உடனே தூக்கம் வரும் அதிசயம்! (Post No.4123)

Written  by S NAGARAJAN

 

Date: 3 August 2017

 

Time uploaded in London:- 16-28

 

 

Post No.4123

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

நாட்டு நடப்பு – உண்மை நிகழ்ச்சி!

 

உடனே தூக்கம் வரும் அதிசயம்! அறியத் துடித்த ஒரு அமெரிக்கரின் சுய சரித்திரம்!

ச.நாகராஜன்

 

 

அது அந்தக் காலம்!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஏதோ ஒரு வருடம், ஏதோ ஒரு நாள்.

 

அப்போதெல்லாம் மதுரையில் உள்ள தெய்வ நெறிக் கழகத்தில் காலையிலும் மாலையிலும் விவேகானந்தர் பற்றிய சொற்பொழிவுகளை ஆற்றுவது எனது வழக்கம்.

தெய்வநெறிக் கழகத்தின் சார்பில் சமயஜோதி என்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. அத்ற்கான அலுவலகம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய சந்தில் இருந்தது.

ஒரு நாள் அங்கு சென்ற நான் அங்கு ஒரு அமெரிக்கர் உட்கார்ந்திருத்தைப் பார்த்தேன். வயதில் இளைஞர். ஆனால் அரையில் காவித் துணி ஆடை!

 

ஆழ்ந்த யோசனை.

 

பேசுவதாகக் காணோம்.

 

அவரிடம் பேச்சுக் கொடுக்க எனக்கு ஆசை.

எங்கிருந்து வருகிறீர்கள்?

 

எப்படி தெய்வநெறிக் கழகத்திற்கு வந்தீர்கள்?

இந்தியா பிடித்திருக்கிறதா?

இந்தியாவைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

ஊஹூம்.. எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

அலுத்துப் போன நான், “அமைதியாக இருக்கிறீர்களே! உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் அதை நான் மற்றவர்களுக்கும் சொல்வேனே” என்று சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்ப யத்தனித்தேன்.

 

அவர் என்னைப் பார்த்து உட்காரச் சொன்னார். ஆங்கிலத்தில்  பேசலானார்.

“நான் யாரிடமும் பேசுவதில்லை. உண்மை தான்! எனது கதையைக் கேட்க விருப்பமா?”

“ஆமாமாம்” என்று பலமாகத் தலையாட்டினேன்.

 

*

அவர் அமெரிக்காவின் மிகச் சிறந்த பணக்காரர்களில் ஒருவரின் மகனாம்.

தொலைக்காட்சி வராத அந்தக் காலத்தில் உலகமே சினிமா மயம். சினிமாவிற்கு அடிமை மயம்.

சிறு பையனாக இருந்த அவருக்கு ஏழ்மை, பசி போன்ற எதுவும் தெரியாதாம்.

 

தெரிந்தது இரண்டே இரண்டு.

 

ஒன்று சினிமா பார்ப்பது.

இன்னொன்று ஊர் சுத்துவது. ஜாலியாக டூர் போகப் பிடிக்கும். புதிய இடங்கள்,புதிய மக்களைப் பார்க்கலாம்…. நன்கு செலவழிக்க முடியும். காசுக்குப் பஞ்சமில்லை.

ஆனால் இந்த சினிமா பார்ப்பது ஒரு போதைப் பழக்கமாக மாறி இரவு பகல் அதில் கழிய ஆரம்பித்து பல பக்க விளைவுகள் ஏற்படலாயின.

 

 

உறக்கம் போயிற்று. சிந்திக்கும் ஆற்றல் போயிற்று. படிப்பதிலும் ஆர்வம் போயிற்று.

யாராலும் திருத்த முடியாத கேஸ்!

 

மருத்துவம் போன்ற எதனாலும் திருத்த முடியாத கேஸ்!

தந்தை நொந்து போனார்; வருத்தப்பட்டார். என்ன செய்வது?

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

 

 

“சினிமா பார்ப்பதை நிறுத்த உனக்கு ஒரு வழி இருக்கிறது. ஊர் ஊராகச் சுற்றிப் பாரேன். உன்னை விட மாறுபட்ட மக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்கள் வாழ்க்கை முறையைப் பாரேன்” என்று யோசனை கூறினார் தந்தை.

“டூர் போ” என்பதைப் பிடித்துக் கொண்டான் பையன்.

உலக வரைபடத்தில் (அவனது நல்ல காலமாக) தேர்ந்தடுத்த இடம் – இந்தியா!

 

இந்தியாவில் அவனுக்குப் பணம் தரும் ஏற்பாடுகளைத் தந்தை செய்து முடித்தார்.கேட்கும் போது பணம் வரும். எங்கும் போகலாம்.

காசியில் கங்கை நதிக் கரையோரம் போன பையனுக்கு எதிலும் ஆச்சரியம்; எங்கும் ஆச்சரியம்.

ஊர் உராகச் சுற்றியதால் சினிமா நினைவே வரவில்லை.

ஒரு நாள் ஒரு கிராமத்தில் வயக்காட்டின் வழியே அவன் சென்று கொண்டிருந்த போது ஆனந்தமான ஜிலுஜிலு காற்று. அருகே ஒரு தென்னந்தோப்பு.

 

 

அதில் ஒரு ஏழைக் குடியானவன் மண்கலத்தில் மனைவி கொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு மனைவிக்கு விடை கொடுத்து விட்டு ஒரு துண்டை உதறி தென்னை மரத்தின் அடியில் போட்டுப் படுத்தான்.

ஒரே ஒரு கணம்; ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான் அந்தக் குடியானவன்.

 

 

இதைப் பார்த்த நம் அமெரிக்க இளைஞனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

எப்படி ஒரு கணத்தில் தூக்கம் வரும்.

 

 

தான் நல்லபடியாகத் தூங்கிப் பல வருடங்கள் ஆயிற்றே. கஷ்டப்பட்டு உடல் அயர்ந்தாலும் உறக்கம் வராதே!

அங்கேயே தென்னை மரத்தின் அருகில் உட்கார்ந்த இளைஞன் அந்தக் குடியானவன் எழுந்தவுடன் ஆவலுடன் அவனை விசாரித்த கேள்வி: “எப்படி இவ்வளவு சீக்கிரம் உ’றங்க முடிகிறது?”

 

 

மொழிபெயர்ப்பாளர் மூலம் அவனுக்கு கிடைத்த பதில்” இதில் என்ன ஆச்சரியம். எங்கள் வாழ்க்கை முறை எளிது. எங்கள் கிராமத்தில் ஏன் எங்கள் தேசத்தில் நூற்றுக்கு நூறு பேரும் படுத்தவுடன் உறங்கி விடுவோம்.இது ஆச்சரியப்படும் விஷயம் இல்லை. அன்றாடம் நடக்கும் சாதாரண விஷயம் இது!”

அமெரிக்க இளைஞனுக்கு அந்தச் சாதாரண வார்த்தைகள் வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்கின.

 

 

எளிய வாழ்க்கை முறை!  அது என்ன எளிய வாழ்க்கை முறை? இந்திய வாழ்க்கை முறை!

 

அதை ஆராயப் புகுந்தான் அந்த இளைஞன். நேர்மையும் எளிமையும் இணைந்த வாழ்க்கை முறை வாழ்வதற்கு இனிதானது என்பதை அறிந்தான்.

 

விளைவு: இன்று நான் கண்ட இ:ளைஞனாக ஆகி இருக்கிறான்!

ஹிந்து வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது. கல்மிஷமற்றது. ஆரவாரமற்றது. மிகவும் நேர்மையானது.

வேலையைக் கவனி; பலனைப் பற்றி அதிகமாக யோசிக்காதே

எல்லாம் வரும்; தேவையானது தேவைப்படும் நேரத்தில் தானாக வரும்.

 

 

வழக்கமாக அடிக்கடிப் பணம் கேட்கும் தன் பையன் பணமே கேட்காததைப் பற்றி பதறிப் போனார் தந்தை.

‘உடனே வரவா’ என்று தந்தி அடித்தார்.

“வேண்டாம்” என்ற மகன், “இங்கு புதிய பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். பணமே வேண்டாம். மாறியவனாக வருகிறேன்” என்று பதில் தந்தி அடித்தான்.

*

 

“அந்த இளைஞன் தான் நான்”

தன் கதையை முடித்தார் அமெரிக்கர்.

நேரம் ஓடியிருந்தது. நான் வியந்து போனேன்.

எந்த ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு வாழும் சாமானிய மக்கள் அதிக ஆரவாரமின்றி அன்புடனும் பண்புடனும் வாழ்ந்து வருவதை நேரில் கண்டிருக்கிறேன் நான் – சத்திய சாயி சேவா தளப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது!

 

 

ஹிந்து வாழ்க்கை முறையின் அடிப்படை எளிமை; எளிமை; எளிமை! நேர்மை, நேர்மை, நேர்மை!

சிறு நகரங்களிலும் கூடப் பெண்கள் மாலையில் கோவிலுக்குச் செல்வது விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், பஜனைப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் ஆகியவற்றைச் சொல்வது என்றிருந்தனர்.

*

ஆனால் இன்றோ.. மாறி விட்ட பரபரப்பான வாழ்க்கை முறையில் முதலில் அடிப்பட்டிருப்பது – எளிமை தான்!

கோவில்களில் கூட ஒரு வணிக முறையிலான பரபரப்பு!

எல்லோருக்கும் எல்லாவற்றின் மீதும் எப்போதும் ஆசை!

இலவசங்களைக் காட்டி ஏமாற்றும் அரசியல்வாதிகள்!

 

 

கிராமம் தோறும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் மொபைலும் மோட்டார் சைக்கிளும் காலத்தையும் தூரத்தையும் சுருக்கி விட்டன. அது போலவே அவர்கள் மனத்தையும் சுருக்கி விட்டன. விசாலமான மனம் எங்கே போனது?

 

 

கையில் சிறிது பணம் சம்பாதிக்கும் தகுதி வந்தவுடன் பெண்களின் “தோரணையே’ மாறி உறவுகள் அடிபடும் நிலை.

எல்லா ஜாதிகளிலும் தான்! எல்லா நகரங்களிலும் தான்!

பண்பாட்டின் அடிப்படை உருவான பெண்களே இப்படி என்றால் ஆண்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

*

 

 

அமெரிக்க இளைஞனைக் கண்டு ஐம்பது ஆண்டுகள் ஓடி விட்டன. பெங்களூரில் சி.வி.ராமன் நகரில் பள்ளியிலிருந்து வரும் பேரக் குழந்தையை அழைத்து வரும் கால கட்டம். ஒரு பதினைந்து நிமிடங்கள் பஸ்ஸுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும்.

 

நான் நிற்கும் இடத்திற்கு எதிரில் ஒரு அழகிய இளம் பெண். 25 வயது இருக்கும். ஜீன்ஸ் பேண்ட். ஸ்லீவ்லெஸ் ஷர்ட். வாயில் ஒரு சிகரட். சுழல் சுழலாக டிசைன் டிசைனாக புகையை ஊதி வானத்தில் விடுவதில் அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆனந்தம். நான் அதிர்ந்து போனேன்.

 

எனது பார்வையை அலட்சியமாக எதிர் நோக்கிய பெண் இன்னொரு சிகரட்டை பற்ற வைத்தாள்.

 

நாளடைவில் எனக்கு இந்தக் காட்சி பழக்கமானது. அந்தப் பெண்ணுக்காக பிராத்தனை தான் என்னால் செய்ய முடிந்தது. அருகில் அவளது ஆண் நண்பர்கள் நாலைந்து பேர் ஆளுக்கு ஒரு சிகரட் கொடுத்து உதவுவார்கள். நல்ல உதவி!

 

 

இது சாதாரணம் என்று சொன்ன எனது அண்டை வீட்டார் பெங்களூரில் ஒரு குறிப்பிட்ட தெருவில் எப்போது போனாலும் ஏராளமான பெண்கள் புகை பிடிப்பதைக் காணலாம் என்றனர்.

காலம் மாறுகிறது.

 

எது முன்னேற்றம்! உலகளவில் சுருங்கியதோடு மனதளவிலும் சுருங்கி உடல் அளவிலும் சுருங்கி ஈசல் போல மின்மினி போலச் செத்தொழிவதா!

 

அல்லது அமெரிக்க இளைஞன் பார்த்த நேர்மையாகவும் எளிமையாகவும் வாழும் குடியானவன் போல வாழ்ந்து மகிழ்வதா?

 

*

‘வாழ்க்கை முறை காலத்திற்குக் காலம் மாறும், சார்!’ என்பர் சிலர்.

சரி தான்!

 

வேக யுகம். பரபரப்பான வாழ்வு. எல்லாமே அர்ஜெண்ட், வெரி அர்ஜெண்ட், வெரி வெரி அர்ஜேண்ட் தான்.

ஆர்டினரியே இன்று கிடையாது.

 

இன்று சினிமாவுடன் தொலைக்காட்சி சீரியல்கள் வேறு.

ஒரே நாளில் பரபரப்பான சீன்களாக, கடத்தல், கற்பழிப்பு, கொலை,கொள்ளை, விஷம் வைத்தல் இத்யாதி காட்சிகளை தொலைக்காட்சி சேனல்கள் ஒலிபரப்புகின்றன. அவற்றைக் கண்டு கண்டு கண்டு…..

 

வாழ்க்கை முறை மாறி வரும் சூழ்நிலையில் அந்த அமெரிக்க இளைஞர் போல நாமும் “உறக்கம் எப்படி உடனே வருகிறது” என்ற அதிசயத்தைக் கேட்டு அதைக் கற்க வேண்டிய நாள் விரைவில் நெருங்கி வருமோ?!

—- Subham —-

Leave a comment

3 Comments

 1. ஆயிரக்கணக்கான தன் குடிமக்கள் ஆழ்ந்து உறங்க, அரசனான தனக்கு மட்டும் தூக்கம் வரவில்லையே என்று ஷேக்ஸ்பியரில் ஹென்றி அரசன் புலம்பியது நினைவுக்கு வருகிறது!

  How many thousand of my poorest subjects
  Are at this hour asleep! O sleep, O gentle sleep,
  Nature’s soft nurse, how have I frighted thee,
  That thou no more wilt weigh my eyelids down
  And steep my senses in forgetfulness?

  O thou dull god, why liest thou with the vile
  In loathsome beds and leavest the kingly couch
  A watch-case or a common ‘larum bell?

  Canst thou, O partial sleep, give thy repose
  To the wet sea-boy in an hour so rude,
  And, in the calmest and most stillest night,
  With all appliances and means to boot,
  Deny it to a king? Then, happy low, lie down.
  Uneasy lies the head that wears a crown.

  ஏதோ குற்றம் செய்தவனுக்கு, அக்குற்ற உணர்வே தூக்கத்தைப் போக்கிவிடுகிறது ! இதையும் மாக்பெத் வாயிலாக ஷேக்ஸ்பியர் சொல்கிறார்:

  Methought I heard a voice cry, “Sleep no more!
  Macbeth does murder sleep”—the innocent sleep,
  Sleep that knits up the raveled sleave of care,
  The death of each day’s life, sore labor’s bath,
  Balm of hurt minds, great nature’s second course,
  Chief nourisher in life’s feast.

  இங்கு நான்கு வரிகளில் தூக்கத்தின் மஹிமையைச் சொல்கிறார்!
  நாம் அரசர்கள் இல்லை ஆனாலும் நவீன ” appliances and means” க்கு அடிமையாகிவிட்டோம்! நாம் தூக்கத்தைப் ‘பிடிக்க’ வேண்டியிருக்கிறது!

 2. அருமை அருமை நல்ல கருத்திற்குப் கவிதை வரிகள்! Hats off to Sri Nanjappa!வேறென்ன சொல்ல முடியும்? ச.நாகராஜன்

 3. அருமை அருமை!! கருத்திற்குப் பொருத்தமான கவிதை வரிகள்!! Hats off to Sri Nanjappa!வேறென்ன சொல்ல முடியும்? ச.நாகராஜன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: