்போட்டி ஆண்கள் நடத்தும் கூத்து தானே! ஆண்கள் பற்றிய விளம்பரத்திலும்- ஷேவிங் கிரீம். பிளேடு, உள்ளாடை- பெண்களைத் தானே காட்டுகிறார்கள்! பெண்கள் வியாபாரப் பொருள்களாகிவிட்டார்கள்! பெண்கள் உரிமை, சமத்துவம் என்ற பெயரில் இது கோலாகலமாக நடக்கிறது. பெண்கள் புரிந்துகொள்ளவில்லை!
படித்த பெண்கள் மாமியார்-மாமனாருடன் சேர்ந்து இருப்பதில்லை. குடும்பம் சார்ந்த வாழ்க்கைமுறையே நசித்து வருகிறது. சேவை மனப்பான்மை போய், வேலை மனப்பான்மை வந்துவிட்டது! வேலைக்குப் போவதால், ஆயா வைத்து குழந்தை வளர்க்கிறார்கள். ஆக இன்று படித்த பெண்கள் குடும்ப வாழ்க்கைக்கு எமனாக இருக்கிறார்கள்.! இதனால் சமுதாய அமைப்பே கெடும் நிலை தோன்றியிருக்கிறது. மேலை நாடுகளில் கண்கூடாகப் பார்க்கிறோம்: teen age pregnancy, unwed mothers, single parent family, rising divorce rates, problems of senior citizens, birth rates falling below sustainable levels, marital infidelity, promiscuity- all signs of societal degeneration.
சக்தி கூத்தாடத் தொடங்கி கட்டுக்கடங்காமல் போனதும், சிவனே களத்திற்கு வந்து தானும் ஆடியே சக்தியை அடக்கினார் எனப் புராணத்தில் படிக்கிறோம். இதன் உள்ளர்த்தத்தை நினைத்துப் பார்க்கவேண்டும். ஆணும் பெண்ணும் Complemantary, not identically equal. சக்திக்கு வேலி தேவை! இதையே சிவன் சக்தி சேர்ந்த வடிவம் காட்டுகிறது. இதை ஸ்ரீ ரமணர் ஒரு பாட்டில் சொன்னார்:
அசலனே ஆயினும் அச்சவை தன்னில்
அசலையாம் அம்மையெதிராடும்- அசல
வுருவில் அச்சக்தி யொடுங்கிட ஓங்கும்
அருணா சலமென் றறி.
இன்னும் சொல்லலாம்- பொல்லாப்பு வரும். பாகவதத்தில் இல்லாததையா நாம் சொல்ல முடியும்? பெண்களே ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.