Written by S NAGARAJAN
Date: 24 July 2017
Time uploaded in London:- 5-58 am
Post No.4109
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
பாக்யா 14-7-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
சந்திரனை எட்ட எத்தனை காளைகளின் வால்கள் வேண்டும்?
ச.நாகராஜன்
‘ஆயிரக்கணக்கான மேதைகள் பிறருக்குத் தெரியாமலேயே வாழ்கின்றனர்; இறக்கின்றனர்!’ – மார்க் ட்வெய்ன்
காலம் தோறும் இள வயதில் மகா மேதைகளாக விளங்கியோர் ஏராளம் உண்டு. இந்த மேதைகளில் சிறு வயதிலேயே அபாரமாக கணக்குகளை மின்னல் வேகத்தில் செய்தோரும் ஏராளம் உண்டு.
அவர்களில் குறிப்பிடத் தகுந்த ஒரு இள வயது மேதை ஜார்ஜ் பார்க்கர் பிட்டர் (George Parker Bidder) (பிறப்பு :13-6-1806; மறைவு 20-9-1878)
இங்கிலாந்தில் மாரிடன் ஹாம்ஸ்டெட்டில் தேவன்ஷைரில் 1806ஆம் ஆண்டு பிறந்தார் பிட்டர். ஆறாம் வயதிலேயே நூறு வரை எண்ணுவதற்கு அவருக்குத் தெரிந்தது.
ஏழு வயதாகும் போது அவரது அண்டை வீட்டார் இருவருக்கு இடையே ஒரு தகராறு எழுந்தது.ஏதோ ஒரு பொருளை வாங்கும் போது அதன் சரியான விலையைக் குறித்துத் தான் தகராறு. இருவர் கூறுவதும் தவறு என்று கூறிய பிட்டர் சரியான விலையைத் தானே கூறி தகராறைத் தீர்த்து வைத்தார். அனைவரும் வியந்தனர்.
அவருக்கு ஒன்பது வயதான போது அவரது தந்தைக்கு அவரது அரிய கணிதத் திறமை தெரிய வந்தது. அதை ஊரெங்கும் காட்டினால் நல்ல பணம் சம்பாதிக்க முடியும் என்று அவர் எண்ணினார்.
விளைவு – அவரை பல ஊர்களுக்கும் அழைத்துச் சென்று அவரது கணிதத் திறமையை அரங்கங்களில் நிகழ்த்த ஆரம்பித்தார். நல்ல வருமானமும் வந்தது.
அவரது திறமையைப் பார்த்த பல அறிஞர்களும் நலம்விரும்பிகளும் அவரை எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்த்தனர். சிவில் எஞ்சினியரிங் படிப்பில் சேர்ந்தார். பெரும் புகழும் பெற்றார்.
நாளடைவில் மிகப் பெரும் எண்களின் வர்க்க மூலம், கன மூலம் (Square root and Cube root) ஆகியவற்றை பிட்டர் சொல்லி பார்வையாளர்களை அசத்தினார்.
பென்சிலோ பேப்பரோ இல்லாமல் 1815இலிருந்து 1819 முடிய அவர் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பெரும் புத்தக அளவில் வெளியிட வேண்டியிருக்கும்.
சில சுவையான கேள்விகளையும் அதற்கு அவர் அளித்த பதில்களையும் இங்கு காணலாம்:
பூமியிலிருந்து சந்திரன் 1,23,256 மைல் தூரத்தில் இருக்கும் நிலையில், ஒரு நிமிடத்திற்கு நான்கு மைல்கள் என்ற வேகத்தில் ஒலி அலைகள் பயணப்பட்டால் அது எப்போது சந்திரனைச் சேரும்?
ஒரு நிமிடத்திற்குள் ஒன்பது வயதுச் சிறுவனான பிட்டர் இதற்கு அளித்த விடை: 21 நாட்கள் 9 மணி 34 நிமிடங்கள்.
பத்து வயதான போது பிட்டரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி:
11,1111 ஸ்டர்லிங் பவுண்டிற்கு 5 சதவிகித வட்டியை 11,111 நாட்களுக்குக் கணக்கிட்டுச் சொல்.
ஒரு நிமிடத்திற்குள் சொல்லப்பட்ட விடை : 16911 ஸ்டர்லிங் பவுண்டுகளும் 11 சென்ட்டுகளும்
ஒரு வண்டியினுடைய சக்கரத்தின் சுற்றளவு ஐந்து அடி பத்து அங்குலம். எண்பது கோடி மைல்கள் அந்த வண்டி போனால் அந்தச் சக்கரம் எத்தனை முறை சுழலும்?
50 விநாடிகளில் சொல்லப்பட்ட விடை: 724114285704 முறை சுழலும். பாக்கி இருபது அங்குலம் இருக்கும்.
119550669121 என்ற எண்ணின் வர்க்கமூலம் என்ன?
30 விநாடிகளில் சொல்லப்பட்ட விடை: 345761
அடுத்த ஒரு கஷ்டமான கேள்வியை பிரபல வானியல் ஆராய்ச்சியாளரான சர் வில்லியம் ஹெர்ஷல் கேட்டார்.
கேள்வி இது தான்: சூரியனிலிருந்து ஒளியானது பூமியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகிறது. சூரியன் 98,000,000 மைல் தூரத்தில் உள்ளது. பூமிக்கு அருகில் நிலையாக உள்ள ஒரு நட்சத்திரத்திலிருந்து ஒளியானது ஆறு வருடம் நான்கு மாதம் பயணப்பட்டால் அந்த நட்சத்திரம் பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் ஆறு மணி நேரம்; ஒரு மாதத்திற்கு 28 நாட்கள் என்ற அடிப்படையில் இந்த விடையைத் தர வேண்டும்.
உடனடியாகத் தரப்பட்ட விடை: 40,643,740,000,000 மைல்கள் தூரத்தில் அந்த நட்சத்திரம் உள்ளது.
சர் வில்லியம் ஹெர்ஷல் இந்த விடையைக் கேட்டு பிரமித்துப் போனார்!
இது போன்ற வித விதமான ஏராளமான கேள்விகளை அறிவியல் அறிஞர்களும், சாமானியர்களும் மனம் போனபடி கேட்க ஆரம்பித்தனர். விடை உடனே சொல்லப்பட்டது என்றாலும், அதை சரி பார்க்க கேள்வி கேட்டவர்களுக்கு நெடு நேரம் ஆனது.
ஆனால் ஒவ்வொரு முறையும் விடை சரியாக இருக்கவே பிட்டரின் புகழ் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது.
ஆனால் மனதிற்குத் தோன்றியபடி கேள்விகள் கேட்பதை யாரும் நிறுத்தவே இல்லை.
1818ஆம் ஆண்டு அவருக்கு 12 வயது ஆகியிருந்த போது ஒரு முறை ஒருவர் மிகவும் இடக்காக, “சந்திரனை எட்டி அடைவதற்கு எத்தனை காளைகளின் வால்கள் வேண்டும்?” என்று கேட்டார்.
சிரித்துக் கொண்டே பிட்டர்,” போதுமான நீளம் இருந்தால் ஒரு காளையின் வாலே போதுமே” என்று பதில் கூறினார். அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.
பிட்டரின் அண்ணன்களும் நினைவாற்றலில் மேதைகளே. ஒருவருக்கு பைபிள் முழுவதும் மனப்பாடம் இன்னொருவரோ, ஒரு முறை தீவிபத்தில் எரிந்து போன பெரிய புத்தகம் ஒன்றை தன் நினைவாற்றலின் மூலமாக அப்படியே எழுத்துக்கு எழுத்து எழுதி விட்டார். ஆனால் ஆறு மாத காலத்தில் அவர் இதை எழுதிய பின்னர் மூளைக் காய்ச்சல் வந்து அவர் இறந்து போனார்.
பிட்டரின் மூத்த மகன் ஒரு பிரபலமான வக்கீலாகத் திகழ்ந்தார். அவரும் கூட 15 இலக்கம் கொண்ட ஒரு எண்ணை இன்னொரு 15 இலக்க எண்ணால் பெருக்கச் சொன்னால் உடனே விடை தருவார்.
பிட்டர் தன்னால் எப்படி இந்தக் கணித வித்தையைச் செய்ய முடிகிறது என்பதை விவரமாக கட்டுரைகள் மூலம் தெரிவித்திருக்கிறார்.
எந்த கணக்கையும் அவர் செய்யும் போது அது அவருக்கு அப்படியே காட்சி ரூபமாகத் தெரிகிறதாம்! இதைத் தவிர பேப்பர் பேனா வைத்து எழுதிப் பார்க்கும் எந்த முறையையும் நான் கையாண்டதே இல்லை; அந்த முறைகள் எனக்குத் தெரியாது” என்று இப்படி அவர் தன் இரகசியத்தைச் சொல்லி இருக்கிறார்.
கணிதத்தை மின்னல் வேகத்தில் செய்து உலகினரை பிரமிக்க வைத்த மேதைகளில் பிட்டருக்குச் சிறப்பான தனி இடம் தரப்படுகிறது.
அறிவியல் அறிஞர் வாழ்வில்
பிரபல விஞ்ஞானியான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் ஒரு முறை சிகாகோவிற்குச் சென்றிருந்தார். விஞ்ஞானப் படிப்பு படிக்கும் சில மாணவர்கள் தங்களின் சோதனைகள் சிலவற்றை வந்து பார்க்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர்.ஐன்ஸ்டீன் அதற்கு இணங்கி அந்த மாணவர்களின் சோதனைகளைப் பார்க்கப் போனார்.
அந்த சோதனைகளில் ஒன்றிற்கு ஐன்ஸ்டீன் சில யோசனைகளைச் சொல்லி அதைச் சிறிது மாற்றி இன்னொரு விதத்தில் செய்யலாம் என்று கூறினார்.
முடியவே முடியாது என்று ஆவேசமாகக் கூறினார் அந்த சோதனையை செய்து வரும் மாணவர்.
ஏன் ஐன்ஸ்டீனின் யோசனையை நடைமுறைப் படுத்த முடியாது என்று மூன்று நிமிடங்களில் ஒரு குட்டிச் சொற்பொழிவையே அவர் ஆற்றி விட்டார்.
அதை மௌனமாகக் கேட்ட ஐன்ஸ்டீன்”என்னுடைய யோசனைகள் என்றுமே உருப்படியானவையாக இருந்ததில்லை” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே சொன்னார்.
மேதைக்கு வந்த சோதனை – சோதனையைப் பார்க்கப் போய்!
தேவையா இது அவருக்கு! அவர் நொந்து போய் பெருமூச்சு விட்டது சரி தானே!
xxx subham xxx
R.Nanjappa (@Nanjundasarma)
/ July 24, 2017பிட்டர் ஒரு அரிய உண்மையை விளக்கியிருக்கிறார். கணிதம் மட்டும் அல்ல- எந்தத் துறையிலும் நாம் ‘மனக் கண்ணாலேயே’ உயரிய உண்மையைக் காட்சியாகக் காண்கிறோம். ஒரு சிறந்த சிற்பி சிலையைச் செதுக்குமுன் அதைத் தன் மனக்கண்ணால் பார்க்கிறான். ‘கல்லில் சிலை இருக்கிறது; வேண்டாத பகுதிகளை மட்டும் செதுக்கி எறிந்தேன்’ என்றார் மைக்கேல் ஏஞ்சலோ! இது நாம் பொதுவாக ‘கற்பனை’ என்று சொல்வதைவிட அதீதமானது! அமெரிக்காவில் புகழ்பெற்றிருந்த Edgar Cayce, Jeane Dixon போன்ற மனோவியல் மேதைகள் (Psychics) இப்படி கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் காட்சியாகவே கண்டார்கள்! அக் காட்சிகளை சொல்லில் வடிக்கும்போது தவறு நேர்ந்ததுண்டு! பல விஞ்ஞானிகள் இத்தகைய காட்சிகளைக் கன்டிருக்கிறார்கள். ஐன்ஸ்டீனே தன் ரிலேடிவிடி கொள்கையை இவ்விதமாகத்தான் கண்டேன் என்று சொல்லியிருக்கிறார். [ ” I very rarely think in words at all. A thought comes and i may try to express it words afterwards.”] நமது ராமானுஜம் கனவில் கண்டார்!
இவ்வளவு சொல்வானேன்! நமது ரிஷிகள் வேத மந்திரங்களை காட்சியாகத்தானே “கண்டார்கள்”= drishta. “திறவோர் காட்சியிற் தெளிந்தனம்” என்கிறார் கணியன் பூங்குன்றனார்!
மனக்கண்ணத்தவிர, சில ஞானிகள் ஊனக்கண்ணாலேயே நமக்குப்புலப்படாததைக் கண்டார்கள். ஆரணிக்கருகில் விடோபா ஸ்வாமிகள் சமாதியடைந்ததை ” அதோ விடோபா போகிறான் பார் ” என்று திருவண்ணாமலையில் வானைக் காட்டிச் சொன்னாராம் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்!
இன்னும் பூனைக்கும், நாய்க்கும், பசுவுக்கும் மனித கண்களுக்குப் புலப்படாத காட்சிகள் தெரியும் என்கிறார்கள்!
Santhanam Nagarajan
/ July 24, 2017THANKS FOR THE ADDITIONAL VALUABLE
POINTS!